அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து விமான நிலையம்-சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.


சென்னை:

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதில் கடந்த ஆண்டு கோயம்பேடு-ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் சென்னை விமான நிலையம் - சின்னமலை இடையிலான மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டது.

ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கடந்த மாதம் அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்கலாம் என்று அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த வழித்தடத்தில் இன்று (புதன்கிழமை) மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இதற்கான தொடக்க விழா சென்னை தலைமை செயலகத்திலும், மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் நடந்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் கொடி அசைத்து வைத்து மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

அதே சமயத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் கொடி அசைத்து ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து மீனம்பாக்கத்தில் இருந்து சின்னமலைக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது. பயணிகள் ஆர்வமுடன் அதில் பயணம் செய்தனர்.

மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தி பேசினார். அவர் கூறியதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் 2-வது வழித்தடத்தில் மீனம்பாக்கம் முதல் சின்னமலை வரையிலான 8.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிகள் போக்குவரத்தை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வழித்தடத்தில் உள்ள விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, கிண்டி, சின்னமலை ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

மேலும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணியில் உள்ள பரங்கிமலை ரெயில் நிலையமும் இன்று திறக்கப்படுகிறது. அதுபோல முதல் கட்ட பணியில் உள்ள ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையமும் இன்று திறந்து வைக்கப்படுகிறது.

கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான 10.15 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை ஏற்கனவே 2015 ஜூன் 29-ந்தேதி நான் தொடங்கி வைத்தேன்.

ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை வரையிலான 1.28 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் பாதையில் விரைவில் பயணிகள் போக்குவரத்து தொடங்கும் என்று நான் அறிந்துள்ளேன்.

இதன் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கான பாதையில் பயணிகள் போக்குவரத்து முழுமையாக நடைமுறைக்கு வரும். விரைவில் இந்த வழித்தடத்தில் நேரடி போக்குவரத்து தொடங்கும். இதன் மூலம் பயணிகள் ஆலந்தூருக்கு வந்து இறங்கி செல்லாமல் கோயம்பேட்டில் இருந்து விமான நிலையத்திற்கு நேரடியாக செல்ல முடியும்.

21-ம் நூற்றாண்டில் சென்னை நகரை நவீன நகரமாக மாற்ற வேண்டும் என்ற எனது லட்சியத்தின்படி இந்த திட்டங்கள் அமைந்துள்ளன. சென்னை போக்குவரத்தின் பேருந்துகள், புறநகர் ரெயில் சேவைகள், விமான சேவைகள், மெட்ரோ ரெயில் சேவைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதாக இவை உள்ளன.

2003-ம் ஆண்டு நான் முதல்-அமைச்சராக இருந்த போது மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அது எனக்கு மிகுந்த திருப்தி அளித்தது. இதையடுத்து 2011-ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கப்பட்டன.

மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்த ஒத்துழைப்பு கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் மத்திய ஊரக மேம்பாட்டு மந்திரி வெங்கையாநாயுடு இந்த விழாவில் நம்மோடு இணைந்து இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு அவர் தொடர்ந்து ஆதரவு தருவார் என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகமில்லை. மத்திய போக்குவரத்து ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு தொடர்ந்து திட்டங்கள் தந்து ஒத்துழைக்கிறார்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் ஜப்பான் நாடு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியது. ஜப்பான் நாட்டுக்கான சென்னை தூதர் மற்றும் அதிகாரிகள் இந்த விழாவுக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்களின் சார்பில் ஜப்பான் நாட்டுக்கும், ஜப்பான் நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கத்திற்கும் ஜப்பான் நிறுவனம் தொடர்ந்து ஆதரவு தரும் என்று நம்புகிறேன். சென்னை அருகே தினமும் 40 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம், புறநகர் ரிங் ரோடு திட்டம், தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டம் பகுதி-2 ஆகியவற்றுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்ட பணிக்கு தங்களை இணைத்துக் கொண்டதற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை நகர மக்கள் போலவே சுரங்க பாதையில் ரெயில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எனக்கும் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சுரங்க பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-