அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் நகரில் சுகாதாரமற்ற முறையில் நடத்தப்படும் இறைச்சிக் கடைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பெரம்பலூர் நகராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் ஆடு, கோழி, மீன், பன்றி இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் நகரில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் உள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் திறந்தவெளியில் செயல்பட்டு வரும் இந்தக் கடைகளின் முன் சுகாதாரமற்ற முறையில் ஆடு, கோழி, மீன் ஆகியவற்றை அறுத்து விற்கின்றனர். காலையில் இறைச்சி விற்பனை நடைபெறும் கடைகள், இரவில் சிற்றுண்டி கடைகளாகவும், கோழி, மீன் வறுவல் கடைகளாகவும் மாறிவிடுகின்றன. இந்த இறைச்சிக் கடைகளின் கழிவுகள் சாலையிலும், சாக்கடையிலும் கொட்டப்படுகின்றன.

இதனால், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுகளை உண்பதற்காக சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

நகராட்சிப் பகுதியில் சுகாதார அலுவலரின் சான்று பெற்று, நகராட்சி ஆடு அறுக்கும் தொட்டியில் வைத்து ஆடுகளை அறுத்து விற்பனை செய்ய வேண்டும் என்பது விதிமுறை.

இதற்கென நகராட்சி நிர்வாகம் சார்பில் இறைச்சிக் கடைக்காரர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், இந்த விதிமுறையை பின்பற்றாமல், நகராட்சி குத்தகைதாரர்கள் இறைச்சிக் கடைகளுக்கு நேரடியாகச் சென்று கட்டணம் மட்டும் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் சாலையோர இறைச்சிக் கடைகளை தடைசெய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை எனவும், பெரும்பாலான இறைச்சிக் கடைகளுக்கு உரிமம் இல்லையெனவும் கூறப்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் சார்பில், பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் 2006-07 ஆம் ஆண்டு ரூ. 20 லட்சத்தில் நவீன ஆடு அறுக்கும் கூடம் கட்டப்பட்டது. ஆனால், 8 ஆண்டுகள் கடந்தும் இந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இந்தக் கட்டடம் இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது.

இதுகுறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த இறைச்சிக் கடைகள் செயல்படும் பகுதிகளில் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-