அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் சாலை விபத்துகளில் சிக்குவோர், சிகிச்சை பெற தாமதமாவதால் உயிரிழக்கும் சோகம் தொடர்கிறது. இதைத் தவிர்க்க, நெடுஞ்சாலையில் அதி நவீன வசதிகள் கொண்ட அவசர மற்றும் விபத்து கால சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நேரிடுவது வாடிக்கையாகிவிட்டது. விபத்தில் சிக்குவோரை மீட்டு, உடனடியாக அவசர சிகிச்சை மேற்கொள்ள அனைத்து வசதிகளைக் கொண்ட அரசு மருத்துவமனை நெடுஞ்சாலைப் பகுதியில் இல்லாததால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழக்கின்றனர்.


பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் கடந்த ஆண்டு 43 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு 8 மாதங்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆண்டுக்கு சராசரியாக 250 விபத்துகள் நேரிடுகின்றன.

5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மரியம் பிச்சை சென்னைக்கு பதவியேற்பு விழாவுக்குச் செல்லும் வழியில் பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

பெரம்பலூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் இருந்திருந்தால் உரிய நேரத்தில் சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று அப்போது பலரும் கருத்து தெரிவித்தனர். அவரது உயிரிழப்புக்குப் பின்னரும் அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதுதான் சோகம். இதனால், இந்த தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளில் சிக்குவோர் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரை இழப்பது தொடர்கிறது.

தாமதத்தால் தொடரும் உயிரிழப்பு…

இதுகுறித்து சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா கூறியதாவது:

இந்த தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்துக்கு அடுத்து அனைத்து வசதிகளைக் கொண்ட அரசு மருத்துவமனை திருச்சியில்தான் உள்ளது. அதாவது விழுப்புரம்- திருச்சி இடையே சுமார் 170 கி.மீ. தொலைவுக்கு இடைப்பட்ட இடத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட அவசர சிகிச்சை மையம் எங்கும் இல்லை.

விபத்தில் சிக்கிய நபர்களைக் காப்பாற்ற உடனடியாகச் செயல்பட வேண்டிய ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானது. தாமதிக்கப்படும் ஒவ்வொரு விநாடியும் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பைப் பறித்துவிடும்.

தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பெரம்பலூர் நகருக்குள் 5 கி.மீ. தொலைவில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் கடந்து இந்த மருத்துவமனையை அடைய பல நிமிடங்கள் ஆகும். இந்த தாமதம் காரணமாக விபத்தில் சிக்கிய பலர் இறந்துவிடுகின்றனர்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விபத்தில் சிக்கியோருக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் சிகிச்சைகளான மூளை நரம்பியல், தண்டுவடம், இதய அறுவை சிகிச்சை, ஜீரண மண்டல உறுப்பு சிகிச்சை சிறப்பு மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் கருவி உள்ளது. ஆனால், அதை இயக்கி அறிக்கை தரக்கூடிய கதிரியக்க சிகிச்சை நிபுணர் இல்லை. இதனால், விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும் நபர்களுக்கு உடனே ஸ்கேன் எடுத்து பாதிப்பு குறித்து அறிந்து சிகிச்சை அளிக்க முடிவதில்லை. விபத்தில் சிக்கியோரை மீட்கச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் அருகிலுள்ள பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டுச் சென்றுவிடும்.

அங்குள்ள மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சையளித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கின்றனர். இந்த தாமதத்தில் விபத்தில் சிக்கியோர் பலர் உயிரிழக்கின்றனர்” என்கிறார்.

வேகத்தைக் கட்டுப்படுத்த நெடுஞ்சாலையில் ஆங்காங்கே தற்காலிக இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிவேகமாக வரும் வாகனங்கள் இந்த தடுப்புகளில் மோதி விபத்தில் சிக்கிக்கொள்வதும் வழக்கமாக உள்ளது. நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் மற்றும் தடுப்புகள் அமைக்கக்கூடாது என்ற விதியை காவல் துறையினரே மீறுகின்றனர். அதிவேகமாக செல்வதால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கவே இந்த ஏற்பாடு என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

தூக்கமின்மை, அசதியால்…

“ஸ்பீட் ரேடார் கன் எனும் கருவி மூலம் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை அமல்படுத்தி வருகிறோம். 100 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாகச் செல்லும் வாகனங்கள் குறித்து நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸார் அருகிலுள்ள சுங்கச் சாவடிக்கு தகவல் தெரிவித்து அபராதம் வசூலிக்க அறிவுறுத்துகின்றனர்.

முதல் முறை விதிமீறும் வாகன ஓட்டிக்கு ரூ.400 அபராதம், அடுத்தமுறை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தக் கருவியை நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது இடம் மாற்றி வைத்து, அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போதிய தூக்கமின்மை மற்றும் அசதி காரணமாக வாகன ஓட்டுநர்கள் நிதானமிழந்து விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.

இதை ஓரளவுக்குத் தவிர்க்க சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கு சுயிங்கம், மிட்டாய், சாக்லேட் ஆகியவற்றை இலவசமாக வழங்கலாம். வாயில் எதையாவது மென்றுகொண்டிருந்தால் தூக்கம் மற்றும் உடல் அசதியை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்” என்கிறார்கள் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸார்.

4 இடங்களில் மேம்பாலம்…

வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அருள் கூறியபோது, “பெரம்பலூரில் சிறுவாச்சூர், மங்களமேடு, பாடாலூர்- ஊட்டத்தூர் பிரிவு ரோடு, தண்ணீர்பந்தல் ஆகிய ஊர்களில் அவசியம் மேம்பாலம் அமைக்க வேண்டும். சிறுவாச்சூரில் பிரசித்திபெற்ற மதுரகாளியம்மன் கோயில் மற்றும் சந்தை உள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் சாலையைக் கடக்க நேரிடும்போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மங்களமேடு அருகே எரையூரில் சர்க்கரை ஆலை மற்றும் கோயில்கள் உள்ளன. இங்கும் சாலையைக் கடக்கும் பலர் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த 4 இடங்களில் மேம்பாலம் அமைத்தால் பல விபத்துகளை தவிர்க்க முடியும்” என்றார்.

என்னதான் தீர்வு?

பெரம்பலூர் நான்கு ரோட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அரசு கண் மருத்துவமனை இப்போது செயல்படாமல் பூட்டிக்கிடக்கிறது.

அரசுக்குச் சொந்தமான இந்த மருத்துவமனை கட்டிடத்தை அப்படியே விபத்து கால அவசர சிகிச்சை மையமாக மாற்றலாம். அதில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி உள்ளிட்ட பரிசோதனைக் கருவிகள் கொண்ட ஒரு கட்டமைப்பை மட்டும் ஏற்படுத்தினால் போதும். 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் சிறப்பு மருத்துவர்கள், கதிரியக்க நிபுணர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் அங்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் இந்த யோசனை உடனடியாகச் செயல்படுத்தப்பட்டால் விபத்துகளால் உயிரிழப்பு தொடர்வது தடுக்கப்படும். உரிய அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-