அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சிதையும் திருமண பந்தம்... சிதறும் இல்லற உறவுகள்... விவாகரத்துகள் அதிகரிப்பது ஏன்?

ரீலில் மலர்ந்து, ரியலில் முறிந்த திரையுலக நட்சத்திங்களின் காதல் திருமண விவாகரத்து கதைகள் ஏராளம். படப்பிடிப்பில் அறிமுகமாகி, திரைக்கதையோடு தனியாய் தங்கள் காதல் கதையை வளர்த்து, வதந்திகள், சர்ச்சைகள் என பல தடைகளையும் தாண்டி திருமண பந்தத்திற்குள் இணைந்த சில மாதங்களிலேயே மணற்சிற்பம்போல பிரபலங்களின் உறவும் உடைந்துவிடுகிறது…

திரையில் காதலையும், திருமண பந்தத்தையும் தெய்வீகமாகக் கொண்டாடும் திரையுலகினர் பலர் நிஜத்தில் அதற்கு மாறுபட்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். திரைத்திரையுலகினரை பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக நடிகைகள் மார்க்கெட் இருக்கும் வரை கல்லாக் கட்டி விட்டு அடுத்து, தொழிலதிபரையோ, செல்வந்தர்களையோ வளைக்கும் திட்டத்திற்கு தயாராகி விடுகின்றனர். அவர்களில் தனது அழகிற்கும் வயதிற்கும் பொருத்தமில்லாத பணமூட்டைகளை திருமணம் செய்து கொண்டு விரைவிலேயே அந்த பந்தத்தை முறித்துக் கொள்பவர்கள் இங்கே ஏராளம். இங்கே ஒன்றல்ல. இரண்டல்ல.. ஐந்து.. ஆறு திருமணங்களைக் கடந்த பிரபலங்களை ஒரு பட்டியலே போடலாம். இந்த லிஸ்டில் நடிகைகளும் சளைத்தவர்கள் அல்ல..

திரையுலகினரைத் தொன்றுதொட்டு படர்ந்து வரும் இந்த விவாகரத்து வியாதி தற்போது உக்கிரமாய் தாக்கி வருவதில் சூப்பர் ஸ்டார் ரஜிகாந்தின் மகளும் கூட பாதிக்கப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது…

கொஞ்சிக்குலாவி அன்பை வளர்த்து வந்த இந்த காதல் பைங்கிளிகள் விரும்பி திருமணச்சிறை பட்ட பிறகு உறவை முறித்துக் கொண்டு கூண்டை விட்டு பறக்க முயற்சிப்பது எதனால்..?

நாட்டு நடப்புகளை அறிந்த, ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரத்தை புரிந்த சில பிரபலங்களிடம் கருத்து கேட்டோம்..

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்:

பிரபலங்களின் திருமண முறிவிற்கு பெரும்பாலான காரணம் என்னவாக இருக்க முடியும்?

(சிரித்துக்கொண்டே...)..அய்யய்யோ அத சொன்னா உலகம் நம்ம கோவிக்குமே. சரி, தவறுகளை எடுத்து சொன்னா இவர் என்ன பழைய காலத்து ஆளா இருக்காருன்னு நம்மள ஒதுக்கிறாங்க. நம் சமூக கலாச்சாரத்தின் கட்டமைப்பின் படி மது அருந்துவது தவறு. இன்றைய காலகட்டத்தில் மேல்தட்டு சமூகத்தில் பெண்களே மதுபான கூடங்களுக்குச் சென்று குடிப்பது வாடிக்கையாகிவிட்டது.

அதை நாம் கேட்டால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கின்றனர். ஏன் இங்க்லீஷ்ல குடிச்சா தப்பில்லையா?, இல்ல ஃபாரின் சரக்கு குடிச்சா தப்பில்லையா?. இன்றைய சூழலில் விவாகரத்திற்கான காரணம் இதற்கென்று அதற்கென்று இல்லாமல் பெருகி போய் கிடக்கிறது. குறிப்பாக பெரும்பாலான வீடுகளில் பெரியவர்கள் இல்லாததுமே ஒரு காரணம்.இன்று பெரும்பாலான பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். ஆண்களுக்கு சமமாக வேலைக்குச் செல்கின்றனர். ஏன் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகவே சம்பளம் வாங்குகின்றனர். கணவனுக்கு நான் ஏன் அடங்கிப்போக வேண்டும் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்துவிட்டனர். உதாரணத்திற்கு, குடும்பத்தில் சண்டையின் போது ஒரு கணவன் தனது மனைவியை வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னானாம், அதற்கு மாணவி லூசா நீ?, வீட்டோட லோன் என் பேர்ல வாங்கி இருக்க, நீ கிளம்பு என்றாளாம். அலைபாயுதே என்ற ஒரு திரைப்படம் வந்தது. அது இந்த சமூகத்திற்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும். அந்த படத்திற்கு பிறகு இது பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் டிரன்டாகவே ஆகிப்போனது. எல்லை மீறுதல் ஞாயப்படுத்தப்படுவதலே அது தவறான முன்னுதாரனமாகிவிடுகிறது. செல்போன் வருவதற்கு முந்தைய காலக்கட்டங்களில் அம்மா கோவிலுக்குச் செல்லும்போது மகளை தன்னுடன் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். அப்போது போகும் வழியில் இருவரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் தற்போது பெரும்பாலானவர்கள் காதில் ஒன்றை மாட்டிக் கொண்டு, கையில் ஒன்றை வைத்துக் கொண்டு முகம் தெரியாத மனிதர்களோடுதான் உரையாடுகின்றனர். இன்று அனைத்து குடும்பங்களிலும் பிள்ளைகள் செல்போனுக்கு அடிமையாகிவிட்டனர். இது போதையைக் காட்டிலும் கொடுமையானது. செல்பி எடுத்து ஃபேஸ்புக்ல போட்டு அரை மணி நேரமாச்சி இன்னும் ஒரு லைக் கூட வரல, ஒருவருக்கும் சமூக பொறுப்பு என்பதே இல்லை என்று பிள்ளைகள் கவலை படுகின்றனர். இதன் தாக்கம் எவ்வளவு கொடியது என்று பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. நான் காலைல எழுந்து பல்லு வெலக்குறேனோ இல்லையோ, செல்லு வெலக்கிகிட்டு இருக்கேன்.

குட்டி ரேவதி

குடும்ப கட்டமைப்பில் பெண்கள் அடங்கிப்போக மறுக்கின்றனரா?; பிரபலங்கள் விவாகரத்து கோருவது அதிகமாகி வருகிறதே..

தற்போது பெண்கள் பலதுறைகளில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர். இதனை பெரும்பாலான ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பெண்களை குடும்பத்திற்குள் முடக்கிவிட வேண்டும் என்றே நினைக்கின்றனர். இது தவறான முன்னுதாரணமாகும். சுருக்கமாக சொன்னால் ஒரு பெண்ணை ஆண் பொருளாதார ரீதியில் முடக்க நினைக்கும்போது அதனை அவள் உடைத்தெறிந்து கொண்டு வெளியே வருவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். நான் விவாகரத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

பெண்களின் பங்களிப்பு சமூகத்திற்கு மிகவும் அவசியம்.இறுக்கமான தமிழ் சமூகம் தற்போது மிகுந்த நெகிழ்வாக மாறி வருகிறது என்பதனை நாம் ஏற்க மறுக்கிறோம். பெரும்பாலான சினிமாக்கள் ஹீரோக்களின் சினிமாவாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் மிக அற்புதமான ஒரு திரைக்காவியம். அதுபோன்ற படங்களை நம் சமூகம் போற்றுவது இல்லை. ஒரு பெண்ணை இழிவு படுத்துபவரை அந்த பெண்ணே மீண்டும் காதலித்து திருமணம் செய்வது போன்ற உண்மைக்குப் புறம்பான விஷயங்களை தொடர்ந்து சொல்லி இந்த சமுதாயத்தை தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறது இன்றைய சினிமா. இப்போதுள்ள சூழலில் எந்த கதாநாயகனும் முன்னுதாரணமாக இருக்கத் தகுதி இல்லை என்றே நான் கூறுவேன். ஒரு கணவனுக்கும், மனைவிக்கும் ஒத்துப்போகவில்லை எனில் அவர்கள் மனப்பூர்வமாக பிரிந்து செல்வதில் தவறில்லை. அதை அடங்கிப்போக மறுக்கின்றனர் என்று சொல்வது தவறு.

அருள்மொழி, வழக்கறிஞர்

பெண் உரிமை’ என்ற பெயரில் தொன்றுதொட்டு வந்த நம் கலாச்சாரத்தின் கட்டமைப்பை பெண்கள் உடைத்து எறிகின்றனரா?

பெண்கள் தங்கள் உரிமையை கேட்பதை வரம்பு மீறுவதாக கூறுகிறார்கள். உரிமை என்பது எப்படி வரம்பு மீறுவதாக இருக்கும்? ஆண் ஆதிக்கம் என்பது எல்லா சமூகத்திலும் இருக்கு.

விவாகரத்து பற்றி கூற வேண்டுமென்றால் பிரபலங்கள் மட்டும் அல்ல பொதுவாகவே சென்னையில் மட்டும் கடந்த சில வருடங்களாக முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட திருமண முறிவு வழக்குகள் பதிவாகின்றன. இதற்கு காரணம் குடும்ப அமைப்பு என்பது ஒரு சமமற்றதாக இருப்பதே.. வெளி வாழ்க்கைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் முரண்பாடுகள் அதிக அளவில் உள்ளது. ’ஒத்த பொண்ணு ஒத்த பையானா வளர்பதனால அவங்க பெற்றோரை பார்த்துக்கொள்ளும் சூழல் உருவாகிறது. இது குடும்ப வாழ்கை என்று வரும்போது யார் பெற்றோருடன் இருப்பது என்கின்ற பிரச்சனைகள் உருவாகின்றது. குடும்பத்தில் இருவரும் வேலைக்கு செல்லும் போது வீட்டு வேலைகளை மட்டும் பெண்தான் செய்ய வேண்டும் என்பது, திருமணம் முடிந்த பிறகு காதல் என்கிற ரொமான்ஸ் இப்படியான உணர்வுகள் இல்லாமல் இருப்பதே.. இதேபோல குடும்ப கட்டமைப்பை எப்படி பாதுகாப்பது என்கிற புரிதல் குறைவாகவே உள்ளது.

நீயா, நானா என்ற ஈகோ தான் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறதா?

அபிலாஷா- மனநல மருத்துவர்

விவாகரத்துக்கு பொதுவாக இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று கணவன், மனைவி இடையில் சரியான புரிதல் இல்லாமல் இருத்தல். மற்றொன்று கணவன் மனைவி உறவில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு அதிகரிப்பது என இரண்டு காரணங்களைக் கூறலாம். இந்த இரு காரணங்களில் முதல் காரணத்தால் பிரிய முடிவெடுக்கும் தம்பதிகளில் பாதிபேர் மனநல மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின்னர் பிரியும் முடிவைக் கைவிட்டு விடுகிறார்கள். அதேநேரம், இன்றைய அவசரகால சூழலில் மனநல மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம் என்பது கேள்விக்குறியே, மேலும், இதுபோன்ற ஆலோசனைகளைப் பெற அவர்களது பணிச்சூழலும் ஒத்துழைக்க வேண்டும். இருவருமே பணிக்குச் செல்லும் சூழலில் தங்கள் பணிச்சுமையை மற்றவர் மீது திணிப்பதால் கருத்துவேறுபாடு அதிகரிக்கிறது. திருமண பந்தத்தில் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதும் காரணமாகக் கொள்ளலாம். சமூக அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும்போது, இது பிரசனையாக மாறுகிறது. குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது, கருவுறுவதில் ஏற்படும் உடல் குறைபாடு அல்லது குழந்தை வளர்ப்பிலும் தம்பதிகள் இடையே கசப்பு அதிகரிக்கிறது. அதேநேரம் உண்மையிலேயே திருமண பந்தத்தில் கொடுமைகளை அனுபவித்துவரும் சிலரைக் காப்பாற்ற விவாகரத்து தேவை எனும் வாதத்தை மறுப்பதற்கில்லை.திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகள் நமக்குள் ஒத்துவராது பிரிந்துவிடலாம் என உணர குறைந்தது ஒருவருட காலம் ஆகலாம். இந்த காலத்துக்குள் இருதரப்பு குடும்பத்தினர், நண்பர்கள் என பலதரப்பினரும் அவர்களை சமாதானப்படுத்த முயற்சிப்பர். அதேபோல, கல்வி உள்ளிட்ட சொந்த விபரங்களில் ஏமாற்றி திருமணம் செய்துகொள்வதாலும் விவாகரத்து பெற நீதிமன்றங்களை ஆண்களும், பெண்களும் நாடுகின்றனர். காதல் திருமணம் செய்த தம்பதியினரே இளம் வயதில் விவாகரத்தை விரும்புகின்றனர். ஆனால், பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணங்களில் விவாகரத்தை 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதிலேயே நாடுகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-