அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குடிபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வதாலும், பள்ளி, மருத்துவமனைகள் இருப்பது தெரியாமல் அசுர வேகத்தில் செல்வதாலும், 10 மீட்டர் இடைவெளி இன்றி முன்னால் செல்லும் வாகனத்தை பின்தொடர்வதாலும் கோர விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த விபத்துக்களை தடுக்கவே இப்படி ஒரு கண்டுபிடிப்பு என்றுக்கூறி பட்டாம்பூச்சி போல் கண்சிமிட்டுகிறார்கள் ஆர்த்தீஸ்வரி, ரோஷினி, சசிகலா. இவர்கள் தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள்.

கார்களில் ஜி.பி.எஸ். கருவி, ஜி.எஸ்.எம். சிம் கார்டு, வேகக்கட்டுப்பாடு சென்சார், ஆல்ஹகால் சென்சார் போன்றவை பொருத்துவதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்க்கலாம்; மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டிச் செல்வதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கலாம் என்கிறார்கள் இந்த மாணவிகள். இந்த மூவர் அணியின் கூட்டணியில் உருவான கண்டுபிடிப்பு தான், வாகனங்களில் 'சென்சார் சிஸ்டம்ஸ்' பொருத்துவதால் விபத்தை தடுப்பது.

இதுகுறித்து மாணவிகளே விளக்குவார்கள்:-

வாகனங்களில் 'சென்சார் சிஸ்டம்ஸ்' என்பதில் என்ன சிறப்பு?
கார், வேன், லாரி, பஸ் போன்ற வாகனங்களில் எக்கோ சென்சார், ஆல்ஹகால் சென்சார், ஆர்.எப். ரிசிவர், ஜி.பி.எஸ். கருவி, ஜி.எஸ்.எம். சிம் போன்றவற்றை பொருத்தினால் விபத்துக்களை தடுக்க முடியும் என்பதை விளக்குவது தான் இந்த 'சென்சார் சிஸ்டம்ஸ்'. இந்த சென்சார் சிஸ்டம்ஸ் திட்டத்தை செயல்படுத்தினால் அதிக வேகம், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால் ஏற்படும் விபத்துக்களை நிச்சயமாக தடுக்க முடியும்.

இதில் பொருத்தியுள்ள கருவிகளின் செயல்பாடுகள் என்ன?

எக்கோ சென்சார்: இந்த சென்சார் ஒவ்வொரு வாகனத்திலும் பொருத்தப்பட வேண்டும். இந்த சென்சார் கருவியை பொருத்துவதால் பயணத்தின் போது முன்னால் சென்று கொண்டு இருக்கும் வாகனத்திற்கும், நமது வாகனத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை கண்டறிய முடியும். அதற்கான டிஜிட்டல் போர்டு டிரைவர் இருக்கையின் முன்பகுதியில் இருக்கும். அதில், இருவாகனங்களுக்குமான இடைவெளியை காண்பித்துக் கொண்டு இருக்கும். 10 மீட்டர் இடைவெளி இல்லை என்றால், அந்த போர்டு எச்சரிக்கை தெரிவிக்கும். எச்சரிக்கை ஒலியும் எழுப்பும். இதனால் இடைவெளியை அறிந்து வாகனம் ஓட்டுவதால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.

ஆல்கஹால் சென்சார்: இந்த சென்சார் டிரைவர் இருக்கையின் அருகில் பொருத்தப்படும். இந்த சென்சார் குறித்த கட்டுப்பாட்டு கருவி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட வேண்டும். டிரைவர் மதுபோதையில் இருந்தால், அவர் மூச்சு விடும் போது அதில் வெளிப்படும் ஆல்ஹகால் வாசத்தை இந்த சென்சார் உள்வாங்கிக் கொள்ளும். உடனடியாக இந்த தகவலை போலீசுக்கும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கும். இந்த தகவல்களை அனுப்புவதற்காக தான் இத்துடன் இணைத்து, சி.எஸ்.எம். சிம் கார்டு பொருத்தப்படுகிறது. இந்த சிம் கார்டு மூலமாக தகவல்கள் எஸ்.எம்.எஸ். ஆக சென்று விடும்.

ஆர்.எப். ரிசிவர்: இந்த ஆர்.எப். ரிசிவரை (ரேடியோ அதிர்வெண் தகவல் பெறும் கருவி) வாகனத்தில் பொருத்த வேண்டும். அதேபோன்று ஆர்.எப். டிரான்ஸ்மீட்டர் கருவிகளை கல்லூரிகள், பள்ளிகள், கோவில்கள், மருத்துவமனைகள், நூலகம் போன்ற இடங்களில் பொருத்த வேண்டும். இந்த டிரான்ஸ் மீட்டர் கருவிகள் ((ரேடியோ அதிர்வெண் தகவல் அனுப்பும் கருவி)) தான் வாகனத்தில் இருக்கும் ஆர்.எப். ரிசிவருக்கு தகவல்களை அனுப்பும். ஆர்.எப். ரிசிவரை வாகனத்தில் பொருத்துவதால் எப்போதெல்லாம் வாகனம் கல்லூரி, மருத்துவமனை, பள்ளிகள், நூலகங்கள், கோவில்களை அமைந்துள்ள பாதைகள் வழியாக செல்கிறதோ, அப்போதெல்லாம் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே வாகனத்தில் பொருத்தப்படும் டிஜிட்டல் போர்டில் தகவல் தெரிந்து விடும். இதனை அறிந்து வேகத்தை குறைந்துக் கொண்டு, பாதுகாப்பாக பயணிக்கலாம்.

ஜி.பி.எஸ். கருவி: இந்த கருவிகளை வாகனத்தில் பொருத்துவதன் மூலம் வாகனங்கள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை துல்லியமாக கண்டறியலாம். ஒரு வாகனம் விபத்து ஏற்படுத்திவிட்டுச் சென்றாலோ, திருடப்பட்டாலோ உடனடியாக வாகனம் இருக்கும் இடத்தை கண்டறிந்து விடலாம். இதன் மூலம் விபத்து ஏற்படுத்திவிட்டு யாரேனும் சென்றாலும் அவர்களை போலீசார் துரிதமாக பிடித்து விடலாம்.

இந்த கண்டுபிடிப்புக்கு கல்லூரியில் பாராட்டு தெரிவித்து இருப்பார்களே. அது சரி, நடைமுறையில் இது எந்த அளவுக்கு சாத்தியம் ஆகும்?

அரசு நினைத்தால் நிச்சயம் சாத்தியம் ஆகும். நாட்டில் ஒவ்வொரு நொடியும் விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அதில் கோர விபத்துக்கள் பலவும் அசுர வேகம், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால் நடக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் சாலைகளை கடக்கும் போது அசுர வேகத்தில் வரும் வாகனங்களில் சிக்கி மாணவ&மாணவிகள் பலியாகி வருகின்றனர். இதுபோன்ற விபத்துக்களை தடுக்க அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. அதற்கு அதிக செலவுகளையும் செய்து வருகிறது. அதனோடு ஒப்பிடுகையில் இந்த திட்டத்தை நிச்சயம் செயல்படுத்தலாம். வாகனங்களை தயாரிக்கும் போதே இதுபோன்ற கருவிகளை பொருத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பல லட்சம் ரூபாய், கோடி ரூபாய் செலவில் உருவாகும் கார்களில் சில ஆயிரம் ரூபாய் செலவில் இந்த கருவிகளை பொருத்துவதால் உற்பத்தி செலவில் பெரிய அளவில் மாற்றம் வந்துவிடப் போவது இல்லை. தற்போது இயங்கிக் கொண்டு இருக்கும் வாகனங்களை சர்வீஸ் செய்யும் போது, இவற்றை பொருத்திக் கொள்ளலாம். முக்கிய இடங்களில் ஆர்.எப். டிரான்ஸ்மீட்டர் கருவிகளை அரசு பொருத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் இதுபோன்ற பயண பாதுகாப்பு திட்டங்கள் சாத்தியம் ஆகும்.

இந்த கண்டுபிடிப்பு எப்படி மனதில் உதித்தது? இதனை கண்டுபிடிக்க எத்தனை நாள் ஆனது?

கல்லூரியில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தலைப்புகளை ஆராய்ந்த பொழுது, இந்த எண்ணம் உருவானது. 2 மாத காலம் ஆனது. இரண்டு, மூன்று முயற்சிகளை செய்து பார்த்து, இறுதியில் இந்த மாதிரியை வடிவமைத்தோம்.

கண்டுபிடிப்பின் நோக்கம் என்ன?

விபத்துக்களை தடுக்க வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற வகையில் உருவாக்கி உள்ளோம். இதனை விபத்தை தடுக்கும் வேலைவாய்ப்பு திட்டமாகவும் கருதலாம். இதற்கான கருவிகளை உற்பத்தி செய்வது, பொருத்துவது, முக்கிய இடங்களில் இதற்கான கருவிகளை பொருத்துவது, அதனை பராமரிப்பது என நாடு முழுவதும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல லட்சம் உயிர்களும் விபத்துக்களில் இருந்து பாதுகாக்கப்படும், விளக்குகின்றனர் இந்த மாணவிகள்.

==========

=========

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-