அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், ஆகஸ்ட் 12
அமீரகத்திற்கு விசிட் விசாவில் வருபவர்கள் அல்லது ரெஸிடன்ட் விசாவில் தங்கி இருப்பவர்கள் மிகக்கவனமாக சில விஷயங்களை தவிர்ந்து கொள்ளாவிட்டால் அது சிறை தண்டனையிலோ அல்லது அபராத விதிப்பிலோ கொண்டு போய் நிறுத்தும். ஏனெனில் இதில் பல விஷயங்கள் சில நாடுகளில் மிகச்சாதாரணமாக நடைபெறும் செயல்கள், சர்வ சாதாரணமாக அவர்கள் தங்களின் நாடுகளில் கடைபிடித்து வருபவை அமீரகத்தில் குற்றங்களாக கருதப்படுகின்றன என்பதை நினைவில் அழுத்தமாக நிறுத்த வேண்டும். அதில் முக்கியமான 14 அம்சங்களை சற்று பார்ப்போம்.

1. முத்தமிடுதல் / தொடுதல்:
யாரையும் முத்தமிடவோ அல்லது கட்டித் தழுவுதலோ கூடாது. அதிகபட்சம் கை கொடுக்கலாம். அதுவே, திருமணமானவர்களாக இருந்தால் பொதுவெளியில் முகமன் கூறுவதுடன் நிறுத்திக் கொண்டு கை கொடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

2. திட்டுதல் / அசிங்கமாக சைகை செய்தல்:
கை விரல்கள், நாக்குகளை கொண்டு அசிங்கமாக சைகை செய்தல், தெருவில் ஆத்திரப்பட்டு கத்தி பேசுதல் ஆகியவை போலீஸ் நடவடிக்கைக்கு உட்பட்டது.

3. அனுமதி இன்றி போட்டோ எடுத்தல்:
அனுமதியின்றி எந்த மனிதரையும் குறிப்பாக பெண்களை அல்லது குடும்பத்தினர்களை போட்டோ எடுப்பது சட்டப்படி தண்டம் கட்ட வேண்டிய தண்டனை.

4. மத நிபந்தனை:
வெளிநாட்டினர் அவர்களுடைய மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனுமதிக்கப்படுவர் ஆனால் அந்த அனுமதியை இஸ்லாத்தையோ அல்லது பிறர் மதத்தையோ இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்தினால் சிறை அறை வரவேற்கும்.

5. அரசியல் சச்சரவுகள்:
அரசியல் சச்சரவுகளை பதிவேற்றினாலோ அல்லது பொது வெளியில் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ நாடு கடத்தப்படுவது நிச்சயம்.

6. தங்குமிடங்களை அந்நியருடன் பகிர்ந்து கொள்ளுதல்:
திருமணமான தம்பதியர் அல்லது உறவினர்களை தவிர மற்ற அந்நிய ஆணும் பெண்ணும் தனது தங்குமிடத்தை, ஹோட்டல் அறையை அல்லது காரில் தங்கினால் அதற்குப் பிறகு தங்கும் இடமே வேறு தான்.

7. ஆபாச ஆடைக்கு தடை:
ஆபாச ஆடை அணிந்து தெருக்களில், மால்களில், உணவகங்களில் மற்றும் பொது வெளிகளில் நடமாடக்கூடாது. கடற்கரையில் மட்டும் நீச்சலுடை அணியலாம் என்றாலும் சூரிய குளியலுக்காக அந்தரங்கப் பகுதிகளை வெளியே தெரியும்படி அரைகுறை ஆடை அணியக்கூடாது.

8. மதுபானம்:
துபையில் இது ஹோட்டல்களில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பொது வெளியிலோ அல்லது தங்குமிடத்திலோ அல்லது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதற்கோ அனுமதி இல்லை.

9. ஒட்டுனர் கட்டுப்பாடு:
பிற வாகனங்களை நெருக்கமாக பின் தொடர்தல், ரேஸ் விடுதல், அதிவேகம், லேன் மாறி மாறிச் செல்லுதல் என நீங்கள் எல்லை மீறும் போதெல்லாம் உங்களுடைய வாகனம் உட்பட ஜெயிலுக்குள் செல்ல வேண்டி வரும்.

10. போதை வஸ்த்துக்கள்;
போதைப் பொருட்கள் ஒட்டு மொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளன அது உங்களுடைய நாட்டில் அனுமதிக்கப்பட்ட மருந்து வடிவில் இருந்தால் கூட.

11. பாலியல் துன்புறுத்தல்கள்:
பெண்களுடன் (குறிப்பாக அமீரக பெண்களுடன்) பொது இடங்களில் தனித்து பேசுவது, அவர்களுடைய அனுமதியின்றி போட்டோ எடுப்பது மற்றும் பின் தொடர்ந்து சென்று தொல்லை தருவது போன்ற பாலியல் தொந்தரவு குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் நெற்றிக்கண் திறக்கும் வரை பொறுமையாக காத்திருக்காது.

12. முறையற்ற தொடர்புகள்:
முறையற்ற தொடர்புகள் மூலம் கர்ப்பமானால் சம்பந்தப்பட்ட இருவருக்கும் தண்டனை உண்டு மேலும் அவர்களுடைய திருமணம் விண்ணப்பம் மற்றும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் போன்றவை நிராகரிக்கப்படும்.

13. புகை பிடித்தல்:
அரசு அலுவலகங்கள், மால்கள் மற்றும் பொது இடங்களில் புகைப் பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. புகைப் பிடிப்போர் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே புகைக்கலாம்.

14. ஆவணங்கள் இல்லாமல் வேலை பார்ப்பது:
முறையான அனுமதியின்றி அமீரகத்தில் வேலை பார்ப்பது சட்டப்படி குற்றம், மீறினால் "உள்ளே" இருந்த பிறகு ஊருக்குத் தான் போகலாம்.

குறிப்பு: பல விஷயங்கள் சுய தணிக்கைக்கு உட்பட்டே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.


Source: Scoop Empire / Msn
நன்றி:அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-