அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டால் தங்களுடன் நடிக்கும் சக நடிகர்களை குடும்ப உறுப்பினர்கள் போலவே அன்போடும், பாசத்தோடும் நடத்துவார்கள். பத்துபேர் சாப்பிடும் அளவுக்கு மதிய உணவு எம்.ஜி.ஆர், சிவாஜி வீட்டில் இருந்து வரும். அனைவரும் அமர்ந்து கலகலவென உணவு அருந்துவர்.


படப்பிடிப்பு இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து அன்பாகப் பழகி பேசி சிரித்து மகிழ்வர். இது ரஜினி, கமல் நடிக்க ஆரம்பித்த காலத்திலும் தொடர்ந்தது. ஏ.வி.எம் கார்டனில் ஷூட்டிங் நடக்கும்போது இடைவேளை விட்டால் அங்குள்ள புல் தரையில் அப்படியே படுத்து முகத்தை மட்டும் வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டு குட்டித் தூக்கம் போடுவார், ரஜினி. இப்போது 'கபாலி' ஷுட்டிங்கில்கூட மேக்கப் போடுபோது மட்டும்தான் கேரவனில் இருப்பார். டேக் தொடங்கி விட்டால் மாலை வரை ஷூட்டிங் ஸ்பாட் சேரிலேயே அமர்ந்து இருந்தார்.

கேரவன் என்ற ஒன்று என்று வந்ததோ அன்றைக்கே நடிகர்கள், நடிகைகளுக்குள் ஈகோ போர் எட்டிப் பார்க்கத் துவங்கிவிட்டது. நான்கு காட்சிகளில் நடிக்கும் காமெடி நடிகர்கள்கூட கேரவன் வேன் இல்லையென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டையே அதகளம் செய்து விடுவார்கள். விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என்று இவர்களுக்கென்று தனித்தனியே கேரவன் வேன் தயார் செய்து சரவணன் என்பவர் அனுப்பி வருகிறார். சூர்யாவுக்கு அனுப்புகிற கேரவன் வேனை வேறு ஹீரோக்களுக்கு அனுப்ப மாட்டார். சூர்யாவுக்கு ஷூட்டிங்கே இல்லையென்றால் அது எத்தனை நாட்கள் ஆனாலும் அப்படியே நிற்கும் அதுமாதிரி ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் தனித்தனியே கேரவன் இருக்கிறது. ஏதோ அவசரத்துக்கு வேறு ஹீரோக்களுக்கு அனுப்புவது தெரிந்தால் அந்த நிமிடமே அவரிடம் வேன் வாடகைக்கு எடுக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்களுக்கு ஹீரோக்கள் கண்டிஷன் போடுவார்கள். ஹீரோக்கள், ஹீரோயின்கள் இருக்கும் கேரவன் வேன் ஒருநாள் வாடகை 7,000 ரூபாய்.

தேனப்பன் தயாரிப்பில், 'தங்க மீன்கள்' ராம் இயக்கத்தில் மம்முட்டி 'பேரன்பு' படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. 'தங்க மீன்கள்' படத்துக்காக குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்ற சாதனா, மம்முட்டியின் மகளாக நடித்து வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத் தயாரிப்பாளர் தேனப்பன் சென்றால் உட்கார்ந்து இருக்கும் சேரில் இருந்து தடாலென எழுந்து நின்று வணக்கம் வைக்கிறார், கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. சினிமா ஷூட்டிங் செல்வதற்கு என்றே இரண்டு கோடி மதிப்புள்ள பென்ஸ் கேரவன் வேனை சொந்தமாக வாங்கி வைத்து இருக்கிறார். கேரளாவிலிருந்து அந்த வேனை சென்னைக்கு கொண்டுவந்திருக்கிறார் ‘மம்மூக்கா’.

தயாரிப்பாளருக்கு தினமும் 7,000 ரூபாய் செலவு வைக்காமல் 'பேரன்பு' படப்பிடிப்பில் தினசரி கலந்து கொள்கிறார். மம்முட்டி மட்டுமல்ல கேரளாவில் இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் தாங்களே சொந்தமாக கேரவன் வேன் வாங்கி வைத்துள்ளனர்.

பல கோடிகளில் சம்பளம் வாங்கும் தமிழ்நடிகர்களும் மம்முட்டியை பின்பற்றலாமே என்று அங்கலாய்த்தார் ஒரு தயாரிப்பாளர்!

- சத்யாபதி
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-