அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
குன்னம் அருகே வீட்டுக்கதவை உடைத்து 30 பவுன் நகை – ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக தனித்தனி இடங்களில் வைக்கப்பட்டிருந்ததை அறிந்து மர்ம ஆசாமிகள் அவற்றை அள்ளி சென்றுள்ளனர்.

வெளிநாட்டு வேலை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நமையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆசை தம்பி (வயது 42). இவர் கடந்த 15 வருடமாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (30), மகள் மாளவிகா (13), மகன் ஸ்ரீதர் (9), ஆசை தம்பியின் தாயார் சரஸ்வதி (65). தமிழரசி தனக்கு சொந்தமான நெக்லஸ், தோடு, மோதிரம், தங்க சங்கிலி என 30 பவுன் தங்க நகைகளை கீழப்புலியூரில் உள்ள வங்கியில் அடகு வைத்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நகைகளை மீட்டு, அவற்றை சூட்கேஸ், பீரோ, கட்டிலுக்கு அடியில் என ஒவ்வொரு இடத்திலும் பிரித்து வைத்திருந்தார். பாதுகாப்பாக இருக்கும் என கருதி அவர் நகைகளை இவ்வாறு வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி, தமிழரசி, மாளவிகா, ஸ்ரீதர் ஆகிய 4 பேரும் மாடி வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கினர். இதற்கிடையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்புறம் உள்ள கரும்பு தோட்டத்தின் வழியாக வந்துள்ளனர். பின்னர் வீட்டின் பின்புற கதவை கடப்பாறையால் நெம்பி உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். தொடர்ந்து அந்த ஆசாமிகள் ஒவ்வொரு இடத்திலும் நகை–பணத்தை தேடியுள்ளனர்.

நகை–பணம் கொள்ளை

சூட்கேஸ், பீரோ, கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு கரும்பு தோட்டம் வழியாக தப்பி சென்று விட்டனர். இந்நிலையில் தொடர்ந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால் வீட்டு மாடியில் படுத்து இருந்த தமிழரசி எழுந்து வந்து பார்த்த போது, பூட்டிய கதவுகள் அனைத்தும் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்றுபார்த்த போது, நகை மற்றும் பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. 2 சூட்கேசுகளையும் காணவில்லை. இது குறித்து தமிழரசி மங்களமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு செழியன், சப்–இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள், தடவியல் ஆய்வாளர்கள் ஆகியோர் கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் சம்பவ நடைபெற்ற இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு கரும்பு தோட்டத்திற்குள் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. இதனையடுத்து போலீசார் கரும்பு தோட்டத்துக்குள் சென்று பார்த்த போது, ஒரு சூட்கேஸ் மற்றும் பை கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். வெளிநாட்டு பொருட்கள் இருந்த மற்றொரு சூட்கேஸ் கிடைக்கவில்லை.

மர்ம ஆசாமிகக்கு வலைவீச்சு

தமிழரசி வங்கியில் இருந்து நகைகளை மீட்டு வீட்டில் வைத்திருந்ததை அறிந்த யாரோ மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். நகை மற்றும் பணம் திருட்டு போகாமல் இருக்க தனித்தனி இடங்களில் தமிழரசி பாதுகாப்பாக வைத்திருந்தார். அதையும் அறிந்த நபர்களே கொள்ளையடித்துள்ளனர். இதனால் யாராவது தெரிந்த நபர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-