அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அரசுப் பேருந்து ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. 'TN - 45-2138 என்ற எண் கொண்ட, அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் நீங்கள் படங்களில் பார்க்கும் பேருந்து, டெப்போவிலோ அல்லது பழுதாகி நிற்கும் பேருந்தோ அல்ல; சாலைகளில் இன்றுவரை இயங்கிக்கொணடிருப்பது. தினந்தோறும் மக்களை ஏற்றிசென்று இறக்கிவிடும் பேருந்து, இந்த நிலையில் தான் இருக்கிறது. தமிழக அரசின் போக்குவரத்துறை. தரம் இல்லாத பேருந்துகளை இயக்கி, இன்னும் இப்பகுதியில் எத்தனை பேரைத்தான் கொல்லப் போகிறதோ என்று தெரியவில்லை' என கொந்தளிக்கும் வாசகங்களுடன் வலம் வருகிறது மெசேஜ்.

இந்தப் பேருந்தில் பயணம் செய்த அனுபவத்தை நம்மிடம் பகி்ர்ந்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த மாணவர் இளவழகன், ''இன்று காலை நான் ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூர் வருவதற்காக, ஜெயங்கொண்டத்தில் ரொம்ப நேரமாக பேருந்துக்காக காத்திருந்தேன். அப்போது, அரியலூர் டூ ஜெயங்கொண்டம் செல்லும் TN-45-2138 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து வந்தது.


என்னுடன் சிலர் பேருந்தில் ஏற பின்பக்கம் சென்றபோது, எல்லோரும் அதிர்ச்சியடைந்தோம். பேருந்தின் படிகளை கயிறு போட்டு தடுத்து வைத்திருந்தனர். அப்போது நடத்துநர், 'யாரும் பின்பக்கம் ஏறாதீர்கள்' என்று சத்தம் போட்டார். அதைத்தொடர்ந்து நாங்கள் யாரும் பின்பக்க படிகளில் ஏறாமல் முன்பக்க படிகளில் ஏறி பேருந்துக்குள் அமர்ந்தோம்.

சில மாதங்களுக்கு முன்பே அந்த பின்பக்க படிக்கட்டு உடைந்திருக்கும் போல. அதை பொருட்படுத்தாமல் பேருந்தை இன்னமும் ஓட்டிவருகிறார்கள். மேலும் பேருந்து ஒரு சின்ன பள்ளத்தில் இறங்கி ஏறினாலும்கூட, பேருந்தின் மொத்த பாடியுமே கழன்றுவிழுந்துவிடுவது போல ஆடி, வயிற்றில் புளியை கரைச்சது. உள்ளே உட்காரவே பயமாக இருந்தது. எல்லாரும் இந்த அச்சத்திலேயே உள்ளே அமர்ந்து இருந்தோம்.அது டவுன் பஸ்ஸாக இருந்தாலும் பரவாயில்லை. ரூட் பஸ். இப்படி இருந்தால் என்ன செய்வது. அரியலூர், பெரம்பலூர் மிகவும் பின்தங்கிய மாவட்டம். இவ்விரு மாவட்டத்திலும் பஸ் வசதியே இல்லாத சில குக்கிராமங்கள் இன்றளவும் இருக்கின்றன. சென்னை, திருச்சி போன்ற பல ஊர்களில் ஓடி பழுதடைந்த, இனி பயன்படுத்தவே முடியாது என்கிற நிலையில் உள்ள பேருந்துகளைத்தான், இந்த ஊர்களில் இயக்குகிறார்கள்.

இப்படி தரம் இல்லாத பேருந்துகளை இயக்கியதால்தான் கடந்த .2014-ம் ஆண்டு அரியலூர் அருகே உள்ள ஓட்டகோவில் என்ற இடத்தில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோதியதில் அந்த பேருந்து முழுவதும் உருக்குலைந்து, அதில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement


விசாரணையில் அந்த பேருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக எஃப்.சி., செய்யப்படாமலே இருந்ததும், இயக்கத் தகுதியற்றது என்பதும் தெரியவந்தது. இந்த பேருந்தும் அதேபோல் பெரிய விபத்தை ஏற்படுத்துவதற்கு முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இம்மாதிரி தகுதியற்ற பேருந்துகள் சாலையில் பொதுமக்களின் பயணத்திற்கு ஓடி கொண்டிருப்பதை அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அப்போது தான் இதுபோன்று விபத்துக்கள் தடுக்கப்படும்" என்றார் பயணத்தின் அதிர்ச்சி விலகாதவராக.

இது தொடர்பாக அரியலூர் பனிமனையை தொடர்புகொண்டோம். நம்மிடம் பேசிய அதிகாரி, “நாங்கள் என்ன செய்யமுடியும் சொல்லுங்க, எங்களுக்கும் பல பிரச்னைகள் உள்ளன. இங்கே பேருந்தே குறைவாகத்தான் உள்ளன. இதுபற்றி மேல் அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பல ஊர்களுக்கு பஸ் வரவில்லை என்று மக்கள் போரட்டம் நடத்துகிறார்கள். எங்கள் நிலையை யாரிடம் போய் சொல்வது என்று தெரியவில்லை. உடனே அந்த பேருந்தை சரிசெய்து அனுப்புகிறோம். இனிமேல் இந்த பிரச்னை வராது' என்றார்.அரியலுாரில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த பேருந்து, 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோலத்தான். தமிழகம் முழுக்க இப்படி காலாவதியான பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.விபத்தில்லா பயணத்திற்கு ஆயிரம் அறிவுரைகள் வழங்கும் அரசும், போக்குவரத்துத்துறையும் அந்த விபத்துக்களுக்கு காரணமான இம்மாதிரி பேருந்துகளின் மீது கொஞ்சம் கவனம் செலுத்தினால் என்ன என்பதுதான் சாமான்யனின் ஆதங்கமாக இருக்கிறது.

தொலைக்காட்சியில் வரும் குழந்தைகளுக்கான டோரா நிகழ்ச்சியில், கரடுமுரடான பாதையை கடந்து வீடு வந்துசேரும் 'டோரா அன் கோ', 'நாம ஜெயிச்சிட்டோம், நாம ஜெயிச்சிட்டோம்' என வெற்றிக்களிப்பில் கோரஸாக பாடுவார்கள். இனி தமிழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளும், தங்கள் நிறுத்தத்தில் வந்து இறங்கியதும் அப்படி பாட ஆரம்பித்துவிடவேண்டியதுதான் போல.

- எம்.திலீபன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-