அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


புதுடெல்லி,

தவறு செய்யும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு தொடர சாமானியரும் அனுமதி கேட்பதற்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

கடந்த 2012–ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோருக்கு எதிராக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பை அளித்தது.

அதில், தவறு செய்யும் பொது ஊழியர் மீது வழக்கு தொடர்வதற்கான புகார் மனுவை சாமானியர்கள் தாக்கல் செய்வதற்கு சட்டத்தில் எந்த தடையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

‘உரிய அதிகாரம் படைத்த அமைப்பு, தன் முன்பு வைக்கப்பட்ட ஆதாரங்கள் திருப்தி அளித்தால், வழக்கு தொடர அனுமதி அளிக்கலாம். திருப்தி அளிக்காவிட்டால், அனுமதி மறுக்கலாம். ஆனால், என்ன முடிவு எடுத்தாலும், புகார் கொடுத்த சாமானியருக்கு அம்முடிவை தெரிவிக்க வேண்டும். புகார்தாரருக்கு அம்முடிவு ஏற்புடையதாக இல்லாவிட்டால், சட்டரீதியாக பரிகாரம் தேடலாம்’ என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

மத்திய அரசு அதிரடி முடிவு

இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு தனி நபர்களிடம் இருந்து மத்திய பணியாளர் நலத்துறைக்கு கோரிக்கைகள் குவிந்தன. இதன் அடிப்படையில், தவறு செய்யும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு தொடர சாமானியரும் அனுமதி கேட்பதற்கான அதிகாரத்தை அளிக்க மத்திய பணியாளர் நலத்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மாநில அரசில் பணியாற்றும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வழக்கு தொடர அனுமதி கேட்கும் ஒரு தனிநபர், அந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட மாநில அரசு மூலமாகவே அனுப்ப வேண்டும். ஒருவேளை, மத்திய பணியாளர் நலத்துறைக்கு நேரடியாக கோரிக்கையை அனுப்பினாலும், மாநில அரசின் பூர்வாங்க விசாரணைக்காக அது மாநில அரசுக்கே அனுப்பி வைக்கப்படும்.

மாநில அரசின் பணி

குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தால், மாநில அரசு விரிவான அறிக்கை தயாரித்து, அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் விளக்கம் கேட்பது பற்றி பரிசீலிக்கலாம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய பணியாளர் நலத்துறையே நிர்வகிப்பதால், அத்தகைய விரிவான அறிக்கையை அனைத்து ஆதாரங்களுடன் மத்திய பணியாளர் நலத்துறைக்கே அனுப்பி வைக்க வேண்டும்.

ஒருவேளை, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரும் அளவுக்கு புகாரில் முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்தால், அதை புகார்தாரருக்கு மாநில அரசு தெரிவிக்க வேண்டும்.

3 மாதத்தில் பைசல்

மாநில அரசிடம் இருந்து மத்திய பணியாளர் நலத்துறைக்கு விரிவான அறிக்கை கிடைத்த நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் அந்த புகார் ‘பைசல்’ செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த நெறிமுறைகள்
குறித்து அனைத்து மாநில அரசுகளும், மத்திய அமைச்சகங்களும் ஆகஸ்டு 12–ந் தேதிக்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-