அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகள் செயல்படவில்லை. பஸ் மறியலில் ஈடுபட்ட தி.மு.க., கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 104 பேர் கைது செய்யப்பட்டனர்.

முழுஅடைப்பு போராட்டம்

காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்–புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு அளித்தன. வியாபாரிகளும் கடைஅடைப்பு நடத்தப்படும் என அறிவித்தனர்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல இயங்கியது. பெரம்பலூரில் புதிய, பழைய பஸ்நிலையம், கடைவீதி, காமராஜர் சிக்னல் உள்பட பல பகுதிகளில் ஒருசில பெட்டிக்கடைகள், பூக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

கடைவீதி தபால்நிலையத்தெரு, பள்ளிவாசல் தெரு, பூசாரித்தெரு ஆகிய பகுதிகளில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மளிகை கடைகள், பாத்திரக்கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்கள், டீக்கடைகள் அடைக்கப்பட்டன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிநேரம் இந்த போராட்டம் நடந்தது.

எசனை, வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், பூலாம்பாடி, வி.களத்தூர், கைகளத்தூர், நெற்குணம், வாலிகண்டபுரம், எறையூர், லெப்பைக்குடிகாடு, அகரம்சிகூர், வேப்பூர், குன்னம், மேலமாத்தூர், கொளக்காநத்தம், பாடாலூர், செட்டிகுளம் உள்பட பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய 4 தாலுகா பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 50 பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டிருந்தன. ஓரிரு தனியார் பஸ்கள் தவிர பெரும்பாலான தனியார் பஸ்கள், மினிபஸ்கள் இயங்கவில்லை. ஆனால் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கின. லாரி, வேன், கார், ஆட்டோ, ஷேர்ஆட்டோ, பயணிகள் வாகனங்களின் உரிமையாளர்கள், வாகன தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான வருவாய் ஈட்டித்தரும் கல்குவாரிகள், கிரசர் ஆலைகள் மூடப்பட்டிருந்தன.

சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிற்கூடங்கள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் சிறு, குறு, மிகச்சிறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டிருந்தன. திரையரங்குகளில் காலை காட்சி மற்றும் பகல்காட்சி ரத்து செய்யப்பட்டன. 300–க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழக்காடிகள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. போராட்டம் காரணமாக பெரம்பலூரில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

தி.மு.க.மறியல்

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.வினர். மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புறநகர் பஸ்நிலையம் முன்பு வந்தனர். அவர்களுடன் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். மறியலுக்கு ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து வழிமறித்து தடுத்து நிறுத்தினர். ஆனால் இரும்பு தடுப்புகளை அகற்றிவிட்டு புறநகர் பஸ்நிலையம் முன்பு தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம்ராஜேந்திரன், நகர செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்குமார், பாடாலூர் மதியழகன் உள்பட 61 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

இதே போல் பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க. மற்றும் விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் புறநகர் பஸ்நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, ரமேஷ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் தமிழர் தேசிய இயக்கம் சார்பில் பெரம்பலூர் புறநகர் பஸ்நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 104 பேர் கைது செய்யப்பட்டனர்.

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி போலீசார் மற்றும் நடமாடும் ரோந்துபடையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் போராட்டம் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம், வணிகம் பாதிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-