அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
திருச்சி: விமானத்தில் வந்து தவறிய சூட்கேஸ் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து 4 செல்போன்கள் மாயமானது. இதுபற்றி அவரது குடும்பத்தினர் கேட்டபோது ஏர்போர்ட் அதிகாரிகள் சரியான பதில் அளிக்காததால் கூச்சல் குழப்பம் உருவாகி பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அய்யனார்புரம் 2வது தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் (25). இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் வேலைக்காக சிங்கப்பூர் சென்றார்.

பின்னர் கடந்த 8ம் தேதி சொந்த ஊர் திரும்பினார். சிங்கப்பூரில் இருந்து வந்த மலிண்டோ விமானம் மலேசியா சென்று அதன்பின்னர் திருச்சி வந்தது. திருச்சி விமான நிலையத்தில் இறங்கிய பின்னர், பயணிகளின் சூட்கேஸ்கள் மற்றும் லக்கேஜ்கள் கன்வேயர் பெல்ட்டில் வந்தது. அதில் வந்த பொருட்களை கண்டறிந்து அவற்றின் உரிமையாளர்கள் எடுத்து சென்றனர். இதில் வெகு நேரமாக ரிஸ்வான் சூட்கேசுக்காக நின்று கொண்டிருந்தார். ஆனாலும், அனைத்து பயணிகளின் பொருட்கள் வந்து எடுத்து சென்ற பின்னர் ரிஸ்வான் சூட்கேஸ் வரவில்லை.

இதுகுறித்து விமான நிலையத்தில் மலிண்டோ நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, மலேசியா சென்று திருச்சி வந்ததால் சூட்கேஸ் மிஸ்ஸாகி இருக்கலாம், நீங்கள் ஊருக்கு செல்லுங்கள் உங்களுடைய சூட்கேஸ் அங்கிருந்து பெறப்பட்டு மறுநாள் விமானத்தில் கொண்டு வந்து டோர்டெலிவரி செய்யப்படும் என கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதுபோல் நேற்று காரைக்குடியில் இவரது வீட்டிற்கு வந்த தனியார் கூரியர் ஊழியர்கள் ரிஸ்வான் சூட்கேஸ்சை ஒப்படைத்து சென்றனர்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் சூட்கேஸ்சை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த விலை உயர்ந்த 4 செல்போன்கள் மாயமாகி இருந்தது கண்டு ரிஸ்வான் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்த குடும்பத்தினர், இங்குள்ள மலிண்டோ விமான அலுவலகத்தில் இதுகுறித்து கேட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் எங்களுக்கு எதுவும் தெரியாது, இதுகுறித்து புகார் அளிக்க விரும்பினால் மலேசியா அல்லது சிங்கப்பூரில் தான் கொடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கிடையில் இதேபோல் கீரனூரை சேர்ந்த ஒருவர் தன்னுடைய சூட்கேஸ்சிலும் இதுபோல் விலை உயர்ந்த செல்போனை காணவில்லை என கூறி புகார் அளித்தார். விமான நிறுவன அலுவலக ஊழியர்கள் சரியாக பதில் கூறாததால் ஆத்திரமடைந்தவர்கள் டிக்கெட் வழங்கும் அலுவலக கண்ணாடி அருகே சூட்கேஸ்களை வைத்து மறைத்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. தகவலறிந்த ஏர்போர்ட் போலீசார் அங்கு சென்று சமாதானம் பேசி புகார் அளிக்குமாறு கூறினர். இதையடுத்து இருதரப்பினரும் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். 

எனவே வளைகுடா மற்றும் வெளிநாடுகளில் வரும் பயணிகள் சூட்கேஸ்ல் மொபைல் வைப்பதை தவிர்க்கவும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-