அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டாக்டர் ஜாகிர் நாயக் குறித்த செய்திகள் அண்மை காலங்களில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஊடகங்கள் முன்னுக்கு பின் முரணாக செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்நிலையில் ஜாகிர் நாயக் அவர்கள் இந்திய மீடியாக்களுக்கு சவால் விட்டார். இதனை தொடர்ந்து இவர் குறித்து அவதூறு பரப்பிய வங்காளதேச ஊடகமான DAILY STAR ஜாகிர் நாயக் குறித்த செய்திக்கு மறுப்பு வெளியிட்டது. இதனை ஊதி பெரிதாக்கிய TIMES NOW ஆசிரியர் அனுராப் கோஸ்வாமியை ஆளையே பார்க்க முடியவில்லை. மக்கள் ஜாகிர் நாயக் குறித்து மத்திய அரசும், விபச்சார ஊடகங்களும் ஏற்படுத்த நினைத்த அவப்பெயர் பூமராங்க் போல அவர்கள் பக்கமே திரும்பியது.

இதனை அடுத்து வட இந்திய ஊடகங்களும், மத்திய அரசும் இதனை மூடி மறைக்க துவங்கியுள்ள நிலையில் காப்பி பேஸ்ட்டை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ள நம் தமிழ்நாட்டு ஊடகங்கள் ஜாகிர் நாயக் மீது தொடர்ந்து தாங்கள் நினைத்தவற்றையெல்லாம் எழுதி எந்த ஆதாரமும் இல்லாமல் தங்கள் ஆதங்கத்தை வெளிகாட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து நக்கீரன் ஒரு அவதூறு செய்தியை வெளியிட்டது. இந்நிலையில் இதே போன்று விகடனிலும் ஜாகிர் நாயக் குறித்து மக்கள் மத்தியில் அவதூறுகளை பரப்பும் நோக்கில் ஒரு கவர் ஸ்டோரி வெளியிடப்பட்டுள்ளது. இதனை கனல் குமார் என்பவர் தன்னுடைய விஷம் கலந்த பேனா மையினால் கணலை கக்கியுள்ளார்…

விகடனில் வெளிவந்த கவர் ஸ்டோரி….!

ஜூலை 1, 2016 நள்ளிரவு. பங்களாதேஷின் தலைநகர் டாக்காவுக்கு, அந்த நள்ளிரவு, நல் இரவாக கழியவில்லை. துப்பாக்கிகளோடும் வெடிகுண்டுகளோடும், டாக்காவின் புறநகரான குல்ஷன் கஞ்ச் பகுதியில் நுழைந்த தீவிரவாதிகள் சிலர், அங்கிருக்கும், ‘ஹோலி ஆர்டிசன்’ பேக்கரியை சல்லடையாக்கினர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த, காவல்துறை அதிகாரி முஹமது சலாவுதீன் சம்பவ இடத்திலேயே துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இரையானார். அத்துடன், அங்கிருந்த விடுதிகளில் தங்கியிருந்த 20 வெளிநாட்டுப் பயணிகள், பணயக் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டனர். அதன்பிறகு, அவர்களும் ஒவ்வொருவராக கத்தியால் கழுத்தறுக்கப்பட்டும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டனர்.

இந்தத் தீவிரவாத செயலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது. இதையடுத்து அந்தத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய ரோகன் என்பவரை, டாக்கா காவல்துறை கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஜாகிர் நாயக் என்ற இஸ்லாமிய மதப் பிரசாரகரின் உரையால் கவரப்பட்டவர், ஜாகிர் நாயக்கின் முகநூல் பக்கத்தை ‘லைக்’ செய்தவர் என்ற விபரம் வெளியானது.

இதை அடிப்படையாக வைத்து பங்களாதேஷ் அரசாங்கம், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை ஒளிபரப்பும் ‘பீஸ்’ தொலைக்காட்சி மற்றும் ஜாகிர் நாயக்கின் வீடியோ உரைகள், இஸ்லாமிய அப்ளிகேஷன், வால் பேப்பர்கள் அடங்கிய ‘பீஸ்’ செல்போன்களை (‘உலகின் ஒரே அதிகாரபூர்வ இஸ்லாமிய ஆண்ட்ராய்டு போன்) தடை செய்தது. அத்துடன், இந்தியாவைச் சேர்ந்த ஜாகிர் நாயக் பற்றி இந்திய அரசாங்கம் விசாரிக்கவும் கண்காணிக்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இந்தத் தகவல் வெளியானதும், ‘ஜாகிர் நாயக்’ என்ற பெயர், வட இந்திய ஊடகங்களின் விவாதப் பொருளானது. ஜாகிர் நாயக்கின், இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் (Islamic Research Foundation), அவருடைய ‘பீஸ்’(Peace) தொலைக்காட்சி, இஸ்லாமிய சர்வதேசப் பள்ளி (Islamic International School) போன்றவை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டன. ‘அவற்றுக்குத் தடைவிதிக்கப்பட வேண்டும்; அவற்றின் வரவு-செலவுகள் கண்காணிக்கப்பட வேண்டும்’ என்ற கோஷங்கள் ஓங்கி ஒலித்தன. உடனே, ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக சில இஸ்லாமிய அமைப்புகள் களத்தில் குதித்தன. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை அவை அறிவித்தன. அனல் பற்றிக் கொண்டது. இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில், மதினாவில் சுற்றுப் பயணத்தில் இருந்த ஜாகிர் நாயக், ‘ஸ்கைப்’ மூலம் பத்திரிகையாளர்களுக்கு கூலாக பேட்டி கொடுத்தார். தன் மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் எந்த அலட்டலும் இல்லாமல் மிக நிதானமாகப் பதில் சொன்னார்.

யார் இந்த ஜாகிர் நாயக்?

‘இஸ்லாமும் கிறிஸ்தவமும்’, ‘இஸ்லாமும் இந்துமதமும்’, ‘இஸ்லாமும் மதச் சார்பின்மையும்’ என்பன போன்ற தலைப்புகளில், ‘மெஸ்மரிச’ மொழியில், இஸ்லாமிய மதக்கருத்துக்களை பிரசாரம் செய்யும், ‘தாயீ’தான் ஜாகிர் நாயக்.

மஹாராஷ்ட்ரா மாநிலம், மும்பையில் பிறந்தவர். புனித பீட்டர் பள்ளியிலும் கிஷின்சந்த் செல்லாராம் கல்லூரியிலும் படித்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை(எம்.பி.பி.எஸ்) படித்தவருக்கு, மருத்துவத் தொழிலைவிட, மார்க்கப் பணிகளில்தான் ஆர்வம் போனது. 1991-ம் ஆண்டு ‘தாவா’ என்ற மதப்பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் ஒன்றையும் தொடங்கி, அதை அவரே வழிநடத்திச் சென்றார். 1994-ம் ஆண்டு மும்பைக்கு வந்த, புகழ்பெற்ற முஸ்லிம் பிரசங்கி, அஷ்ஷெய்க் அஹ்மத் தீதத்தின் பிரசங்கம், ஜாகிர் நாயக்கை தீவிரமாக தாவாவுக்குத் திருப்பியது.

ஆரம்பத்தில், மாதம் ஒருமுறை என்று இருந்த அவருடைய பிரசங்கம், வாரம் ஒருமுறையாகி, இருமுறையாகி, அதன்பிறகு அதுவே அன்றாட வேலையாக மாறியது. ஜாகிர் நாயக் தன்னுடைய பிரசாரத்திற்குப் பிடிக்கும் தலைப்புகள் கவனத்தைக் கவருவதாக இருக்கும். குர்-ஆனை மட்டும் ஜாகிர் நாயக் மனப்பாடமாக வைத்திருக்கவில்லை. அவற்றோடு, இந்துமதத்தின் ஆணிவேராகக் கருதப்படும் நான்கு வேதங்கள், ராமாயணம், மகாபாரதம், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளிலும் நல்ல புலமை பெற்றிருந்தார். அவற்றில் இருந்து தேவையானப் பகுதிகளை, மனப்பாடமாக சொல்லும் அளவிற்கு அவற்றையும் படித்திருந்தார்.

அவற்றில் இருந்து மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி, அதன் மூலம் இஸ்லாம் மதத்தை உயர்த்தும் வித்தையை கவனமாக ஜாகிர் நாயக் திறம்பட செய்துவந்தார். இந்தப் புதிய யுக்தி, அவருக்கு திரளான ரசிகர்களையும் எதிரிகளையும் சேர்த்தே சம்பாதித்துக் கொடுத்தது. இஸ்லாம் தவிர்த்த மாற்று மதங்களிலும் இவருக்கு ரசிகர்கள் உருவானர்கள். இவருடைய இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் (Islamic research foundation) மூலம், இவருடைய ஆங்கில உரைகள் உலகில் உள்ள முக்கியமான மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. சி.டி மற்றும் டி.வி.டிகளாக விநியோகம் செய்யப்பட்டன. உள்ளூர் தொலைக்காட்சிகளில் ‘ஸ்லாட்’ அடிப்படையில் மணிக்கணக்கில் அவை ஒளிபரப்பப்பட்டன. முகநூலில் 1 கோடியே 40 லட்சம் பேர் இவரை ‘லைக்’ செய்தனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ‘யூ டியூப்’-ல் பின் தொடர்கின்றனர். 10 கோடிக்கும் மேற்பட்டோர் பீஸ் (PEACE) தொலைக்காட்சியை பார்க்கத் தொடங்கினர். விளைவு, ஜாகிர் நாயக்கின் வருமானமும் கோடிகளில் உயர்ந்தது. ஆனால், அது உண்டாக்கிய விளைவுகள்… விபரீதமானவையாக வடிவெடுத்தன!

சர்ச்சைகளின் மையம்!

கடந்த 20 ஆண்டுகளில் ஜாகிர் நாயக், உலக நாடுகளில் இரண்டாயிரம் மேடைகளில் பிரசங்கம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இத்தாலி, ஃபிரான்ஸ், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன், எகிப்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நைஜிரியா, கானா, காம்பியா, மொராக்கோ, அல்ஜீரியா, இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர், புரூனே, தாய்லாந்து, ஹாங்காங், சீனா, காயானா, டிரினிடாட், மொரிஷியஸ், இலங்கை, மாலத்தீவுகள் என்று உரையாற்றி உள்ள ஜாகிர் நாயக், இந்தியாவிலும் பல மேடைகளில் பேசி உள்ளார்.ஆனால், ஜாகிர் நாயக்கின் உரையாடல் பாணி மிகவும் அபாயகரமானது. விஷக் கருத்துக்களைக் கூட தேன் வார்த்தைகளில் மறைத்துச் சொல்வதில் அவர் கில்லாடி. தன் தீவிரக் கருத்துக்களுக்கு வலு சேர்க்க குர்-ஆன் முதல் உலகின் எந்த மதபோதனைகளையும் துணைக்கு அழைத்துக் கொள்வார். அதிலும் தர்க்கரீதியான வார்த்தைகளில் தனது அபத்தக் கருத்தை எவர் மனதிலும் வலுவாக பதிக்கச் செய்வதில் கைதேர்ந்தவர் ஜாகிர் நாயக். இதனாலேயே ஜாகிரின் உரைகள் திகீர் சர்ச்சைகள் கிளப்பிய வண்ணமிருக்கும்!

இஸ்லாமியர்களாலேயே வெறுக்கப்படுபவர்!

ஜாகிர் நாயக், இஸ்லாமிய அறிஞரா.. ஸலபி பிரசாரகரா என்பதிலேயே குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. அவற்றை முன்வைப்பதும், மாற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. இஸ்லாமிய மதத்திற்குள்ளேயே இப்படிப்பட்ட சர்ச்சைகள், ஜாகிர் நாயக் குறித்து முன்வைக்கப்படுகின்றன. அவ்வளவு ஏன்… குர் ஆனை வரி தவறாமல் ஒப்பிக்கும் சாகீருக்கு எதிராக ஃபத்வா தடையை விதித்திருக்கிறார்கள். இவரை முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே பிரிவினை ஏற்படுத்துபவராகக் குற்றம்சாட்டுகின்றனர். அவர் பில்லி, சூனியத்தை ஆதரிப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். ஜாகிர் நாயக்கும் பிற மதங்களோடு ஒப்பிடும்போது, இஸ்லாமிய மதத்திற்குள் இருக்கும் உள் பிரிவுகளையே கடுமையாக சாடுவதும் வன்மமாகப் பேசுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஜாகிரின் பிரசாரங்கள்!

மேடைகளில் பலப்பல பிரசாரங்கள் செய்பவர், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பல கருத்துக்களை விதைப்பார். ‘விஷத்தைக் கக்கும் கருத்துக்கள்’ என்று அவை குறித்து விமர்சனம் கிளம்பும். ஜாகிரின் உரைகளைத் தொடர்ந்து கவனித்தால், பின்வரும் அவரது மனநிலையை உணர்ந்து கொள்ளலாம்.

* ஜாகிர் நாயக்கை பொறுத்தவரை இஸ்லாம் ஒன்றுதான் சிறந்த மதம். அதைத்தவிர இருக்கும் மற்ற மதங்களை யாரும் கடைபிடிக்கக்கூடாது. அவை நரகத்திற்கு கொண்டு செல்லும்.

* இசை என்பது சாராய போதைக்குச் சமமானது. ஆடலும் பாடலும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. உண்மையான முஸ்லிம் இந்தக் கேளிக்கைகளை கலை என்ற பெயரில்கூட ஆதரிக்கக்கூடாது.

* கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் போன்ற தண்டனைகளே சரி. திருடும் குற்றத்தைச் செய்தவனின் கைகளை வெட்டுவது நியாயமானதே. அமெரிக்கா இதுபோன்ற சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தினால், அங்கு குற்றங்கள் குறையும்.

* குடும்பத்திற்கு ஆண்தான் தலைவன். அதனால், அவன் அவனுடைய மனைவியை கடுமையாக அல்லாமல், தேவைப்படும்போது, அடிக்கலாம். அதற்கான உரிமை அவனுக்கு உண்டு.

* முஸ்லிம்கள் அவர்களுடைய பெண் அடிமைகளோடு உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.

* ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரணத் தண்டனை கொடுக்க வேண்டும். அவர்கள் அப்படியிருப்பதற்குக் காரணம், ஒருவகையான மனநோய் மற்றும் உடல் பிரச்னைகளே.

* இஸ்லாம் மதத்திலிருந்து விலகிச் செல்லும் மதத்துரோகிகளுக்கு மரணத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அந்த நாட்டின் சட்டத்தில் மரணத் தண்டனைக்கு இடம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதை நிறைவேற்ற வேண்டும்.

* இஸ்லாமிய நாடுகளில் சர்ச்சுகள் மற்றும் கோயில்களை அனுமதிக்கக்கூடாது. ஏனென்றால், அந்த மதங்களே தவறு என்று சொல்லும்போது, அவர்களுடைய வழிபாட்டுத்தலங்களை இஸ்லாமிய நாடுகளில் ஏற்கமுடியாது.

* ஒவ்வொரு முஸ்லிமும் அவனுடைய மதத்திற்கு அச்சுறுத்தல் வரும்போது அவன் தீவிரவாதியாக இருக்க வேண்டும். தீவிரவாதி என்றால், அப்பாவிகளையும் பெண்களையும் கொல்லும் தீவிரவாதி அல்ல. இஸ்லாம் மார்க்கத்திற்கு அச்சுறுத்தல் வரும்போது அதை எதிர்கொள்வதில் தீவிரவாதியாக இருக்க வேண்டும்.

இவை சற்றே சாத்வீகக் கருத்துக்கள். அவருடைய முழு வீரியமான தத்துவங்களை பிரசுரிக்க இயலாது!

பீஸ் தொலைகாட்சியும் – பீஸ் செல்போனும்..!

ஜாகிர் நாயக் நடத்தும் தனியார் சேட்டிலைட் சேனலான ‘பீஸ் டிவி’யில் இஸ்லாம் குறித்த தகவல்கள், நாயக்கின் பிரசார பேச்சு ஆகியவை ஒளிபரப்பாகின்றன. இந்த சேனலுக்கு இந்தியாவில் உரிமம் பெற முறையான அனுமதி கிடைக்கவில்லை. தேவைப்படும் ஆவணங்களை ஜாகிர் தரப்பினர் வழங்கவில்லை. இதனால், அந்த சேனலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், ஜாகிர் நாயக் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், “2008 ம் ஆண்டிலும், 2012ம் ஆண்டிலும் பீஸ் தொலைக்காட்சி தொடங்க அனுமதி கோரி விண்ணப்பித்தோம். பாதுகாப்பு காரணத்தைக் கூறி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை. இஸ்லாமிய சேனலாக இருப்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது” என்று சொல்லியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, “இது தவறான குற்றச்சாட்டு” என்று மறுத்ததோடு, “அமைச்சகம் எந்தப் பாகுபாடும் இதுவரை பார்த்ததில்லை, இனியும் பார்க்கப் போவதில்லை. 2008, 2009ம் ஆண்டுகளில் அவர்கள் அனுமதிக்காக விண்ணப்பித்தபோது, அமைச்சகம் கோரிய சில தகவல்களை அவர்கள் தரவில்லை. அதனால், அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் 2012 ம் ஆண்டும் நிகழ்ந்தது” என்று விளக்கம் அளித்தார். அதனால், அதிகாரபூர்வமாக இந்தியாவில் இதன் ஒளிபரப்பு இல்லை. ஆனால், சில கேபிள் ஆப்பரேட்டர்களின் உதவியுடன் இந்தச் சேனல் ஒளிபரப்படுகிறது.

பங்களாதேஷில் அரசு அனுமதியுடன், இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. டாக்கா தாக்குதலில் கைதான ரோகன், ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டேன் என்று குறிப்பிட்டதால், ஜாகிர் நாயக் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கு பங்களாதேஷ் தடைவிதித்துள்ளது. அதனால் பீஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு பங்களாதேஷில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சில கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் (தனியார் டி.டி.ஹெச் நிறுவனங்களும் கேபிள் டி.வி வரைமுறைக்குள்தான் வரும்) பீஸ் தொலைக்காட்சி சில இடங்களில் ஒளிபரப்பப்பட்டது. அதுபற்றிய புகார் எழுந்ததையடுத்து, தற்போதைய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் மத்திய அமைச்சகத்தின் அனுமதி பெறாத, தடை செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்படுவதை, கண்காணித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அனுமதி இல்லாத தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்படுவது எப்படி?

’இப்படி அனுமதி இல்லாத தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்படுவது எப்படி? அப்படி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் யார் நடவடிக்கை எடுப்பது? யாரிடம் புகார் கொடுக்கலாம்?” என்பது பற்றி, வழக்கறிஞர் ரமேஷ் நடராஜனிடம் பேசினோம்.

’’கேபிள் டி.வி என்பது உள்ளூர்களில் ஒளிபரப்பப்படும் சேனல்கள் மட்டுமல்ல. பெரியளவில் டி.டி.ஹெச் சேவை மூலம் வீடுகளுக்கு தொலைக்காட்சி சேனல்களைக் கொடுக்கும் நிறுவனங்களும் கேபிள் டி.வி சட்டங்களுக்குள்தான் வருவார்கள். மத்திய அரசினால், தடை செய்யப்பட்ட, அனுமதி மறுக்கப்பட்ட சேனல்களை இவர்கள் ஒளிபரப்பினால் அதுபற்றி பொதுமக்கள் புகார் அளிக்கலாம். மாநகரங்களில் அதுபோன்ற புகார்களை போலீஸ் கமிஷனரிடமும், மாவட்டங்களில் கலெக்டரிடமும் புகார் கொடுக்கலாம். அவர்கள் அதில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர்கள். கேபிள் டி.வி ஒழுங்குமுறை சட்டம்(1955)-ன்படி, இதுபோன்ற தவறைச் செய்பவர்களுக்கு பிரிவு 5 மற்றும் 19ல் விதிகள் 6(vi)-ல் குறிப்பிட்டுள்ளபடி, இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும். மேலும், அந்த நிறுவனத்திடம் உள்ள உபகரணங்களும் பறிமுதல் செய்யப்படும். இதே தவறை மீண்டும் செய்தால், 5 ஆண்டுகள் வரை அவருக்குத் தண்டனை கிடைக்கும்!

அதே சமயம் இப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படும் ‘பீஸ்’ தொலைக்காட்சியை, இணையத்தில் ஒருவர் சாதாரணமாகப் பார்க்க முடியும். ஆக, ஒரு விஷயத்தை தடை செய்ய வேண்டும் என்றால், அதை இணையத்தில்தான் முதலில் தடை செய்ய வேண்டும். அதுதான் உண்மையான தடையாக இருக்கும்!’’ என்கிறார்.

சென்னையில் ஜாகிர் நாயக்கின் பள்ளி!

உலகளவில் பல நாடுகளில் பிரசாரங்களை மேற்கொண்டிருக்கும் ஜாகிர் நாயக்கின் ‘இஸ்லாமிக் இண்டர்நேஷனல் பள்ளி’ சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்… ஜாகிர் நாயக்! அவர் சென்னைக்கு வரும்போது, பள்ளி மாணவர்களைச் சந்தித்து உரையாடுவது வழக்கம். இருபாலர் பள்ளி என்றாலும், 2-ம் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன் பிறகு, மாணவர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பாடத்திட்டங்களுடன் கல்வி அளிக்கப்படுகிறது என்று பள்ளி நிர்வாகம் சார்பில் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் குர்-ஆன், ஹதீஸ் பாடங்களும் கட்டாயம். கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், விலங்கியல், தாவரவியல், உயிரியல், வேதியியல் பாடங்கள் பள்ளியில் நடத்தப்படுகின்றன. ஆனால், அதே நேரத்தில் அறிவியல் பாடங்களை நடத்தும்போது, அவற்றில் எது இஸ்லாம் மார்க்கத்தோடு இயைந்து செல்லாது என்பதையும் தெளிவாக சொல்லிக் கொடுக்கின்றனர். குறிப்பாக டார்வின் கோட்பாடுகளை நடத்தும்போது, இதை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். அதுபோல், முஸ்லிம்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தப் பள்ளியில் அட்மிஷன். மற்றவர்களுக்கு இங்கு அட்மிஷன் கிடையாது!

ஜாகிர் நாயக்கைப் பற்றி உலகின் பிரபல பத்தி எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் ஒருமித்த குரலில் சொல்லும் கருத்து இதுதான்… ‘’ஜாகிர் நாயக் அரைகுறை புரிதலுடன் இளைஞர்களின் மனதில் பாய்ச்சும் நச்சு இந்த சமூகத்துக்கு நன்மை விளைவிக்கப் போவதில்லை. கல்லூரி பேச்சுப் போட்டிகளில் கூடுதல் மதிப்பெண்கள் வாங்க, வார்த்தைகளுக்கு சுவை கூட்டிப் பேசுவதைப் போல பேசிக் கொண்டிருக்கிறார் ஜாகிர். இதனால் உசுப்பேற்றப்படும் ஒரு இளைஞனின் மனம், அழிவுப் பாதையை நோக்கியே பயணிக்கும். அது நிச்சயம் மனித குலத்துக்கு ஆபத்தே!’’

எல்லா மதங்களும் அமைதியைத்தான் போதிக்கின்றன. அந்த அமைதியைக் கொன்றாவது தங்களது மதத்தை வளர்க்க நினைப்பது மரக்கிளையின் நுனியில் அமர்ந்து கிளையை வெட்டுவதைப் போன்றதுதான். அதைத்தான் ஜாகிர் நாயக் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-