அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


🔸பிறப்பு :

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் கி.பி. 556 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார்.
🔺தந்தை குவைலித் பின் அஸத்
🔺தாயார் பாத்திமா பின்த் ஸாஇதா.

இவருக்கு இரு சகோதரிகள்.
🔺ஹாலா பின்த் குவைலித்
🔺ருகையா பின்த் குவைலித்

பெண்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை நிறைவாகவே பேணி வாழ்ந்து வந்ததால் ‘தாஹிரா’ – பரிசுத்தமானவள் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

அந்தக் கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் பல கூட்டத்தினரோடும் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வந்தனர். அவற்றில் நபி (ஸல்) அவர்களின் நேர்மையான நடைமுறைகள், நீதியான கொடுக்கல் வாங்கல்கள் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.

நபியவர்களின் நேர்மை, நாணயம் அறிந்து தமது வியாபாரச் சரக்குகளை விற்கும் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளுமாறு நபியவர்களை அழைத்து, வணிகத்திற்காக அனுப்பி வைத்தார்கள் கதீஜா (ரலி) அவர்கள். அதற்கிணங்க நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களின் வியாபாரப் பொருட்களை விற்றுக் கொடுத்தார்கள்.

கதீஜா (ரலி) அவர்களது வயது 40 எட்டி இருந்தாலும் அவர்களின் செல்வச் செழிப்பின் காரணமாகப் பெரும் பெரும் செல்வச் சீமான்களைத் திருமணம் முடித்திருக்க முடியும். ஆனால், தனக்குக் கீழ்ப் பணியாளராக வேலை செய்த நபி (ஸல்) அவர்களைத் திருமணம் முடித்து இவ்வுலகிற்கு அழியாத முன்மாதிரியை வழங்கினார்கள்.

ஒரு பெண் தனது வருங்காலக் கணவனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு கதீஜா (ரலி) அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரி. ஒரு மனிதன் எவ்வளவு கெட்டவனாக இருப்பினும் அவனிடம் பணமிருந்தால் அவனுக்குப் பெண் கொடுக்கப் பெருங் கூட்டம் தயாராகிவிடும். அவனைக் கணவனாக அடைய எத்தனையோ பெண்கள் ஆசைப்பட்டுவிடுவார்கள். பணத்திற்காக எதையும் தாங்குவேனென்று பணக்காரனையே மணவாளனாகக் கொள்ள நினைப்பதுண்டு.

இந்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டு கதீஜா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். பொன்னையும் பொருளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நீதி, நேர்மை நிறைந்த, உண்மையுரைக்கின்ற, உயர் பண்புகளுக்குச் சொந்தக்காரன் ஆகிய நபிகள் நாயகத்தை மணமுடித்தார்கள். இதனால், கதீஜா (ரலி) அவர்களின் வாழ்க்கை மகிழ்வோடு கழிந்தது.

கதீஜா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மூலமாக
🔺காஸிம்,
🔺அப்துல்லாஹ்,
🔺இப்ராஹிம்,
🔺ஸைனப்,
🔺உம்மு குல்ஸூம்,
🔺 பாத்திமா,
🔺ருகையா ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள்.

💍திருமணம் :

கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் முடிக்க முன்னர்
🔺அபூ ஹாலா பின் ஸுராரா என்பவரையும், அவருக்குப் பின்னர்
🔺அதீக் பின் ஆயித் என்பவரையும் திருமணம் முடித்திருந்தார். அவர்களிருவரும் மரணித்த பின் கதீஜா (ரலி) அவர்கள் விதவையாகக் காணப்பட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் வியாபாரத்திற்காகச் சென்ற மைஸரா என்ற அடிமை மூலம் நபி (ஸல்) அவர்களின் நன்னடத்தை பற்றி மேலும் அறிந்து கொண்டார்கள் கதீஜா (ரலி) அவர்கள். இதனால், நபி (ஸல்) அவர்களை மணமுடிக்க விரும்பினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது 40 எட்டியிருந்தது; நபி (ஸல்) அவர்களின் வயது 25.

🔸பிள்ளைகள்

நபியவர்களைத் திருமணம் முடிக்க முன்னர் கதீஜா (ரலி) அவர்கள் ஏற்கனவே முடித்திருந்த அபூ ஹாலா மூலமாக
🔺ஹிந்த்,
🔺ஹாலா ஆகிய பெண்களுக்கும்,
அதீக் என்ற கணவர் மூலமாக 🔺ஹிந்த என்ற பெண் பிள்ளைக்கும் தாயாக இருந்தார்.
அபூ ஹாலாவிற்குப் பிறந்த ஹிந்த், ஹாலா ஆகிய இருவரும் இஸ்லாத்தைத் தழுவினார்களா இல்லையா என்பது பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும், அதீக் என்பவருக்குப் பிறந்த ஹிந்த் என்ற பெண் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக இமாம் தாரகுத்னி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

🔸பணிவிடைகள் :

நபி (ஸல்) அவர்கள் குகையிற் தங்கி வணக்கத்தில் ஈடுபட்ட வேளையில் அவர்களுக்குத் தேவைப்படும் உணவுகளைத் தயார் செய்து கொடுக்கும் பணியை கதீஜா (ரலி) அவர்கள் மிகவும் கனிவுடன் செய்து வந்தார்கள். குகை
ஹிரா மலையின் உச்சியிலேயே அமைந்திருந்தது. பாதையோ மிகவும் கரடு முரடானதாகக் காணப்பட்டது. இப்படியிருந்தும் தமது முதுமைப் பருவத்தையும் பொருட்படுத்தாது சிரமத்துடன் நடந்து சென்று அன்னை கதீஜா (ரலி) அவர்கள் உணவளித்ததைப் பெண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

🔸கதீஜா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம் கூறல் :

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா. அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்” என்று கூறினார்.
📗நூல்: புகாரி,முஸ்லிம்

🔸மரணம் :

நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் 10 வருடங்கள் வாழ்ந்து தமது 65 ஆம் வயதில் கி.பி. 621 இல் மரணித்தார்கள். அதே ஆண்டில்தான் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்குப் பெரும் துணையாக இருந்த அவரது சிறிய தந்தை அபூ தாலிப் அவர்களும் மரணித்தார்கள். சிறிய தந்தையினதும், ஆருயிர் மனைவி கதீஜா (ரலி) அவர்களினதும் மரணத்தால் நபி (ஸல்) அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்காளானார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மட்டுமன்றி இஸ்லாமிய உலகமே சோகத்தில் மூழ்கியது. இஸ்லாமிய வரலாற்றில் இவ்வாண்டு ஆமுல் ஹுஸ்ன் (عام الحزن துக்க ஆண்டு) என அழைக்கப்படுகிறது. அல்லாஹ் அவர்களைக் கொண்டு திருப்தியடைந்து மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-