அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அனைவரும் படிக்க வேண்டிய அருமையான கட்டுரை !
 
முதலில் முழு கட்டுரையும் பின் அதற்கு விமர்சகர்கள் பார்ப்போம்.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியாக திமுக அமர்ந்திருக்கிறது. எனினும், திமுக கூட்டணியில் இடம்பெற்ற முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய முக்கியமான இஸ்லாமியக் கட்சிகளுக்குத் தேர்தல் முடிவு அத்தனை சாதகமாக இல்லை. ஒரே ஒரு இடம் மட்டுமே முஸ்லிம் லீக்குக்குக் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலின் மூலம் சட்டமன்றத்தில் கிடைத்த பிரதிநிதித்துவம்கூட இந்த முறை இல்லை. முஸ்லிம்கள் எனும் ஒற்றை அடையாளத்துக்குள் தாங்கள் அடைக்கப்படுவது பற்றி எந்தப் பிரக்ஞையும் இந்திய முஸ்லிம்களிடம் இல்லை என்பதுதான் வருத்தம் தரும் விஷயம்.

பேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மக்கள் தலைவர்களைக்கூட மதச் சிமிழுக்குள் அடைக்கும் அநியாயத்தைச் சுதந்திர இந்தியாவில் தொடங்கிவைத்தது சாட்சாத் காங்கிரஸ் கட்சிதான். இதற்கு இலக்கான முதல் ஆளுமை மௌலானா அபுல் கலாம் ஆசாத்.


காங்கிரஸ் செய்த தந்திரம்

மிகச் சிறந்த கல்வியாளரான அபுல் கலாம் ஆசாத், தேசப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தவர். ‘பிரிவினையை நாம் ஆதரித்தால் வரலாறு ஒருபோதும் நம்மை மன்னிக்காது’ என்றவர். இதற்காகவே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினரின் கடும் விமர்சனங்களுக்கு ஆளானவர். சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி, ஐ.ஐ.டி., மருத்துவக் கல்லூரிகள் என்று அனைத்துக்கும் அடித்தளம் அமைத்தவர்.

இப்பேர்பட்ட மௌலானா ஆசாத்தை 1951-ல் நடந்த முதல் தேர்தலில் ராம்பூரில் வேட்பாளராக நிறுத்தியது காங்கிரஸ். என்ன காரணம் தெரியுமா? ராம்பூரில் 80% பேர் முஸ்லிம்கள். அன்று தொடங்கிய இந்த அபத்தம், இன்று வரை தொடர்கிறது. இவ்வாறு முத்திரை குத்தப்பட்ட தொகுதிகளில் மட்டுமே முஸ்லிம்கள் நிறுத்தப்படுவதால் அந்தப் பகுதிகளில் பாஜக போன்ற சக்திகள்தான் அரசியல் ஆதாயம் அடைகின்றன.

அசாம் தோல்வியின் பின்னணி

முஸ்லிம்கள் முன்னிறுத்தப்படும் பகுதிகளில் பெரும்பான்மைவாதத்தை மிக எளிதாக வளர்த்து இப்போது பாஜக தன் கோட்டையாக்கிவருகிறது. இதற்குச் சமீபத்திய உதாரணம் அசாம். அம்மாநிலத்தில் ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெல்லும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. எப்படி அது சாத்தியமானது?

முக்கியக் காரணி மௌலானா பத்ருத்தின் அஜ்மல். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் வாசனைத் திரவியங்கள் விற்பனையில் பிரபலமானவர். பெரும் செல்வந்தர். அசாமை ஆள வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. வங்க மொழி பேசும் முஸ்லிமான அவர் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் கட்சிகள் போதாது என்று, ‘ஆல் இந்தியா யுனைடெட் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்’ என்ற கட்சியைத் தொடங்கினார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸோடு கூட்டு வைத்து ‘கிங் மேக்கர்’ ஆக மாற விரும்பினார். ஆனால், அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, ‘மூன்று கோடிப் பேர் மக்கள்தொகை கொண்ட அசாமில் ஒரு கோடிப் பேர் முஸ்லிம்கள். எனவே, நாம் தனித்தே களம் காண்போம், ஆட்சி அமைப்போம்’என்று களமிறங்கினார். தனித்து நின்ற அவரது கட்சி, காங்கிரஸுக்குப் போக வேண்டிய முஸ்லிம் வாக்குகளை உடைத்துப் பிரித்தது. கடைசியில் இது பாஜகவுக்குச் சாதகமாக அமைந்தது.


காயிதே மில்லத்தின் செல்வாக்கு

இஸ்லாமிய மக்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை நேரடியாக எதிர்ப்பதும், ஆதரிப்பதும் குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவினரிடம் மட்டும் இணைந்து அரசியல் செய்வதும் சாணக்கியத்தனமாக இருக்காது. குறிப்பிட்ட ஒரு சக்தியைச் சார்ந்தே முஸ்லிம்களின் அரசியல் செயல்பாடு இருந்தால் அது பலவீனத்துக்கே வழிவகுக்கும் என்பதற்குத் தமிழகமே உதாரணம்.

காயிதே மில்லத்துக்குப் பிறகு, தமிழகத்தில் தோன்றிய முஸ்லிம் தலைவர்கள் பலரும் குறுகிய வட்டத்துக்குள் செயல்பட்டுப் பழகியவர்கள். தொலைநோக்குத் தலைமைக்கான ஆளுமை, ஆற்றல் அவர்களிடம் இல்லை. மத நல்லிணக்க அடிப்படையிலான தனது செயல்பாடுகள் மூலம் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவாகியிருந்தவர் காயிதே மில்லத். ராஜாஜி, அண்ணாவிடம் கொண்டிருந்த நெருக்கமான நட்பைக் கொண்டு முஸ்லிம் சமூகத்துக்கு அவர் மகத்தான தொண்டாற்றியுள்ளார்.

காயிதே மில்லத்தின் வீடு தேடிச் சென்று பேசுவார் அண்ணா. ஆனால், இன்று காதர் மொய்தீன்களும், ஜவாஹிருல்லாக்களும் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று தளபதிக்காகக் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. முஸ்லிம்களின் அரசியல் சக்தி தமிழகத்தில் எவ்வளவு தூரம் நீர்க்கடிக்கப்பட்டுவிட்டது என்பதற்கான சாட்சி இது.

குழிபறிக்கும் வேலைகள்

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அக்கூட்டணியில் ஏற்கெனவே இருந்த முஸ்லிம் கட்சிகள்தான் என்று இன்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சக முஸ்லிம் இயக்கத்தை வளர்க்க வேண்டிய, அவர்களுக்காக வாதாடி உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் மூத்த முஸ்லிம் இயக்கங்கள் இப்படி ஒருவருக்கொருவர் குழி பறிக்கும் வேலைகளில் இறங்கினால், முஸ்லிம்களின் அரசியல் எப்படிக் கைகூடும்?

இந்தியா போன்ற மதச்சார்பற்ற தேசத்தில், தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்தி அரசியல் செய்வதால்தான் அதன் எதிரொலியாக, ‘இந்து’ என்ற பெரும்பான்மைவாத அரசியல் முன்வைக்கப்படுகிறது. அது முஸ்லிம் என்ற அரசியலைவிட அதிக சக்தி வாய்ந்ததாக உருவெடுக்கிறது. தீப்பொறியை நம் கையில் வைத்துக்கொண்டு தீப்பந்தத்தை எதிர்க்கப்போகிறோம் என்பது எப்படி புத்திசாலித்தனமாக இருக்க முடியும்?

2005-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை பற்றி ஆராய்ந்து சொல்ல நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தார். 2006-ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், முஸ்லிம்களின் நிலை தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

‘இந்திய முஸ்லிம்களில் 35% பேர் 5-ம் வகுப்புகூடப் படிக்காதவர்கள். 35% பேர் குடிநீர் மற்றும் கழிப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் தடுமாறு பவர்கள். பெருநகரங்களில் பிளாட்பார நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள், கூலி வேலை செய்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள்தான்’என்றது சச்சார் கமிட்டியின் அறிக்கை.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்த நிலை இதுவென் றால், இன்றைக்கு முஸ்லிம் இயக்கங்கள் முன்னெடுக்கும் சிறுபான்மை அரசியலை வைத்துப் பார்த்தால், இன்றைய தேதியில் முஸ்லிம்களின் நிலை மேலும் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

என்ன செய்ய வேண்டும்?

அடித்தட்டு முஸ்லிம்களை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால், முஸ்லிம்கள் பொது நீரோட்ட அரசியலுக்குத் தங்களை நகர்த்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட மதம், இனம் என்னும் சிமிழுக்குள் தொடர்ந்து முஸ்லிம் தலைவர்கள் தங்களை அடைத்துக்கொண்டால், அதனால் பலனடையப்போவது குறிப்பிட்ட சில முஸ்லிம் பிரமுகர்கள் மட்டுமே. அடித்தட்டு முஸ்லிம்களின் நிலை அப்படியேதான் இருக்கும்.

பள்ளிவாசலில் இருந்து சிறகடிக்கும் புறாக்கள் வெளியெங்கும் உலவும், உணவு தேடும், வானத்தை அளக்கும். மீண்டும் தங்குவதற்கு மட்டுமே பள்ளிவாசலுக்கு வரும். அதுபோல இந்திய முஸ்லிம்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தைத் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றபடி அவர்களின் அரசியல் சிந்தனை, பள்ளிவாசல் புறாக்கள் போல புதிய வானத்தைத் தேடிச் செல்ல வேண்டும்.

பழைய மாடங்களைவிட புதிய வானங்களே இன்றைய புறாக்களுக்குத் தேவை!

தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.comபொது அடையாளத்தை இழக்கலாமா முஸ்லிம்கள்? என்ற தலைப்பில் தமிழ் தி இந்து நாளிதழில் வந்த கட்டுரைக்கு வரிக்கு வரி பதில் கொடுக்கும் கட்டுரை!பொது அடையாளத்தை இழக்கலாமா முஸ்லிம்கள் ! என்ற தலைப்பில் ஒரு அபத்தமான கட்டுரையை சகோ.ஜாபர் அலி தமிழ் இந்துவில் எழுதியிருக்கிறார்.
பொது அடையாளம், தனி அடையாளம் என எல்லோருக்குமே இந்த நாட்டில் இரட்டை அடையாளங்கள் இருக்கிறது. ஏதொ முஸ்லிம்கள் மட்டும்தான் தங்கள் இஸ்லாமிய அடையாளங்களை விடாமல் பொது நீரோட்டத்தில் கலக்காமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பொதுவாகவே முஸ்லிம்கள் மீது வைக்கப் படுகிறது. அதைத்தான் ஜாபரும் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதற்கு சில அபத்தமான உதாரணங்களையும் காட்டியிருக்கிறார். மைய நீரோட்ட கட்சி முஸ்லிம்களுக்கு செய்த துரோகங்களை பட்டியலிட்டுக் கொண்டே மைய நீரோட்ட அரசியலுக்கு வாருங்கள் என்று கூக்குரலிடுகிறார்.
இரண்டு முறை காங்கிரஸ் தலைவராக அதுவும் நாடு விடுதலை அடையும் இக்கட்டான சூழலில் நாட்டை வழிநடத்திய அபுல் கலாம் ஆசாத் (ரஹ்) போன்ற ஆளுமை மிக்க தலைவர்களை "பொது தலைவர்களாக" அடையாளம் காட்டாதது யார் குற்றம் முஸ்லிம்களின் குற்றமா ?
காந்தி,நேரு போன்ற தலைவர்களின் நினைவு நாளை நாடே கொண்டாடும் போது ஆசாத் போன்றவர்களை யார் ? என்று நாட்டின் இளைய தலைமுறை கேட்கிறதே இது யார் குற்றம் ?
காந்தியை அரசியலுக்கு கொண்டு வந்து, இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் சுதந்திரம் பெற்ற என் நாட்டில்தான் என் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் அடிமை இந்தியாவில் வேண்டாம் என சிங்கமென கர்ஜித்து லண்டனிலே உயிர் துறந்து பலஸ்தீனிலே அடக்கம் செய்யப்பட்ட அலி சகோதரர்களை "பொது தலைவர்களாக" அடையாளம் காணாதது யார் குற்றம் ?
இன்னும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் தலைவர்களை என்னால் சுட்டிக் காட்ட முடியும். காங்கிரசிலும் இன்னும் தனிப்பட்ட முறையிலும் இந்த நாட்டின் விடுதலை க்காகவும்,நாடு எழுச்சியுறவும் பாடுபட்ட அவர்கள் யாரும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்து பணியாற்றவில்லை. ஆனால் இந்த நாட்டின் சரித்திரத்தின் பக்கங்களிலோ அவர்களுக்கு இடமில்லை.
ஆசாத் அவர்களுக்கு அன்று ராம்பூர் தொகுதியை ஒதுக்கிய காங்கிரஸ் இன்று நடிகை ஜெயப்ரதாவுக்கல்லவா ராம்பூரை ஒதுக்குகிறது. இது காங்கிரசின் தவறா,முஸ்லிம்களின் தவறா ?
காங்கிரஸ் கட்சியே முஸ்லிம் தொகுதியை முஸ்லிம்களுக்கு ஒதுக்காத போது அவர்களிடம் பிச்சை எடுப்பதை விட தாங்களே தங்களின் தொகுதியில் போட்டியிட முடிவெடுப்பது முஸ்லிம்களின் தவறல்லவே.
காயிதே மில்லத்தை வெகுவாகப் புகழும் சகோ. ஜாபர் அவர்களே ! இதே காயிதே மில்லத்தை தேச துரோகி,பாகிஸ்தானின் உளவாளி என்று அன்றைய காங்கிரஸ் கட்சியினர் கூக்குரலிடவில்லையா ?
முஸ்லிம் லீக் ஒரு செத்த குதிரை. லீகை கலைத்து விட்டு காங்கிரசில் இணையுங்கள் மத்திய மந்திரி பதவி தருகிறேன் என்று காயிதே மில்லத்துக்கு நேரு அன்பு கலந்த மிரட்டல் விடுக்கவில்லையா ?
அதற்கு காயிதே மில்லத்தின் பதிலும் செயல்பாடும் என்னவாக இருந்தது என்பதுதான் உமது கட்டுரைக்கான விடை.
எக்காரணத்தை கொண்டும் லீகை கலைக்க மாட்டேன். உயிரே போனாலும் சிறுபான்மை அடையாள அரசியலை துறக்க மாட்டேன் என்று வீறு நடை போட்டு இன்றைக்கும் சிறுபான்மை அடையாள அரசியலின் அடையாளமாக கேரளாவை அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறாரே காயிதே மில்லத். லீகை குழி தோண்டி புதைக்க சொன்ன நேரு லீகிடமே கூட்டணி வைத்ததுதானே வரலாறு. நேருவின் கோரிக்கையை ஏற்று பொது நீரோட்ட அரசியல் கட்சியான காங்கிரசில் இணைந்த எத்தனையோ முஸ்லிம் லீக் தலைவர்கள் காணாமல் போய் விட்டார்களே.
பொது அடையாளத்தை இழக்காத காங்கிரசின் ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தால் தனது காஷ்மீர் மாநில மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும் போது ஒன்றும் கிழிக்க முடியவில்லையே ? ஏன் ? தனித்த அடையாளங்களோடு இயங்கும் முஸ்லிம் அமைப்புகள்தானே வீதி தோறும் எதிர்ப்புகளை காட்டிக் கொண்டிருக்கின்றன.
காயிதே மில்லத் வீட்டுக்கு அண்ணா சென்றார். அது அன்றைய ஆரோக்கிய அரசியல். அது இன்றைக்கு சாத்தியமா ? ஈரோட்டு பெரியாரின் பேரனே இன்று அறிவாலயம் சென்றுதானே சீட்டுப் பேரம் நடத்த முடிகிறது. அதுதானே இன்றைய தமிழக அரசியல்.
60 ஆண்டு கால தமிழக அரசியலில் காயிதே மில்லத் ஆற்றிய பணிகளுக்கு பிறகு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு,பல சிறைவாசிகளின் விடுதலை, முஸ்லிம்களின் வழிப்பாட்டு தலங்களை காத்தது என காத்திரமான செயல்பாடுகளை செய்தது யார் தமுமுக போன்ற முஸ்லிம் அமைப்புகள்தானே தவிர மைய நீரோட்ட அரசியல்வாதிகள் அல்ல.
Sdpi விவகாரம் உங்களின் கற்பனை அதற்கு பதில் சொல்ல விருப்பமில்லை. அஸ்ஸாம் அரசியல் பத்ருதீன் அஜ்மலின் தவறல்ல. அஜ்மலை மட்டம் தட்ட நினைத்த காங்கிரசுக்கு கிடைத்த அடி. இனி காங்கிரஸ் அஸ்ஸாம் அரசியலில் முஸ்லிம்களின் முக்கியத்துவத்தை உணரும்.
இந்துத்துவ பெரும்பான்மைவாத அரசியல் இன்றா உருவானது. ஆங்கிலேயர் காலத்திலேயே முஸ்லிம் அமைப்புகள் உருவாகுவதற்கு முன்னால் உருவானதல்லவா. ஏதோ முஸ்லிம்களின் அரசியலை பார்த்து எதிர் விளைவாக நேற்றுதான் உருவானதைப் போல கதை விடுகிறீர்களே ?
இறுதியாக, தனித்த முஸ்லிம் என்ற அடையாளத்துடன் தான் முஸ்லிம்களின் பொது அரசியல் இருக்கும். அதைத்தான் வெற்றிகரமாக காயிதே மில்லத் போன்றவர்கள் செய்திருக்கிறார்கள். பொது அடையாளத்துக்காக தனி அடையாளத்தை இழக்க முடியாது.
மொழி,தேசம்,இனத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு பச்சையான சாதி வெறி,மத வெறி அரசியலை செய்வதை விட மத அடையாளங்களோடு நாட்டின் நலன் காக்கும் நல்லிணக்க அரசியல் செய்வதுதான் முஸ்லிம்களின் அரசியல். இலங்கை இனப் பிரச்சனையிலிருந்து மீத்தேன்,மீனவர்,கூடங்குளம் வரை முஸ்லிம்கள் முன்னெடுக்காத போராட்டங்கள் எதுவும் இல்லை.
எனவே எப்படி அரசியல் செய்வது என்பதை தி இந்துவும்,ஜாபரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்.
#திஇந்து,#thehindu

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-