அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இப்போ குற்றாலம் சீசன். நீங்கள் இந்த பகுதி சுற்றுலா சென்றால் 
மாஞ்சோலைக்கும் கொஞ்சம் சென்று வாருங்கள்.
"சொர்க்கம்" என்று ஒன்று வானில் எங்கோ இருப்பதாகவும், அங்கு பாலாறு, தேனாறு என நாம் நினைத்துப் பார்த்திடாத பல அதிசயங்கள் இருப்பதாகவும் சிறு வயது முதலே கேட்டிருப்போம். ஆனால், நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம் இல்லையா? சொர்க்கம் எப்படி இருக்கும் தெரியுமா? சொர்க்கம் என்றுமே ஒரே இடத்தில் இருப்பதில்லை, மாறாக உலகம் முழுக்க சிதறிக் கிடக்கிறது. அப்படியான சொர்க்கத்தின் ஒரு கீற்றுதான் 'மாஞ்சோலை'!

சொர்க்கத்திற்கு ஒரு பயணம் சென்று வரலாமா?

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறுக்கு அருகில் இருக்கும் ஒரு மலை சுற்றுலாத் தலம்தான் மாஞ்சோலை. கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவியைத் தாண்டி பல கொண்டை ஊசி வளைவுகளை கடந்து பயணித்தால் 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம். இந்த பாதை முழுவதும் உள்ள மரங்கள் நிறைந்த தேயிலைத் தோட்டங்களைக் கடந்து செல்வதும் ஒரு ரம்மியமான அனுபவம்!

மாஞ்சோலை வெறும் தேயிலைத் தோட்டமோ, சுற்றுலாத் தலமோ மட்டுமன்றி, இது புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


கல்லிடைக்குறிச்சியைத் தாண்டி மலை ஏற ஆரம்பித்ததும் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தையும், அருவியையும் தாண்டி மாஞ்சோலை செல்ல வேண்டும். இங்கு அருவி மிக முக்கியமான இடம். பளிங்கு போன்ற சுத்தமான நீரை இங்கு காண முடியும். சொர்க்கத்தின் தேனாறு, பாலாறு எல்லாம் தோற்றுவிடும் இந்த நீருக்கு முன்னால்.

அருவிக்கு மேல் பயணித்தால் மாஞ்சோலை. சுட்டெரிக்கும் வெயில் மெல்ல மெல்ல தணிந்து, குளிர் காற்று நம் தேகத்தைத் தழுவுவதை உணர முடியும். அதுவரை கிடைக்கும் செல்போன் டவர் தடுமாறி மெல்ல உயிரிழந்து விடும். இயற்கை உலகிற்கு நுழைந்துவிட்டோம் என்பதற்கு அதுதான் முதற் சமிக்ஞை. அதன்பிறகு செல்ஃபோன் நச்சரிப்புக்கு பதில் நம் காதுகளுக்கு சில்வண்டுகளின் ஓசைதான் கேட்கும்.
போகும் பாதை எங்கும் கண்ணுக்கு குளுமையான பச்சை, பச்சை, பச்சை மட்டுமே. புலிகள், யானைகள், கரடிகள் போன்ற மிருகங்கள் இரவு நேரத்தில் உலாவுவது சகஜம் என்றாலும், பகலில் நம் கண்ணுக்குத் தென்படுவது அரிது.

அணிலுக்கு 'ஹாய்'

அப்படி முதலில் நம்மை வரவேற்பது "மர அணில்". அணிலுக்கு "ஹாய்" சொல்லிவிட்டு மேலும் அடர்ந்த காட்டிற்குள் சென்றால், மயிலின் அகவல் சத்தம் நம்மை வரவேற்கும். அழகிய தோகையை தோரணமாக தொங்கவிட்டுக் கொண்டு மரத்தில் ஆண் மயில் அமர்ந்திருக்க, எங்கிருந்தோ பெண் மயில் அகவும் சத்தம் கேட்டது. "வந்தவங்கள வாங்கன்னு சொல்லுங்க" என்ற தொனியில் ஒரு குரல். நம் கலாச்சாரம் வாழும் ஒரே இடம் காடு என்பதை உணர்த்தியது மயில்!!!

Advertisement


வெயிலே ஊடுருவாத காட்டில் சென்றுகொண்டே இருக்க, திடீரென தலைவாழை இலையை விரித்து நமக்காய் வைக்கப்பட்ட விருந்தாய் ஒரு அகண்ட புல்வெளி. அருகில் ஒரு ஏரி. ஆனால், அங்கு மனிதர்களுக்குத் தடை. தடை மட்டும் இல்லையெனில் அங்கேயும் நீருக்குப் பதிலாக மனிதர்கள் பிளாஸ்டிக்கை மிதக்க விட்டிருப்பார்கள்.

செருப்பைக் கழற்றிவிட்டு புல்லில் நடந்து செல்லும்போது ஏற்படும் ஒரு சுகத்தை அனுபவித்திருக்கிறீர்களா. காலில் படும் புல்லின் ஈரம் நம் இதயம் வரை ஊடுருவும் அந்த சுகத்தை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும். திகட்டவே செய்யாத இயற்கையின் விருந்தை நன்கு புசித்து விட்டு மேலும் பயணிக்கலாம்.

சாலையில் விளையாடும் குழந்தைகள் நம்மைக் கண்டதும் இரு கைகளையும் கூப்பி "வாங்க" என்று ஆச்சர்யப்படுத்துகிறார்கள். "பசங்களா, ஒரு போட்டோ எடுத்துக்கலாமா", என்றால் " எதுக்கு அக்கா ஃபோட்டோ? எங்கள ஞாபகம் வெச்சுக்கோங்க. போட்டோ எடுத்தா இங்க உள்ள பூச்சி, பறவைக்கெல்லாம் ஆகாதாம்" என்றாள் ஒரு சிறுமி. இயற்கை மீதான அந்த குழந்தைகளின் பரிவு நம்மை ஆச்சர்யப்படுத்தியது.புகைப்படம் எடுக்கையில் வெளியாகும் ஒரு வகை கதிர்வீச்சு வன உயிரிகளுக்கு நரம்பு தளர்ச்சி நோயை ஏற்படுத்தும் என்பதுதான் அந்த குழந்தைகள் மறுத்ததற்கான அறிவியல் காரணம். இந்த விவரம் அவர்களுக்கு தெரியவில்லை என்றாலும், விழிப்புணர்வு இருக்கிறது. நவநாகரீக உலகில், படித்து பட்டதாரிகளான நமக்கு அது இருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. சிந்தித்துக் கொண்டே மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களைப் பார்த்த படியே சென்றால் ஊத்து எனும் பகுதியை அடையலாம்.

இங்குதான் வெகுதூரத்திற்குப் பிறகு ஒரே ஒரு உணவு கிடைக்கும் இடமும், தபால் அலுவலகமும், சில வீடுகளும் உள்ளன. இன்று மனிதர்களிடம் அரிதாகிப்போன ஒன்றின் ஊற்றை இங்கு காண முடிந்தது. அது மனிதநேய ஊற்று!

ஆம்...நம்மைப் பார்த்ததும், "வாங்க வாங்க, எப்படி இருக்கீங்க? எங்க வீட்டுக்கு வாங்க, மாஞ்சோலை டீ குடிச்சுட்டு போங்க...", என்று ஒவ்வொருவரும் அழைத்து ஆச்சர்யம் அளிக்கின்றனர். கடையில் குடித்துக் கொள்கிறோம் என்று கூறினால், " நம்ம வீடு இருக்கும்போது எதுக்கு கடை", என்று அழைத்துச் சென்று உபசரிக்கின்றனர். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தாலே, டிவி சீரியலை விட்டுக் கண்களை எடுக்காத நமக்கு இது சற்று அதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஒரு நிமிடம் நாம் இந்த உலகில்தான் இருக்கிறோமா என்று தலைசுற்றி விடும்! வீடு மிகவும் சிறிதுதான். 10×10 அடியில்தான் மொத்த வீடே. ஆனால், அவர்கள் உள்ளம்தான் எவ்வளவு விசாலமானது.இவர்களுக்கு செல்ஃபி பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஆனால் வந்தவர்களை உபசரிக்கவேண்டும் என்ற நாகரிகம் தெரிந்திருக்கிறது. வந்தவர்களை வணக்கம் சொல்லி, 'வாங்க' எனக் கூறும் நம் கலாசாரம் பிஞ்சுகளுக்குக் கூடத் தெரிந்து இருக்கிறது. இங்குள்ளவர்கள் பிளாஸ்டிக் உபயோகிப்பதில்லை. சாக்கடை இல்லை. இதனால் கொசு, நோய்கள் என எதுவுமே இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கின்றனர். வீட்டில் மின்விசிறி கூட கிடையாது, ஆனாலும் ஏ.சி போட்டதைப் போன்ற ஒரு குளுமை நிலவுகிறது!

மாடாகப் பிறந்தாலும் யோகம் செய்ய வேண்டும் என்பது இங்கு சென்ற பிறகே தெரிகிறது. காரணம், பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகளையும் உண்டு நோய்வாய்ப்பட்ட நம் ஊர் மாடுகளைப்போலல்லாமல் இங்கு ஆரோக்கியமான மாடுகளைக் காணலாம். புல், பச்சை இலை, தழைகளை உண்டு, செழிப்பாக இருக்கின்றன. இந்த மாடுகளின் சாணத்தின் வாசம் காற்றில் கலந்திருந்தாலும், மூக்கை மூடவைக்கவில்லை. காரணம், ஒரு மூலிகை வாசனைதான் வரும்.

மாஞ்சோலைக்கும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் செழிப்பான ஒரு வரலாறு உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மருக்கு உதவி செய்ததன் பொருட்டு, சிங்கம்பட்டி ஜமீன் பரிசாகப் பெற்ற நிலத்தை Bombay Burma Trading Corpoation என்ற நிறுவனத்துக்கு 99 வருடங்களுக்குக் குத்தகைக்கு விட்டார். தற்போது வரை, இந்நிறுவனமே இந்த தோட்டத்தைப் பராமரித்து வருகிறது.மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என்பதால், மனமில்லா மனதுடன் கிளம்ப வேண்டும். வந்த பாதையிலேயே மீண்டும் ஒரு பயணம். வரும் போது "வா" என்று அழைப்பது எவ்வளவு முக்கியமோ, "போய்ட்டு வாங்க" என்று கூறுவது அதைவிட முக்கியம். வாசல் வரை வந்து, "திரும்ப வந்தா நம்ம வீட்டுக்கு வந்து சாப்டுட்டுதான் போகணும்", எனக் கூறி வழி அனுப்பி வைக்கிறார்கள். காட்டின் எல்லையை அடைந்ததும், முக்கியமான ஒருவர் வழியனுப்பக் காத்திருக்கிறார். வேறு யாரும் இல்லை குரங்குதான்!

மாஞ்சோலைக்கு செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெறவேண்டும். இங்கு பிளாஸ்டிக், மது போன்றவற்றைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. "உள்ளே மிருகம் பறவைகள்லாம் நிறைய இருக்கும், பாட்டு போடாதீங்க", என்று கூறித்தான் நுழைவாயிலில் உள்ள பாதுகாவலர்கள் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், நம் மக்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? பாட்டை சத்தமாக வைத்து செல்கிறார்கள். பிற உயிர்கள் மீது கொஞ்சம் கூட அக்கறையோ, அன்போ இல்லாத இந்த சுயநலக்காரர்களை யார் திருத்த முடியும்?மெல்ல மெல்ல இறங்கி மீண்டும் இந்த நவநாகரிக உலகிற்குள் பிரவேசித்து விட்டோம். டவர் கிடைத்துவிட்டது. முகநூலில் ஒரு பதிவையும், சில செல்ஃபிக்களையும் போட்டு விட்டு வாட்ஸ் அப்பில் சாட் செய்ய ஆரம்பிக்கலாம். ஆனாலும், அருவியின் மேளச் சத்தம் காதிலும், புல்லின் ஈரம் காலிலும், பச்சை நிறம் கண்ணிலும் எஞ்சி நிற்கும். அனைத்திற்கும் மேலாக மனிதம் உங்களை தொற்றியிருக்கும். அது சிந்திக்கவும் வைக்கும். யாருக்குத் தெரியும், உங்களால் மீண்டும் மனிதம் நம் நாகரிக உலகில் துளிர்விடலாம்!

- ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-