இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில்
இந்த 21ஆம் நூற்றாண்டு ஒரு முக்கியமான
காலகட்டம். இன்றைய முஸ்லிம்களின் வாழ்வு
குறித்து வரலாற்று ஏடுகள் மிகவும் வித்தியாசமாகவும்
விகாரமாகவும் பதிவாக்கும் என்று தெரிகிறது.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு
இன்றைய நவீன கால முஸ்லிம்கள் தங்கள்
வாழ்வின் நோக்கத்திலும் வாழும் முறையிலும்
ஒரு மேம்போக்கான இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு
மாறிப்போனதின் அடையாளம் வெளிப்படையாகத்
தெரிகிறது.
மேற்கத்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத் திணிப்பு
வீரியம் எடுத்த கடந்த 30ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள
மாற்றமாகத்தான் இது இருக்க வேண்டும்.
வரலாற்றில் வாழ்ந்து மறைந்துள்ள தமிழக முஸ்லிம்
உம்மத்தின் அறிவு சிந்தனை உழைப்பு சமூகப் பார்வை
கொடை மற்றும் வாழ்வியல் குறித்து படிக்கின்றபோது
அதை இன்றைய முஸ்லிம்களின் ( என்னையும் சேர்த்த )
வாழ்வியலோடு உரசிப் பார்க்கின்ற போது ஆச்சரியமாகவும்
ஆதங்கமாகவும் இருக்கிறது.
தங்கள் முன்னோர்களின் இயல்பை... வாழ்ந்த வழிமுறையை
விட்டு வெகு தூரம் விலகியுள்ளதை பார்க்க முடிகிறது.
இன்றைய முஸ்லிம் சமூகம் வாழ்வின் எந்தப் பகுதியிலும்
ஒரு ஆழமான அக்கறை செலுத்தாமல் இலக்கு மற்றும்
தொலை நோக்குப் பார்வை இல்லாத சமூகமாக வாழ்வை
விரட்டுகிறது என்பது தெரிகிறது.
எடுத்துக்காட்டாக முன்வைப்பதற்கு ஏராளமான பண்புகள்
வெளிப்பாடுகள் இருக்கின்றன.
அவற்றில் மிக முக்கியமானதும் முஸ்லிம்கள் நாமே நமக்கு
மிகப்பெரிய அவமானத்தை தேடிக் கொள்வதுமானது.....
முஸ்லிம்களின் கல்வி நிறுவனங்களான மதரஸாக்களின்
நிலை.
இஸ்லாமிய கலாச்சாரத்தின் ஊற்றுக் கண்.
முஸ்லிம் வாழ்வியலின் முதுகெலும்பு.
இந்திய சமூகத்தின் அறிவு வளர்ச்சியில் சமூக வாழ்வில்
ஆயிரம் ஆண்டுகள் ஆளுமை செலுத்திய அறிவு இல்லம்.
அரபு மதரஸாக்கள்
இந்த உலகின் உண்மையை உயர்வான கல்வியை முறைப்படி
தலைமுறை தலைமுறைக்கும் கடத்த வேண்டும் என்ற உயர்வான
எண்ணத்தில் முஸ்லிம் சமூகத்தின் முன்னோர் மூத்தோர் தங்களது
கடமை உணர்ந்து வாரி வழங்கிய கொடையின் அடையாளம்
கூடவே...... மார்க்கத்தின் வளர்ச்சியே எங்களின் உயிர் மூச்சு
என்று வாழ்ந்த அன்றைய முதிர்ந்த உலமாக்களின் தியாகம்
இவை
அனைத்தையும் இன்றைய முஸ்லிம் சமூகம் வீணடித்து
அவமானப்படுத்தி வருகிறது.
உயிர் வாழும் வரை வளர்த்தெடுக்க வேண்டியதும் உயிரைக்
கொடுத்தாவது காப்பாற்றப்பட வேண்டியதுமான இந்த அரபு
கலாசாலைகளை முஸ்லிம்கள் தங்களின் அலட்சியத்தாலும்
அறியாமையாலும் குறுகிய மனப்பான்மையினாலும் படிப்படியாக
மூடு விழா நடத்தும் அநியாயத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
முஸ்லிம் சமூகம் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டு
வருகிறது.
மண்ணிக்க முடியாத இந்த வரலாற்றுப் பிழைக்கு பல உலமாக்களும்
சமூக ஆர்வலர்களும் மாநில உலமா சபையயும் சாட்சியாக
இருக்கின்றனர்.
உலமாக்களில் சிலர் மட்டும் கூடி அமர்ந்து கவலைப்படுவதால்
மதரஸாக்கள் மூடப்படுவதை மதரஸா கல்வி மங்கி வருவதை
ஒருநாளும் தடுத்து நிறுத்திவிட இயலாது. மீண்டும் அதை வளர்ச்சிப்
பாதைக்கு கொண்டு வந்து விட இயலாது. அப்படி நினைப்பதும்
கூறுவதும் அறிவாளர்களிடம் வெளிப்படும் அறியாமையின்
வெளிப்பாடாக கருதப்படும்
மதரஸாக்கள் முஸ்லிம் உம்மத்தின் சொத்துக்கள்.
சமூகத்தின் மீது அக்கரை கொண்ட அனைவரும் விருப்பு வெறுப்பு
இன்றி அமர்ந்து ஆழ்ந்து சிந்தித்து மேற்கொள்ள வேண்டிய கூட்டு
நடவடிக்கை இது.
மதரஸாக்கள் முறையாக செயல்படவில்லையெனில் பாடத்திலும்
பயிற்றுவிப்பு முறையிலும் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட
வில்லையெனில் தரமான ஞானமிக்க உலமாக்களை காலத்
தேவைக்கேற்ப அது உருவாக்கவில்லையெனில் மதரஸாக்கள்
என்பது கடந்த கால கனவாகிப்போகும்.எங்கேயோ கேள்விப்பட்ட
ஒன்றாகிவிடும்
மட்டுமல்ல.....மதரஸாக்களும் அதன் தயாரிப்புகளான
உலமாக்களும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவர்களாக
மாறிவிடுவர்
ஆனால் மார்க்கக் கல்வி மக்களிடமிருந்து மறையாது.
மார்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை
இன்று வீரியமாகி வருகிறது. மக்கள் அதை எங்கிருந்து
யாரிடமிருந்து முறையாக பெற வேண்டுமோ அப்படி பெறாமல்
முறை தவறி பெறும் ஆபத்துகள் பெருகும். இப்போது பல
இடங்களிலும் அப்படிப்பட்ட நிலை உருவாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல் உலமாக்கள் கல்வியாளர்கள் சமூக
அமைப்புகளின் தலைவர்கள் சமுதாயப் புரவலர்கள் கூடி அமர்ந்து
மதரஸாக்களை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுப்பதற்கான ஒரு 20 ஆண்டு
திட்டத்தை திறந்த மனதோடு வடிவமைக்க வேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பை மாநில ஜமாஅத்துல் உலமா தான்
செய்ய வேண்டும்
- CMN SALEEM
சமூகநீதி முரசு,தலையங்கம்
குறிப்பு :
தமிழக மதரஸாக்களில் மாணவர்களின் எண்ணிக்கை மங்கி வருவது
குறித்த ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள சென்னை ஒயிட் ஹவுஸ்
நிறுவனம் அளித்துள்ள புள்ளி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.