அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
என்னை ஈன்றெடுத்த ஓரிரு வாரங்களிலேயே என் அன்னைக்கு ஜன்னி கண்டுவிட்டது. உடல் சீதளத்தின் உச்சத்தை எட்டி, உறுப்புகள் விறைத்துப்போய் நினைவழிக்கும் கொடிய நோய் அது!


இந்த நிலையில் பச்சை மண்ணாகக்கிடந்த எனக்குப் பாலூட்டுதல் எங்ஙனம் ?


அந்தக் காலத்தில் புட்டிப் பாலெல்லாம் புழக்கத்திற்கு வரவில்லை.


இந்த நிலையில் என் தந்தையுடன் பணிப்புரிந்த இப்ராஹிம் என்பவரின் இல்லத்தரசி அதே நேரத்தில் ஓர் அழகிய குழந்தையை ஈன்றெடுத்திருந்தார்.


அந்த இஸ்லாமிய மாது தான் ஓரிரு மாதங்கள் எனக்குத் தாய்ப்பால் ஊட்டி இன்றளவும் நான் பிழைத்திருக்கக் காரணமானவர்.


இன்று நான் முத்தமிழ்ப் பாலருந்த மூலக்காரணம் முஸ்லிம் பால்தான்!


சென்னைக்கு வந்தேன் சினிமா வாய்ப்புகள் தேடி, அவ்வப்போது கடனுக்கு சார்மினார் சிகரெட்டும், வெற்றிலை, பாக்கு, புகையிலை தந்து வாலி நீ பெரிய ஆளானப்புறம் இதுக்கான காசை உங்கிட்ட வசூல் பண்ணிக்கிறேன் என்று சளைக்காமல் கடன் தந்து என்னை ஆதரித்தது வெற்றிலை பாக்குக் கடை திரு.சுல்தான் அவர்கள்!


பன்னிரண்டு ஆண்டு காலம் நான் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் குடியிருந்தேன் மனைவி, மகனோடு... சினிமா வருமானம்தானே! முன்பின் வரும், இருப்பினும், வாடகையை நான் கொடுக்கும்போது வாங்கிக்கொண்டு உதவியவர் அந்த வீட்டின் உரிமையாளர் திருமதி.ஸுனைதா பேகம் அவர்கள்.


ஒரு நாள் இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரு நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அதுதான் திரு.மு.மேத்தா அவர்கள் வசன கவிதையாகப் புனைந்திருந்த நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு!


அதை ஒரே இரவில் வாசித்து முடித்தேன். அற்புதமோ அற்புதம், அதைப் படித்த பாதிப்பில்தான் நான் அவதார புருஷனை எழுதப்புகுந்தேன் திரு.மேத்தா, ஓர் இஸ்லாமியப் பெருமகன்.


ஆம்... மு.மேத்தாவின் முழுப்பெயர்... முகமது மேத்தா !!


இப்படி என் வாழ்வு வடிவு பெற உளியாயிருந்து செதுக்கிய உள்ளங்கள் எல்லாம் முகமதியர் குலத்தில் முளைத்தவைதான் !


- கவிஞர் வாலி-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-