அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


 

புதுடெல்லி : காவல் நிலையங்களில் புகார் பெற்றதில் இருந்து வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எதிலும் ஒளிவுமறைவு இருக்க கூடாது. எப்ஐஆர் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள், அதை இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு போட்டுள்ளது. வரும் நவம்பர் 15 ம் தேதி முதல் அமல் படுத்தப்பட வேண்டும்; மாநில அரசுகள் இதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ‘காவல் நிலையங்களில் புகார் பெற்று எப்ஐஆர் போடுவதில் ஒளிவுமறைவு இருக்க கூடாது; இதில் வெளிப்படைத் தன்மை இருக்க ேவண்டும். அப்போது தான் போலீஸ் விசாரணை மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். எப்ஐஆர் பதிவு செய்தவுடன் அதை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது தான் மக்களுக்கு, போலீஸ் விசாரணை தொடர்பாக நம்பகத்தன்மை ஏற்படும்; எப்ஐஆர் பதிவு செய்த குறிப்பிட்ட காலவரம்புக்குள் அதை இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்’ என்று இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது; புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்த 24 மணி நேரத்தில் அதை இணையதளத்தில் காவல் துறை பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் எப்ஐஆர்.ஐ இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். நீதிபதிகள் மேலும் கூறியதாவது: காவல் நிலையங்களில் எதிலும் வெளிப்படை தன்மை வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு பலன் கிடைக்கிறது என்று மக்கள் நம்ப வேண்டும்.

அந்த வகையில் போலீசின் செயல்பாடு ஒளிவுமறைவின்றி தெளிவாக இருக்க வேண்டும். புகார் மனுவை ஏற்றபின், அதை எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், எப்ஐஆர்.ஐ 24 மணி நேரத்துக்குள் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும். இன்டர்நெட் வசதி குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் இணையதளத்தில் பதிவு செய்ய 72 மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்பதை காரணம் காட்டி குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆதாயம் தேட முடியாது. எப்ஐஆர் பதிவேற்றுவதில் காவல் துறை எக்காரணம் ெகாண்டும் தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படும் எந்த விஷயமும் போதிய பலன்களை தராது. மக்களுக்கும் அப்படிதான். அவர்கள் தரும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை வெளிப்படையாக காட்ட இப்படி இணைய தளத்தில் பதிவேற்றுவது தான் சரியாக இருக்கும்.

இந்த நடைமுறைகள் எல்லாம் நவம்பர் 15 ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். காவல் துறைக்கு இது தொடர்பான ஏற்பாடுகளை அதற்குள் செய்து தர வேண்டும். தீவிரவாதிகள் தொடர்பான சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல், குழந்தைகளுக்கு எதிரான நிகழ்வுகள் போன்ற வழக்குகளுக்கு இந்த காலக்கெடுவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

* காவல் துறையில் புகார்கள் விஷயத்தில் வெளிப்படை தன்மை வேண்டும்.
* போலீஸ் என்றாலே ஒளிவு மறைவு தான் என்று மக்கள் சந்தேகிக்க கூடாது.
* புகார் பதிவு செய்த பின், இணைய தளத்தில் 24 மணி நேரத்தில் எப்ஐஆர் பார்க்க முடியும்.
* நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது இந்த நடைமுறை.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-