அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
எம்.பி.க்கள் மீது கூறப்படும் நன்னடத்தைக்கு மாறான நடவடிக்கைகள் குறித்த புகார்களை விசாரிக்கும் மக்களவையின் நெறிகள் குழுவின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி. அவரது இந்த நியமனம் குறித்த செய்தியை ஊடகங்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அந்த அளவுக்கு கட்சியில் ஓரம்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு கிடக்கிறார் அத்வானி. அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியின் முக்கியத்துவமும் அந்த அளவுக்குதான் இருக்கிறது. பிரதமர் பதவிக்கான லட்சிய கனவோடு அரசியலில் வலம் வந்து, பா.ஜனதாவும் இன்றைய பிரதமர் மோடியும் மத்தியில் ஆட்சியில் அமர பெரும் காரணமாக இருந்து ஒரு அரசியல் சகாப்தமாக திகழ்ந்தவர் அவர். ஆனால் அரசியலில் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் போனால் என்ன நடக்கும் என்பதற்கும், வளர்த்த கடா மார்பில் பாய்வது என்றால் என்ன என்பதற்கும் வாழும் உதாரணமாக திகழ்கிறார்கள் அத்வானியும், மோடியும்.
பா.ஜனதாவுக்கு முன்னோடியான ஜன்சங் காலத்து மூத்த தலைவர்களில், ஏறக்குறைய அனைவருமே அரசியலில் இருந்து காணாமல் போய்விட்ட நிலையில், அத்வானியின் நிலைமை அந்த அளவுக்கு போகாமல் இந்த மக்களவையின் நெறிகள் குழுவின் தலைவர் பதவியாவது அவருக்கு எஞ்சியுள்ளதற்கு, மோடியின் அடிமனதில் தங்கியிருக்கும் நன்றிக்கடன்தான் காரணமாக இருக்க வேண்டும். ஆம். மோடியின் தொடக்க கால அரசியல் வாழ்க்கையில் அவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டு, கட்சியிலும் பதவிகளை வாங்கிக்கொடுத்து, குஜராத் கலவரத்தை தொடர்ந்து முதல்வர் பதவியை இழக்க வேண்டிய நெருக்கடிக்கு மோடி தள்ளப்பட்டபோது, அவருக்கு அரணாக இருந்து அத்வானி மட்டும் காப்பாற்றி இருக்காவிட்டால், மோடியால் இன்று பிரதமர் பதவி வரைக்கும் வளர்ந்திருக்க முடியாது.

ஆர்எஸ்எஸ்- சின் அரசியல் முகமாக 1957 -ம் ஆண்டு ஜன்சங் உருவெடுத்தபோது, வாஜ்பாய், அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி போன்ற பா.ஜனதா ஆளுமைகளாக இருந்தவர்கள்தான், அதன் முக்கிய தலைவர்களாக அப்போது இருந்தார்கள். இதில் வாஜ்பாய்தான் ஜன்சங் சார்பில் நாடாளுமன்றத்துக்கு சென்ற முதல் எம்.பி. இந்நிலையில் எமர்ஜென்சியை தொடர்ந்து நடைபெற்ற 1977 நாடாளுமன்ற தேர்தலில், அப்போதைய இந்திய தேசிய காங்கிரசையும் இந்திரா காந்தியையும் மண்ண கவ்வ வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் ஓ, பாரதிய லோக்தள் மற்றும் சோஷியலிஸ்ட் கட்சி போன்ற இடது, வலது சாரி மற்றும் மத்திய நிலை கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஜனதா கட்சியில் ஜன்சங் கட்சி இணைந்தது. ஆனால் 1980 ல் ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, ஜன்சங்கத்தை சேர்ந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய கட்சிதான் இப்போது மத்தியில் இரண்டாவது முறையாக ஆளும் கட்சியாக வீற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி.

இந்த அதிகார பீடத்தை முதலில் கைப்பற்ற பா.ஜனதாவுக்கு 18 ஆண்டுகள் பிடித்தது. அதற்கு வித்திட்டது அத்வானியின் அயோத்தி ரத யாத்திரை என்பதை அக்கட்சியினரே மறுக்கமாட்டார்கள். ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து பாரதிய ஜனதா உருவானபோது அதன் தலைவராக வாஜ்பாயும் பொதுச் செயலாளராக அத்வானியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் இன்னொரு சுவராஸ்யம் என்னவெனில் 'காந்திய சோஷலிசத்தையே தங்களது அரசியல் சித்தாந்தமாக அறிவித்தது அக்கட்சி. இது தொடர்பாக அத்வானி தனது சுயசரிதையான' My country, My Life' புத்தகத்தில், " பா.ஜனதா கட்சியை தொடங்கியவுடன் ஏற்பட்ட அழுத்தங்கள், எங்களது பழைய ஜன்சங் காலத்தியது போன்றல்லாமல் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்குவதாக இருந்தது" என்று குறிப்பிடுகிறார். ஆம், இந்திய அரசியலில் அப்போது பாரதிய ஜனதா கட்சி ஒரு புதிய தொடக்கமாகத்தான் பார்க்கப்பட்டது. ஏனெனில் அத்வானி, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெய்பிரகாஷ் நாராயணனின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதால்தான், அவர்கள் 'காந்திய சோஷலிசத்தை தங்களது கட்சியின் சித்தாந்தமாக அறிவித்தனர். ஆனால் தற்போதைய பா.ஜனதாவினரிடத்தில் இதை சொன்னால் அவர்களுக்கே அது மிகப்பெரிய ஜோக்காத்தான் இருக்கும்.


ஜன்சங்கத்தில் அத்வானி, வாஜ்பாய்....

அதே சமயம் அப்போது, அதாவது 1980 ல் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த சோஷலிச சித்தாந்தம் அரசியலில் வெற்றியை தேடித்தரவில்லை. மாறாக இந்திராகாந்தி, ஜன்சங்கத்தின் 'இந்துத்துவா' செயல்திட்டங்களை சுவீகரித்துக்கொண்டுவிட்டார். 1980 ல் இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தம்மை எதிர்த்தவர்களை பழிவாங்கும் எண்ணத்துடன், ஒரு தீவிர இந்துவாதியாக தம்மை காட்டிக்கொண்டு, உற்சாகமாக கோயில் கோயிலாக செல்லத் தொடங்கினார். இதனால், 'ஒரு இந்து பெண் கடவுள்களின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக கோயில்களுக்கு செல்கிறார்' என்ற எண்ணம் பொதுமக்கள் மனதில் ஏற்பட்டது. அத்துடன் அவரது ஆட்சியின் கொள்கைகளும் இந்துத்துவத்திற்கு ஆதரவானதாகவே அர்த்தம்கொள்ளப்பட்டது.

அத்வானியால் ஏற்பட்ட திருப்பு முனை

அதே கதைதான் 1984 டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் நடந்தது. அப்போதும் 'காந்திய சோஷலிசம்' பா.ஜனதாவுக்கு கைகொடுக்கவில்லை. பிரதமராக இருந்த இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற இந்த தேர்தலில், பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த இடங்கள் இரண்டே இரண்டுதான். இதனையடுத்துதான் பா.ஜனதா தனது அரசியல் கொள்கைகளையும் பாதைகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்த தொடங்கியது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அக்கமிட்டி, பா.ஜனதா செயல்படும் விதத்தில் நிறைய இடைவெளிகள் இருப்பதை சுட்டிக்காட்டியது. மேலும் கட்சித் தொண்டர்களுக்கு அரசியல், பொருளாதாரம், கொள்கைகள் போன்றவை குறித்து போதிய பயிற்சியோ அல்லது புரிதலோ இல்லை என்றும், பா.ஜனதா நாட்டு மக்களிடம் சென்றடையவே இல்லை என்றும் அக்கமிட்டி தெரிவித்தது. இதனையடுத்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து வாஜ்பாய் ராஜினாமா செய்ய, அத்வானி பா.ஜனதா தலைவரானார். இங்குதான் பா.ஜனதாவின் அரசியல் பாதை திருப்பு முனையை சந்தித்தது.

அத்வானி, பா.ஜனதா தலைவர் பதவியில் அமர்ந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ்-சின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வளரத்தொடங்கி இருந்தது. இது அத்வானிக்கு கூடுதல் பலமாக அமைய, அடுத்தடுத்த ஆண்டுகளில் அக்கட்சி மெல்ல மெல்ல காந்திய சோஷலிச பாதையிலிருந்து விலகி, அதன் பழைய மற்றும் பிரதான கொள்கையான இந்துத்துவாவை நோக்கி திரும்பியது.

அதன்பின்னர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என, 1990 ம் ஆண்டு அத்வானி கையிலெடுத்த 'ரதயாத்திரை அரசியல்'தான் பா.ஜனதாவின் கிடுகிடு வளர்ச்சிக்கு வித்திட்டது. குஜராத் மாநிலத்தின் சோம்நாத்திலிருந்து உத்தரபிரதேசத்தின் அயோத்தி நோக்கி அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரைக்கு வடமாநிலங்களில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கூடவே தென்மாநிலங்களிலும் பா.ஜனதா என்ற ஒரு கட்சி இருப்பதை மக்களிடம் நினைவுபடுத்திச் சென்றது அத்வானியின் ரதயாத்திரை.

இந்நிலையில் 1990 ம் ஆண்டு அக்டோபர் 24 ம் தேதியன்று, அவரது யாத்திரை உத்தரபிரதேசத்துக்குள் நுழைய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அங்கு நுழையும் முன்னரே, பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அத்வானியும் கைது செய்யப்பட்டு, அரசு பங்களாவில் சிறைவைக்கப்பட்டார். இது அத்வானி எதிர்பார்த்ததுதான். அவரை பொறுத்தவரை இந்த ரத யாத்திரை மிகப்பெரிய வெற்றி. இந்துத்துவ உணர்வுகள் தூண்டப்பட்டு, பா.ஜனதாவுக்கு ஆதரவான வாக்கு வங்கி உருவானது. இதனையடுத்து இன்னும் தீவிரமான இந்துத்துவ கொள்கையை பா.ஜனதா பின்பற்ற வேண்டும் என அத்வானி திட்டமிட்டதோடு, தனது ரதயாத்திரையை தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சியை கட்சியின் வளர்ச்சிக்கு சரியாக பயன்படுத்த தொடங்கினார். இதனால் 1989 ல் மக்களவையில் பா.ஜனதாவுக்கு 85 உறுப்பினர்கள் இருந்த நிலையில், 1991 ல் அதுவே 120 ஆக அதிகரிக்க வழிவகுத்தது. அதே சமயம் பா.ஜனதாவின் செல்வாக்கு அதிகரிக்க எந்த இந்துத்துவ அரசியல் சாதகமான அம்சமாக இருந்ததோ, அதுவே ஆட்சியைப் பிடிப்பதற்கான அனைத்து தரப்பு மக்கள் ஆதரவை திரட்டுவதற்கு பாதகமாக அமைந்தது.தம் மீது தீவிர இந்துத்துவவாதி என்ற முத்திரை விழுந்ததையும், இந்துத்துவாவை முன்னிறுத்தினால் அதிகபட்சம் 120 இடங்கள் வரை கைப்பற்ற முடியுமே தவிர, ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்கள் கிடைக்காது என்பதையும், கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிப்பது சாத்தியம் என்பதையும் அத்வானி வெகு சீக்கிரமே உணர்ந்துகொண்டார். ஆனால் மதவாதத்தை முன்னிறுத்துவதாக சிவசேனா உள்ளிட்ட ஓரிரு கட்சிகளை தவிர வேறு எந்த கட்சிகளும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. அதனை தீண்டத்தகாத கட்சியாகவே பார்த்தன. இதனையடுத்துதான் 'மிதவாதி' என்ற முத்திரை கொண்ட வாஜ்பாயை முன்னிறுத்த முடிவு செய்தார் அத்வானி. அதன்படி 1995 ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜனதா போட்டியிடும் என்றும், அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்றும் அத்வானி அறிவித்தார். வாஜ்பாய் தலைமை என்று அறிவிக்கப்பட்டதும், மற்ற கட்சிகள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தயாராக முன்வந்தன. இதனையடுத்து பா.ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி, 1998 ல் மத்தியில் அக்கூட்டணி ஆட்சியையும் பிடித்தது. வாஜ்பாய் பிரதமராக பதவியேற்க, அத்வானிக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா ஒதுக்கப்பட்டதோடு, துணைப் பிரதமராகவும் பதவி வகித்தார்.

கனவாய் போன பிரதமர் பதவி

இந்த சமயத்தில்தான், அதாவது 2002 குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கலவரம், அங்கு ஆட்சியில் இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. கலவரத்தை கட்டுப்படுத்த மோடி தவறிவிட்டதாகவும், கலவரக்காரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மோடி தலைமையிலான அரசு நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. முதலமைச்சர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து கூட்டப்பட்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், அப்போதைய பிரதமர் வாஜ்பாயே, மோடி ராஜ தர்மத்தை மீறிவிட்டார் என்றும், அவர் பதவி விலகுவதுதான் சரி என்றும் கூறினார். ஆனால் துணை பிரதமரான அத்வானி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எக்காரணத்தைக் கொண்டும் மோடி பதவி விலகுவதை தாம் ஏற்கமுடியாது என்று கூறி மோடியை அரண்போல் பாதுகாத்தார். ஏனெனில் மோடி மீதான தீவிர இந்துத்துவவாதி என்ற முத்திரை, கட்சியின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்தில் தாம் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தேர்தலை சந்திக்கும்போது, அதிக எம்.பி. சீட்டுகளை கைப்பற்ற மோடியின் குஜராத் மாநிலம் பயன்படும் என்றும் கணக்குப்போட்டார் அத்வானி. அதற்கு ஆர்எஸ்எஸ் தலைமையும் ஆதரவு கொடுக்க, மோடியின் பதவி தப்பியது. அன்றுமட்டும் அத்வானி, மோடியை அந்த நெருக்கடியிலிருந்து காப்பாற்றி இருக்காவிட்டால், அரசியலில் மோடி இன்று இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கக்கூடும். அன்றுமட்டுமல்ல மோடியின் ஆரம்பகால அரசியலிலும் அவருக்கு வழிகாட்டியாக திகழ்ந்து, கட்சியில் பதவி வாங்கிக்கொடுத்து, குஜராத் பா,ஜனதாவை வளர்க்க மோடிதான் சரியான ஆள் என கைகாட்டி, அவரை கை தூக்கிவிட்டவர் அத்வானி. மேலும் தனது ரதயாத்திரை அரசியல் மூலம், பாபர் மசூதி - ராமர் கோயில் பிரச்னையை எங்ஙனம் தேசிய பிரச்னையாக மாற்றி அரசியல் லாபம் பெறலாம் என்பதையும் மோடிக்கு கற்றுக்கொடுத்தார் அவர்.

இத்தகைய நிலையில்தான் பிரதமர் பதவியில் அமரவேண்டும் என்ற தனது நீண்டகால லட்சியத்தை அடையும் நோக்கில் 2004 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார் அத்வானி. முந்தையை தேர்தலில்தான் தனது உழைப்புக்கான பலனை வாஜ்பாய் அனுபவித்தார், எனவே இந்த முறை விட்டுவிடக்கூடாது என தன்னையே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க செய்தார். அதன்படி அத்வானி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. ஆனால் அத்வானிக்கு பிரதமர் பதவி கிடைக்கக்கூடாது என ஜாதகத்தில் சொல்லப்பட்டிருக்கிறதோ என்னமோ அந்த தேர்தலில் அக்கூட்டணி தோல்வியை சந்தித்து. அடுத்து ஐந்தாண்டு காலம் பொறுமையாக காத்திருந்தார் அத்வானி. அதாவது 2009 நாடாளுமன்ற தேர்தல். அந்த தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, மீண்டும் ஐந்தாண்டு கால காத்திருப்பு அத்வானிக்கு.இந்நிலையில் 2014 தேர்தலிலாவது வெற்றி பெற்று பிரதமர் பதவியை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்வானி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, இந்த முறை பிரச்னை மோடி வடிவில் வந்தது. குஜராத் கலவரத்தால் ஏற்பட்ட நெகட்டிவ் இமேஜையும் மீறி, 2002 ம் ஆண்டிலிருந்து 2012 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு வெற்றி தேடித்தந்த மோடியை, ஆர்எஸ்எஸ் தலைமை வியப்புடன் உற்று நோக்கியது. கூடவே ஊடகங்களில் , மோடி தலைமையில் குஜராத் மாநிலம் அபார வளர்ச்சி கண்டுள்ளதாக செய்யப்பட்ட பிரசாரமும், மோடியை ஒரு வளர்ச்சிக்கான தலைவராக பேசவைத்தது. ஆனால் இது அனைத்தும் மோடி, தேசிய அரசியலை நோக்கி நகர்வதற்காக திட்டமிட்டு மேற்கொண்ட நடவடிக்கை என்பதை அத்வானி உணர்ந்து சுதாரிப்பதற்குள், நிலைமை கைமீறிப்போயிருந்தது.

2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் தேசிய அரசியலில் பா.ஜனதாவின் நிலைமை மோசமாகிவிடும் என்று பா.ஜனதா தலைவர்கள் பலர் கருதினர். கூடவே ஆர்எஸ்எஸ்-சும். இதனால் அவர்கள் மோடிக்கு கிடைத்த இமேஜை பயன்படுத்த எண்ணி, அவரது தலைமையிலேயே நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என முடிவு செய்தனர். சிஷ்யனே குருவான கதையாக அத்வானிக்கு இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோடியை பிரதமர் வேட்பாளராக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தனது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக பா.ஜனதா தேர்தல் கமிட்டித் தலைவர் பதவி உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அத்வானி விலகினார். கட்சியின் இதர தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

முடிவுரை எழுதும் மோடி

அரசியலில் மோடி எட்டிய வளர்ச்சி, மக்களிடையே அவருக்கு ஏற்பட்ட செல்வாக்கு, அடிமட்ட கட்சித்தொண்டர்களிடமும் மோடி குறித்த பிம்பம் பிரமாண்டமாக வியாபித்திருப்பதை உணர்ந்துகொண்ட அத்வானிக்கு, யதார்த்தம் புரிந்தது. கசப்புடன் அந்த உண்மையை விழுங்கிக்கொண்டு, எம்.பி. பதவியையாவது தக்கவைத்துக்கொள்வோம் என வழக்கமாக தாம் போட்டியிடும் குஜராத் மாநிலம், காந்திநகர் தொகுதிக்குப் பதிலாக மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவு செய்தார். 1991 லிருந்து அத்வானி தொடர்ந்து ஐந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிதான் காந்திநகர் தொகுதி என்றாலும், அத்தொகுதி மோடியின் செல்வாக்குமிக்க குஜராத் மாநிலத்தில் வருகிறது. மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவித்ததால், அதனை மனதில் கொண்டு கட்சியினர் தமக்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்க்காமல் தம்மை தோற்கடித்துவிடுவார்களோ என்று அத்வானி அச்சப்பட்டார். எனவேதான் போபால் தொகுதியை தேர்ந்தெடுத்தார். ஆனால் அத்வானி காந்திநகர் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்று பா.ஜனதாவின் தேர்தல் கமிட்டிக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், 'மோடி மற்றும் ராஜ்நாத் சிங் போன்றவர்கள் தனக்கு விருப்பமான தொகுதியை முடிவு செய்கிறபோது, எனக்கு அந்த உரிமை இல்லையா' என தமது ஆதரவாளர்களிடம் சீறினார் அத்வானி.

ஆனால், "நீங்கள் காந்திநகர் தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறினால், அது மோடியை விமர்சிக்க அவரது எதிர்ப்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். 'கட்சியின் மூத்த தலைவர் கூட மோடியை நம்பாமல் இருக்கிறார்' என்று விமர்சனங்கள் கிளம்பிவிடும். எனவே காந்திநகர் தொகுதியிலேயே போட்டியிடுங்கள்; உங்களது வெற்றியை மோடி நிச்சயம் உறுதிபடுத்துவார்" என அத்வானியை ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். கடைசியில் அத்வானி அதனை ஏற்றுக்கொண்டு அந்த தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில், ' 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அமைச்சரவையிலோ அல்லது கட்சியிலோ பெரிய பொறுப்புகளை எதிர்பார்க்காதீர்கள்' என்று தேர்தல் முடிந்த பின்னர் மோடி ஆதரவாளர்கள் சொல்லத்தொடங்கினர். அத்வானிக்கும், அவரது சிஷ்யரான மோடியின் கீழ் அமைச்சரவையில் பணியாற்றுவது நெருடலாக இருக்கும் என்பதால், மக்களவை சபாநாயகர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அதற்கும் சம்மதிக்காத மோடி, அப்பதவிக்கு சுமித்ரா மகாஜனை கொண்டுவந்துவிட்டார்.மொத்தத்தில் சந்தேகமே இல்லாமல் அத்வானி ஓரங்கட்டப்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இது அரசியலில் ஒருவருக்கு மகத்தான வரவேற்பு கிடைத்து, கட்சியினரால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், தனக்கான சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் தவறவிட்ட ஒரு தலைவர், காலம்கடந்தும் அரசியலில் நீடித்தால் என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம். எந்த ஒரு வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட காலவரையறை உண்டு. அந்த காலம் முடிந்தவுடன் அதிலிருந்து ஓய்வுபெற்று விலகிவிட வேண்டும். அத்வானியின் அரசியல் வாழ்க்கையின் லட்சியம் இந்தியாவின் பிரதமர் பதவியாக இருந்திருக்கும். ஆனால் அது ஏனோ நடக்காமல் போய்விட்டது. தனது அரசியல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என அத்வானி திட்டமிட்டு இருக்கலாம்; ஆனால் அதன் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதை மோடி தீர்மானித்துவிட்டார். அதுதான் மக்களவையின் நெறிகள் குழுவின் தலைவர் பதவி. அநேகமாக இதைத்தாண்டி அத்வானிக்கு இனிமேல் அவரது வாழ்க்கையில் பெரிய பதவி வந்து சேர்ந்துவிடப்போவதில்லை.

பதினெட்டு நாட்கள் நடைபெற்ற மகாபாரத போரின்போது, பாண்டவர்களுக்கு பக்கபலமாக நின்று, குறிப்பாக அர்ஜூனனுக்கு போர் தந்திரங்களையும், வியூகத்தையும், அவ்வளவு ஏன் சூழ்ச்சியையும் கூட கற்றுக்கொடுத்த கிருஷ்ணர், போருக்குப் பின்னர், ஹஸ்தினாபூரை தாம் ஆள வேண்டும் என்று எண்ணியதில்லை. தான் ஒரு தேரோட்டி என்ற எண்ணம்தான் அவரது மனம் முழுக்க வியாப்பித்திருந்தது. ஆனால் அத்வானி ஒன்றும் பகவான் கிருஷ்ணர் இல்லையே.... அரசியல்வாதி. மோடிக்கு எல்லா தந்திரங்களையும் சொல்லிக்கொடுத்து அவரது அரசியல் வாழ்க்கைக்கு உதவியபோது, தன்னை தேரோட்டியாக நினைத்துக்கொண்டு உதவி இருக்கமாட்டார். ஹஸ்தினாபூரை (பிரதமர் பதவி) அவரே ஆள திட்டமிட்டே செய்திருப்பார். ஆனால் கடைசியில் அவருக்கு ஹஸ்தினாபூரின் மன்னராக கூட அல்ல, அமைச்சராகக்கூட கூட வாய்ப்பு கிடைக்காமல் போனதுதான் பெரும் சோகம்!

- பா. முகிலன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-