அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
'தமிழ்நாட்டில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதாக' அறிவித்திருக்கிறார் தமிழக அரசின் தலைமை காஜி. அதேவேளையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவப் பள்ளியில் கொண்டாடப்பட்ட ரம்ஜான் கொண்டாட்டத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர் விருத்தாசலம் மக்கள். 'இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தைப் பற்றிய நல்லெண்ணத்தை மாணவர்களிடம் விதைப்பதற்காகவே, ஈகைப் பெருநாள் விழாவைக் கொண்டாடுகிறோம்' என்கின்றனர் பள்ளி நிர்வாகிகள்.

Advertisement
விருத்தாசலத்தில் பாரம்பர்யமாக செயல்பட்டு வருகிறது டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி. அரசு உதவியில் இயங்கும் இந்தப் பள்ளியில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, சமய நல்லிணக்கத்திற்காக ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர் பள்ளி மாணவர்கள். நேற்று டேனிஷ் பள்ளியில், ரம்ஜான் பெருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர் பள்ளி நிர்வாகிகளும் மாணவர்களும். நிகழ்ச்சியில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியில் செயல்படும்விழுதுகள் அமைப்பின் செயலாளர் ஜாகீர் உசேன், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

விழாவில் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் முனைவர் ஹாஜாகனி, " நமது தேசியக் கொடியில் காவி, பச்சை, வெண்மை என மூன்று வண்ணங்கள் இருக்கின்றன. இந்த மூன்றும் இந்து, கிறித்தவர், முஸ்லிம் மதங்களைக் குறிப்பிடும் வகையில் ஒன்றுக்கொன்று இணைந்துள்ளன. இந்தக் கொடியில் ஒரு நிறம் இல்லாவிட்டாலும், அவை வெறும் துணியாகத்தான் பார்க்கப்படும். மூன்று சமயத்தவரும் ஒன்றாக இருந்தால்தான், இந்தியா சிறப்பானதாக இருக்கும்.

Advertisement
இந்த நாட்டில் கல்வி, மருத்துவத்தின் பயனை எளிய மக்களுக்குக் கொண்டு சேர்த்ததில் கிறிஸ்துவ மக்களும் இஸ்லாமிய மக்களும் மிகப் பெரிய அளவில் சேவை புரிந்துள்ளனர். வருகின்ற தலைமுறையினர், ஒவ்வொரு சமயத்தில் உள்ள நல்லனவற்றைக் கற்றுத் தெளிய வேண்டும்" என்றார்.

பள்ளித் தாளாளர் பாதிரியார் தங்கதுரையோ, " ஈகைப் பெருநாளின் சிறப்புகளை வலியுறுத்துவதற்காக மட்டுமல்லாது, சமய நல்லிணக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்காகவே ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்" என்கிறார்.

டேனிஷ் பள்ளியில் நடந்த ஈகைப் பெருநாள் கொண்டாட்டம் பற்றி நம்மிடம் பேசிய முனைவர் ஹாஜாகனி, " மொத்தம் 42 இஸ்லாமிய மாணவர்கள் அங்கு படிக்கின்றனர். அவர்களுக்கு ஈகைப் பெருநாளையொட்டி இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கிறார் பள்ளித் தாளாளர் பாதிரியார் தங்கதுரை. அனைத்து மாணவர்களும் மாற்று சமயத்தினரோடு நட்பு பாராட்டும் வகையில் அந்தப் பள்ளியின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. ஒரு மதத்தைப் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தும் போக்கு சமூகத்தில் அதிகரித்திருக்கும் சூழலில், எதிர்கால சந்ததிக்கு இஸ்லாம் மதத்தின் பெருமைகளை விளக்கும் வகையில், பாதிரியார் தங்கதுரை முன்னெடுக்கும் சமய நல்லிணக்கம், மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது" என்றார் பூரிப்போடு

' எதிர்கால சந்ததிக்கு சமய நல்லிணக்கத்தைப் போதிக்கும் பாதிரியார் தங்கதுரையின் பாதையை, அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும்' என்கின்றனர் இஸ்லாமிய அமைப்பினர்.

-ஆ.விஜயானந்த்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-