அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அறியாமையில் இந்தியா வரும் வெளிநாட்டு இந்தியர்கள்.

நேற்றுமுன்தினம் வளைகுடா நாட்டிலிருந்து வாங்கிவரப்பட்ட டிவிக்கு மதுரை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் விதித்த வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து உடைக்கப்பட்ட டிவி புகைப்படத்துடன் பேஸ்புக் பதிவுகள் பார்த்திருப்பீர்கள்.

அறியாதவர்களுக்கு குறிப்பிடப்பட்ட அச்சம்பவம் பற்றி முகநூலில் வந்தவை சுருக்கமாக இதுதான்…..

அதாவது, ஒரு வளைகுடா சகோதரர் Elekta Smart TV 32″ வாங்கி வந்துள்ளார். அதற்கு கஸ்டம்ஸ் அதிகாரிகள் Rs 7000/- வரி கட்ட வேண்டும் என்றார்கள். அந்த சகோதரர் அதிகபட்சம் Rs 3000/- வரை மட்டுமே வரி கட்ட இயலும் என கெஞ்சியுள்ளார். அதிகாரிகள் மறுக்கவே அவர் டிவி பேக்கிங்கை பிரித்து, டிவியைஅங்கேயே தரையில் வீசி உடைத்துப் போட்டுவிட்டு போயுள்ளார். நல்லவேளை… அதிகாரிகளின் தலையில் போட்டு உடைக்கவில்லை.

முதல் விஷயம் :-

பொதுவாக இந்திய அரசாங்கம் இறக்குமதியாகும் வெளிநாட்டு பொருட்களுக்கு ஏகப்பட்ட வரி போடுகிறது. அதனால்தான்… அவை வெளிநாட்டில் விலை குறைவாகவும் இந்தியாவில் விலை அதிகமாகவும் உள்ளது.

இந்நிலையில்…

வரி இல்லாமல் குறைந்த விலைக்கு வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கி இந்தியா கொண்டுவரப்படும் பொருட்களுக்கு இந்திய விமான நிலையங்களில் கஸ்டம்ஸ் டூட்டி (சுங்க வரி) வசூலிப்பது வழக்கம். சொல்லப்போனால் அது கட்டாயம். அப்போதுதான்… உள்நாட்டு சந்தை பிழைக்கும்.

இந்த வரி விகிதம் பொருளுக்கு ஏற்ப அதன் விலைமதிப்பிற்கேற்ப மாறுபடும். பொதுவாக தங்கம், வெள்ளி போன்றவற்றிற்கு அடிப்படை விலையிலிருந்து 36.05% சுங்க வரியும் மற்ற மின்னணு பொருட்களுக்கு அதைவிட சிறிது குறைவான வரி விகிதமும் முன்னாடி வசூலிக்கப்பட்டு வந்தது.

வளைகுடா நாடுகளில் தங்க நகைகளுக்கு சேதாரம் 0%. இந்தியாவில் 10% முதல் 25% வரை சேதாரம் என்பதாலும் பின்னர் செய்கூலி மற்றும் வாட்(VAT)வரி எல்லாவற்றையும் மிச்சம் புடிப்போம்… என்று பெரிய அறிவாளிகளாக குறைந்த விலைக்கு வளைகுடாவில் தங்கம் வாங்கி வந்து கஸ்டம்ஸில் 36% சுங்கவரி கட்டும் முட்டாள்கள் தான் இந்திய அரசுக்கு இன்றைய அவசியத் தேவை..!

கஸ்டம்ஸை ஏய்த்து மாட்டினால்… ‘தங்கம் கடத்தியபோது கையும் களவுமாக கைது’ என்று செய்தியில் வருவீர்கள்..! (இது நீங்கள் ‘யார்’ என்பதை பொறுத்தது)

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் தட்டை திரை கொண்ட டிவி (Flat Screen TV) களுக்கு தங்கம் வெள்ளியைப் போன்றே 36.05% வரி வசூலிக்க ஆரம்பித்தது. காரணம்… அந்தளவுக்கு அந்த டிவிகளுக்கு உள்நாட்டில் அரசு வரி அதிகமாக போட்டுள்ளது. நீங்கள் வெளிநாட்டிலிருந்து சரியான விலைக்கு டிவி வாங்கி வந்தால் அப்புறம் உள்நாட்டில் டிவி சந்தை படுத்துவிடுமே.

முதலில் 32” க்கு மேல் உள்ள அளவிற்கு மட்டும் 36% சுங்க வரி வசூலிக்க ஆரம்பித்து, பிறகு, நான் Sony LCD 32″ Flat டிவி டூட்டிஃப்ரீயாக 2013 Julyயில் கொண்டு போன அடுத்த மாசத்திலிருந்துதான்… அனைத்து சைஸ் டிவிக்கும் வரியை நீட்டித்தார்கள். காரணம் எல்லா சைஸ் டிவிக்கும் உள்நாட்டில் அதிக வரி விதிக்கப்பட்டது.

இரண்டாம் விஷயம்:–

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் பொருட்களின் அடிப்படை விலை என்பது நாம் வாங்கி வரும் Bill / Invoice மதிப்பு அல்ல. இந்தியாவில் விற்கப்படும் விலையை கவனித்து இந்திய அரசாங்கமே ஒரு அடிப்படை விலையை உங்களின் வளைகுடா பொருட்களுக்கு நிர்ணயித்து, அதிலிருந்து மேற்குறிப்பிட்ட அளவு வரி விகிதத்தை வசூலிக்கும். அந்த விலை தற்போதைய நிலவரத்தின்படி மாற்றி அமைக்கப்பட்டு கொண்டே இருக்கும். நாம் தள்ளுபடியில் வாங்கியதாக இருந்தாலும் வழக்கமான விலையில் வாங்கியதாக இருந்தாலும், ஒரிஜினல் பில்லை காட்டினாலும்… அந்த மதிப்புலாம் கஸ்டம்ஸ் வரி கணக்கில் கண்டு கொள்ளப்படமாட்டாது.

இந்திய அரசாங்கம் நிர்ணயித்த அந்த விலைப்பட்டியலை கலால் மற்றும் சுங்க வரித்துறை இணையதளத்தில் தேடமுற்பட்ட போது அந்த இணையதளம் திறக்கவில்லை. வேறு சில இணையதளங்களில் தேடியபோதுwww.nricafe.com என்ற தனியார் இணையதளம் அதிகாரப்பூர்வ சில இணையதளத்தில் இருந்தும், சில சுங்க அதிகாரிகளிடம் பேட்டி எடுத்தும் சேகரித்தாக கூறி ஒரு விலைப்பட்டியலை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டுள்ளார்கள். அந்த லிங்க்http://nricafe.com/2016/02/indian-customs-duty-lcd-led-tv/. மேலும் அந்த விலைப்பட்டியலில் குறிப்பிடப்படாத TV-களுக்கு, அதே சைஸ்சில் அதற்கு இணையான TV-ன் வரியை வசூலித்தக் கொள்ள சுங்க அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போதைய சம்பவம்:–

மேலே கூறிய இரண்டு விஷயங்களை கருத்தில் கொண்டு நேற்று நடந்த சம்பவத்தை அணுகுவோம்.

அவர் Elekta Smart TV 32″ டிவியை 250 திர்ஹத்திற்கு (50%?) தள்ளுபடி விலையில் (இந்திய மதிப்பு சுமார் Rs 5000க்கும் சற்று குறைவு) வாங்கியதாக முகப்புத்தக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சவூதியில் souq.comல் ஆன்லைன் ப்ரைஸ்… 499 ரியால்.( http://saudi.souq.com/…/elekta-tv-32-inch-led-hd-eled-32…/i/) சுமார் 8700 ரூபாய்.

ஆனால், இந்திய சட்டத்தின் படி அந்த விலை கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. அதன் மதிப்பு இந்தியாவில் சுமார் Rs 20000 மாகத்தான் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் 36.05% வரியாக Rs 7000 கேட்டுள்ளார்கள். அதற்கு அந்த சகோதரர் Rs 3000 வரை தருவதாக கெஞ்சியுள்ளார்.

சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரியை விட குறைவாக வரி வாங்கினால் அதற்கான ரசீதை கஸ்டம்ஸ் அதிகாரிகளால் தர இயலாது. ரசீது தராமல் பணம் வாங்கினால் அது லஞ்சமாக ஆகிவிடும். அதற்கு அந்த அதிகாரிகள் மறுத்துள்ளனர் என்பதும் ஏற்புடையதே. இதனால், நொந்துபோன அந்த பயணி கோவமாக TV-ஐ உடைத்துப்போட்டு விட்டு வந்துள்ளார்.

இதில் தவறு எங்கு உள்ளது என்றால்…
இந்திய அரசின் சுங்கவரி சட்டத்தில்தான்..!

இந்த குதர்க்கமான சட்டத்தை போட்டவர்களை எதிர்க்காமல் அதை அப்படியே அமல்படுத்தும் முட்டாள் அதிகாரிகள் பரிதாபத்துக்கு உரியவர்கள். பிரச்னையை உணர்ந்துகொண்டு, கஸ்டம்ஸ் டூட்டி பில் போடாமல் ஏதோ கொஞ்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு வெளியே அனுப்புபவர்கள்தான் இப்போது அதிகரித்து வருகிறார்கள். ஆகமொத்தம், ‘டோட்டல் சிஸ்டம் ஃபெயிலியர்’ என்பதையே இதெல்லாம் நமக்கு உணர்த்துகிறது.

இங்கே உள்ள சட்டங்கள் எல்லாம் மேம்போக்கான பார்வையில் முட்டாள்கள் இயற்றிய கூமுட்டைத்தனமான குப்பைகளாகத்தான் தெரியும்.

ஆனால்… ஆழமாய் சிந்தித்து பார்த்தால்…

படுமோசமான நயவஞ்சகர்களால் பலநாள் திட்டம் போட்டு இயற்றப்பட்ட, கொள்ளை முதலாளிகளுக்கு சாதகமான சட்டங்கள் என்பது புரியும்.

5000 பெருமான டிவியை வரி & இலாபம் எல்லாம் சேர்த்து…. 20000க்கு விற்கும் சுரண்டல் அரசை ஆதரிப்பதை இந்தியர்கள் எப்போது நிறுத்திவிட்டு அரசின் தவறான சட்டத்தை எதிர்க்கிறார்களோ…

அப்போதுதான்…
இந்தியாவுக்கு ஊழலற்ற பொருளாதார விடிவுகாலம் பிறக்கும். அதுவரை இதுபோன்ற சட்டங்களில் சிக்கும் முட்டாள்களாக நாம் இருக்கவேக்கூடாது.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லும் போது அந்த நாட்டிற்கு எவற்றை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது, எவற்றிற்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது, எதை எங்கு வாங்கினால் இலாபம் என்பதை எல்லாம் நாம்தான் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறாக தெரிந்து கொள்ளாமல்… ‘நான் வேர்வை சிந்தி உழைத்தேன், கஷ்டப்பட்டு வாங்கிவந்தேன்’ எனக்கூறி இந்திய சட்டப்படி வரி போடும் பொம்மை அதிகாரிகளை வசைபாடுவதால் எவ்வித பயனுமில்லை சகோஸ்..!

-முஹம்மது ஆஷிக்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-