அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
விளையாட்டுத்தனமான நம்முடைய சில சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும்போது சமயங்களில் அது வேறு ஒரு திசையை நமக்கு காட்டிவிடலாம். சென்னை பாரிமுனையைச்சேர்ந்த பாலாஜிக்கு தமிழகத்தின் முதல் பைக் டாக்ஸி உரிமையாளர் என்ற பெருமையை பெற்றுக்கொடுத்ததும் அப்படி ஒரு சிந்தனைதான். பி.பி.ஏ பட்டதாரியான பாலாஜி, நம்மைப்போல் இயல்பான மனிதரல்ல, சிறுவயதில் ஏற்பட்ட தண்டுவட பாதிப்பினால் கால்கள் முடமாகி நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி. ஆனால் இன்று பரபரப்பான 'பைக் டாக்ஸி' டிரைவர்.

'கால் டாக்ஸி'யை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் 'பைக் டாக்ஸி' என்பது இந்தியாவில் புதிய வார்த்தைப் பிரயோகம்தான். சீனாவில் வெற்றிகரமான தொழிலான பைக் டாக்ஸி. தற்போது பிரேசில், அமெரிக்கா, இங்கிலாந்து, கம்போடியா, கேமரூன், இந்தோனேஷியா, நைஜீரியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. ஆட்டோ ஸ்டாண்டுகள் போல பைக் டாக்ஸிக்கும் அங்கே தனி ஸ்டாண்டுகள் உண்டு.

இந்தியாவில் இன்னும் பரவலாகாத பைக் டாக்ஸி தொழில் சென்னையில் சத்தமின்றி செயல்பாட்டில் உள்ளது. சென்னையில் பைக் டாக்ஸி என்ற சிந்தனைக்கு வித்திட்டவர்தான் பாலாஜி.

இன்று 'மாற்றுத் திறனாளிகளின் உலா' என்ற அமைப்பின் கீழ் இயங்கிவரும் இந்த பைக் டாக்ஸிகளை இயக்குபவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் என்பது நெகிழ்வான தகவல். தலைநகர் சென்னையில் பலருக்கும் இப்போது பைக் டாக்ஸி அறிமுகமாகத் துவங்கியிருக்கிறது. சின்ன சிந்தனைக்கு வடிவம் கொடுத்து அதை வெற்றிகரமாக்கியுள்ள பாலாஜியை சந்தித்தோம்.

Advertisement


“ சென்னையிலேயே பிறந்துவளர்ந்தவன் நான். அப்பா மில் தொழிலாளி. அக்கா, மற்றும் ஒரு தங்கையுடன் பிறந்தேன். வறுமைச் சூழல். சிறுவயதிலிருந்தே எனக்கு எதையும் எளிதில் கற்க முடியாத 'ஸ்லோ லேனர்' என்கிற குறைபாடு இருந்தது. பள்ளிவயதிலிருந்தே இதனால் பல சங்கடங்களை சந்தித்தேன். ஒருகட்டத்தில் இது தீவிரமாகி நடக்கமுடியாத நிலை ஏற்பட்டபோதுதான் மருத்துவரை அணுகினோம். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவலை சொன்னார் மருத்துவர். எனக்கு ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் தண்டுவடம் தொடர்பான நோய் இருப்பதாக சொன்னபோது மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்தது. அது அரிதான ஒரு நோய்.

தங்கள் ஒரே மகன் நோயாளி என்பதை வீட்டாரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அன்றிலிருந்து சோகமானது வீடு. என்னிடம் நம்பிக்கையைாக பேசினாலும் இரவு நேரங்களில் இருளின் அமைதியை மீறி அவர்களது அழுகை சத்தம் கேட்கும். ஒருவருக்கொருவர் பச்சாதாபமான பார்வையுடன் அந்த நாட்கள் கழிந்தன. தனியார் மில் ஊழியரான என் அப்பா, வறுமையிலும் விடாமல் தொடர்ந்து என்னை படிக்கவைத்தார். 2008 ஆம் ஆண்டு பி.பி.ஏ., முடித்தேன்.

படிப்பு முடிந்ததும் பல இடங்களுக்கு வேலை தேடி அலைந்தேன். என் உடல்குறைபாட்டை காரணமாகக் கூறி எங்கும் பணியில் சேர்க்கவில்லை. என் உடல்பிரச்னை வேலையை பாதிக்காது என்பதை எடுத்துச்சொல்லியும் யாரும் புரிந்துகொள்கிறமாதிரி இல்லை. இதனிடையே நாள்தோறும் சிகிச்கைக்கான மருந்துகளை எடுக்கவேண்டி இருந்ததால் ஒருகட்டத்தில் மருந்துகள் வாங்கக்கூட பணமின்றி தவித்தனர் பெற்றோர். இப்படி கவலையான நாட்களில் மாறுதலுக்காக தியான மையம் ஒன்றுக்கு தினம் செல்ல ஆரம்பித்தேன். தியான வகுப்பு முடிந்ததும் வீட்டிற்கு செல்லும் வழி என்பதால் அங்குள்ள ஒரு ஆசிரியரை தினமும் அழைத்துக்கொண்டு பேருந்துநிலையத்தில் விடுவேன்.

Advertisement


ஒருநாள் அவர் விளையாட்டாக, 'தினம் தினம் என்னை ட்ராப் செய்கிறாயே... பலபேர் பேருந்து ரயில் ஷேர் ஆட்டோ வசதியற்ற இடங்களுக்கு செல்ல முடியாமல் இருக்கிறார்களே, அவர்கள் அனைவருக்கும் உதவுவாயா' என்றார். 'நானே மற்றவர்கள் உதவியை எதிர்பார்த்து வாழ்பவன். நான் எப்படி மற்றவர்களுக்கு ?..' என்றேன். 'உதவியாக ஏன் செய்கிறாய்...அதற்கு குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொள். வருமானமும் கிடைக்குமல்லவா, அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்வதன்மூலம் சம்பாதிக்கலாமே' என்றார்.

விளையாட்டாக அவர் சொன்னதை இரவு முழுக்க சிந்தித்தேன். செய்துபார்க்கலாமே எனத் தோன்றியது. இந்த உலகத்திடம் நாம் ஏன் உதவி கேட்டு வாழ்க்கைய நகர்த்தவேண்டும். இந்த உலகத்திற்கு நாம் உதவுவோம். அதன்மூலம் நாமும் சம்பாதிக்கலாம்' என முடிவெடுத்தேன். விறுவிறுவென களத்தில் இறங்கினேன்” என்றார்.

இந்தியாவில் நடைமுறையற்ற ஒரு தொழிலை தேர்ந்தெடுத்ததில் என்னென்ன பிரச்னைகளை சந்தித்தீர்கள்? என்றோம். “பிரச்னைகள் இல்லை. ஆனால் பலரது கேள்விகளை சந்திக்கவேண்டியதானது. என் முதல் பயண அனுபவமே மறக்கமுடியாதது. ராயபுரத்தில் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்த ஒருவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, 'உங்களை விரும்பும் இடத்தில் விடுகிறேன். கொடுப்பதை கொடுங்கள்' என்றேன். அவர் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு, அவரை நான் கலாய்ப்பதாக எண்ணி நகர்ந்துசென்றுவிட்டார். காரணம் பெரிய வீட்டுப்பையன் போன்ற என் தோற்றம். திரும்ப அவரிடம் என் உடல்பிரச்னையை சொல்லி உண்மையில் நான் பைக் டாக்ஸி ஓட்டுகிறேன் என சொன்னேன். நம்பாதவர் மீண்டும் மீண்டும் என்னிடம் பல கேள்விகளை அடுக்கினார்.

மனம்நொந்துபோய் 'ஏன் சார் நான் என்ன உங்களிடம் பிச்சையா' கேட்கிறேன். என் வயிற்றுப்பிழைப்பிற்காக ஒரு தொழிலை செய்கிறேன். இப்படி வேதனைக்குள்ளாக்குகிறீர்களே' என கேட்டேன். பின்னர்தான் அவர் தெளிவாக ஏறி அமர்ந்தார். ஆரம்பத்தில் பல இடங்களில் இப்படி நடந்தது. பின்னாளில் என் வண்டியின் முன் என் செல்போன் எண்ணை எழுதிவைத்தேன். இது எளிதான என்னை அடையாளம் காட்ட உதவியது” என்றவரிடம், வாடிக்கையாளர்களை எப்படி அணுகுகிறீர்கள்? என்றோம்.

“தொழிலுக்காக நான் தேர்ந்தேடுத்துள்ள நேரம் பிற்பகல் 3 லிருந்து இரவு 1 மணிவரை அல்லது இரவு 8 மணிமுதல் விடியற்காலை 3 மணிவரை. இந்த நேரங்களில் பொதுவாக சென்னையில் பேருந்து, ஆட்டோ வசதி கிடைக்காது. இதனால் வாடிக்கையாளர்களை பிடிப்பது சுலபம். அந்நேரங்களில் பேருந்துநிலையத்திற்கு செல்வேன். ஒரு சிலர் வண்டியில் எழுதப்பட்ட விளம்பரத்தை பார்த்து அவர்களாகவே விசாரிப்பார்கள். சிலரிடம் நானே சென்று அறிமுகம் செய்துகொள்வேன். எனது பேச்சு அவர்களிடம் துளியேனும் மாற்றத்தை ஏற்படுத்தும். வாடிக்கையாளராகி விடுவார்கள்” என்கிறார் மெல்லிய புன்னகையுடன். '

நினைத்தபடி இந்த தொழில் திருப்திகரமாக உள்ளதா? என்றோம். “ மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் உள்ளது. பைக் டாக்ஸி என்பது பரவலாக அறியப்படாத தொழில் என்பதால் அந்நியமாக பார்க்கிறார்கள். ஆனால் சொன்னால் புரிந்துகொள்கிறார்கள். என் வாடிக்கையாளர்கள் பலர் என் மொபைல் எண்ணை கேட்டுப்பெற்று தேவை ஏற்படும்போது அழைப்பார்கள். கட்டணமும் நான் அதிகம் வசூலிப்பதில்லை.2 கி.மீ வரை 25 ரூபாய் கட்டணம். அதன்பின் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 10 ரூபாய் கூடுதல் கட்டணம். பயண துாரம் 10 கி.மீ துாரம் கடந்துவிட்டால் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் 2 ரூபாய் குறைத்துக்கொள்வேன்“ என்கிற பாலாஜி தொடர்ந்து தொழில் வருமானம் குறித்து கூற ஆரம்பித்தார்.

“ஒருநாளைக்கு 8 முதல் 15 வாடிக்கையாளர்களை சந்திக்கிறேன். 600 முதல் 850 வரை சம்பாதிக்கிறேன். பெட்ரோல் செலவு 200 போனாலும் 600 ரூபாய் கையில் நிற்கும். உடல்பாதிப்பின் இடையிலும் நான் சம்பாதிப்பது என் பெற்றோருக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. மருந்து வாங்கக்கூட பணம் இன்ற தவித்த நான் இன்று எனக்கான தேவைகளையும் வீட்டின் தேவைகளையும் இந்த வருமானத்தில் கவனிக்கிறேன். யாரிடமும் கையேந்தாமல் என் முயற்சியால் சம்பாதிப்பது மனநிறைவைத் தருகிறது” என்கிற பாலாஜியின் குரலில் தன்னம்பிக்கை வழிகிறது.

தொடர்ந்து பேசிய பாலாஜி, “ போக்குவரத்து வசதியற்ற இடங்களுக்கு பயணிகளை அழைத்துச்சென்று இறக்கிவிடும்போது அவர்கள் மனம் நெகிழ நன்றி தெரிவிப்பது மனதிற்கு நிம்மதியை தரும். இப்போது என்னுடன் மேலும் சிலர் இணைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் உலா என்ற பெயரில் கடந்த 8 மாதங்களாக பைக் டாக்ஸி நடத்திவருகிறோம். கடாஃபி என்பவர் எங்களின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்” என்றார்.'மாற்றுத்திறனாளிகளின் உலா' வை ஒருங்கிணைத்து நடத்திவரும் கடாஃபியிடம் பேசினோம். மற்றவர்களைப்போல் இயல்பானவர்களாக இயங்கமுடியாததாலும், கல்வித்தகுதி குறைபாட்டாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பணிபுரியும் இடங்களில் தனி கழிப்பறை வசதியில்லாதது, வெளியிடங்களுக்கு செல்ல முடியாதது போன்ற அசௌகரியங்களை நிறுவனத்திற்கு தரவேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு தீர்வாக பைக் டாக்ஸி உள்ளது. சொந்தமாக ஒரு வாகனம் வைத்திருந்தால் அவர்களே முதலாளி. அரசு அளித்துள்ள 3 சக்கர வாகனங்களும், ஒருசிலர் சொந்த வாகனங்கள் வைத்திருப்பதாலும் இந்த திட்டம் வெற்றிகரமாகியுள்ளது. நேற்றுவரை யார் கையையோ எதிர்பார்த்து வாழ்ந்தவர்கள் இன்று தங்களையும், தங்கள் குடும்பத்தையும் கவனிக்கும் அளவு சொந்தக்காலில் நிற்கமுடிகிறது. விடுமுறையோ,ஓய்வு எதுவானாலும் விரும்பியபோது எடுத்துக்கொள்ள முடிவது இந்த தொழிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வரப்பிரசாதம்.

எங்களது நோக்கம், தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து பைக் டாக்ஸி தொழிலை விரிவுபடுத்தவேண்டும் என்பதுதான். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தாங்களே முதலாளி என்ற உணர்வு உருவாகி அவர்களது தாழ்வுமனப்பான்மை மறையும். மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு களமாக இது பிற்காலத்தில் உருவாக வேண்டும் என்பதே.

உலகின் பல இடங்களில் பைக் டாக்ஸி செயல்பாட்டில் இருந்தாலும் அதற்கு தொழில் அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. அங்கு இயல்பானவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசிடமும் போக்குவரத்து துறையிடமும் இதற்கான அங்கீகாரம் கேட்டு முதன்முறையாக விண்ணப்பித்திருக்கிறோம். ஆனால் இதுவரை பதிலில்லை. மாற்றுத்திறனாளிகள் என்ற அடிப்படையில் விதிவிலக்கு அளித்து அரசு அங்கீகாரம் அளித்தால் மாற்றுத்திறனாளிகள் பலர் இந்த தொழிலுக்கு வருவார்கள். இதன்மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளமுடியும். அரசின் கருணையை எதிர்பார்த்து நிற்கிறோம்.” என்றார்.

விதியை நொந்தபடி வீதிக்கு வந்து கையேந்தாமல் தங்கள் சொந்தக்காலில் நிற்க முயற்சிக்கும் பாலாஜி போன்றவர்களின் வாழ்க்கை, 'மாற்றுத்திறனாளிகள்' என்று கவுரவமான பெயர் சூட்டுவதால் மட்டுமே தரம் உயர்ந்துவிடாது. அவர்களின் நிஜமான வளர்ச்சிக்கு அரசும் 'கை' கொடுக்கவேண்டும்.

- எஸ்.கிருபாகரன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-