அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
திருச்சி நாவல்பட்டு போலீஸார் ஆண்-பெண் இருவரை கைது செய்தனர். ரியல் கணவன் மனைவியான இவர்கள், அக்கா தம்பி என அறிமுகம் ஆகி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் பல பெண்களை ஏமாற்றி இருப்பது அம்பலம் ஆகியுள்ளது.


ஃபேஸ்புக் மூலம் பல பொதுப் பிரச்னைகள் விவாதத்திற்கு வருகின்றன. ஆனால் ஃபேஸ்புக்கையே மூலதனமாகக் கொண்டு 30க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்து, அவர்களிடம் நகை, பணம் பறித்த சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ஜெயா (மாணவியின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை திருச்சி, குண்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டனர். இங்குள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து மாணவி ஜெயா, கல்லூரி படிப்பை தொடர்ந்தார். படிப்பை முடித்ததும் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய அவரது பெற்றோர், ஒரு திருமண இணையதளத்தில் மகளின் புகைப்படத்தோடு, 'மணமகன் தேவை' என பணம் கட்டி விளம்பரம் கொடுத்தனர். தொடர்ச்சியாக மணமகன் தேடல் முயற்சியில் ஈடுபட்டுவர, " இணையதளத்தில் உங்கள் புகைப்படம் பார்த்தேன். உங்களை திருமணம் செய்துகொள்ள சம்மதம்" என ராமச்சந்திரன் என்பவர், மாணவி ஜெயாவின் ஃபேஸ்புக்கில் தொடர்புகொண்டார்.

மேட்ரிமோனியலில் மணமகன் தேவை

அடுத்து சில நாட்கள் இந்த பேச்சு தொடர, அடுத்து ஃபேஸ்புக் உரையாடல், போன் உரையாடலாக தொடங்கியது. அடுத்ததாக ஜெயாவை போனில் தொடர்புகொண்ட பெண் ஒருவர், " நான், ராமச்சந்திரனின் சகோதரி. உன்னை என் தம்பி பத்திரமாக பார்த்துக்கொள்வான்" எனச் சொல்லி உள்ளார். தொடர்ந்து நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களில், தன்னைப்பற்றி வெளிப்படையாக பேசிய ராமச்சந்திரனை ஜெயாவுக்கும் பிடித்துப்போக, அவர்களுக்குள்ளான பழக்கம் இன்னும் அதிகமாக ஆனது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 1 ம் தேதி முதல் விடுதியில் தங்கியிருந்த மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவி ஜெயாவின் பெற்றோர் திருச்சி நாவல்பட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், விசாரணையில் இறங்கினர். இந்நிலையில் சிலநாட்களுக்கு முன் மாணவி ஜெயா, நாவல்பட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்து நான்தான் ஜெயா என சொல்லி, " ராமச்சந்திரன் எனும் வாலிபர் ஒருவர், என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, திருச்சி சமயபுரம் அருகே உள்ள ஒரு இடத்தில் வீடு எடுத்து தங்கி, சில நாட்கள் என்னோடு தங்கியிருந்து உல்லாசமாக இருந்தார். நான் போட்டிருந்த நகை மற்றும் கையில் வைத்திருந்த ரொக்கப்பணத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார். அந்த வாலிபர் ராமச்சந்திரனுடன் அவருடைய அக்கா ஒருவரும் இருந்தார்" என்ற ஜெயா, தன்னிடம் இருந்த புகைப்படத்தையும் கொடுத்து இவர்களை தயவு செய்து கைது செய்யுங்கள் என கதறி அழுதார்.

ஃபேஸ்புக்கில் உரையாடல்

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், மாணவி ஜெயாவின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம், மகளை ஒப்படைத்தனர். கூடவே கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரின் நகை, பணத்தை பறித்துச் சென்ற ராமச்சந்திரனையும், அவரது அக்காவையும் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில், நாவல்பட்டு போலீசார் திருப்பதி, சென்னை, திருப்பூர், கோவை, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். கடந்த ஒரு மாதமாக தேடுதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, இதுகுறித்து திருச்சி மாவட்ட போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று ராமச்சந்திரனும், அவரது அக்காவும் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் திருப்பூர்-திருச்சி அரசு பஸ்சில் இருந்து கீழே இறங்கியதை பார்த்த போலீஸார், இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

அடுத்து தொடர்ச்சியாக நாவல்பட்டு போலீஸ் நிலையத்தில் விசாரணை


விசாரணையில் ராமச்சந்திரன், " எனது உண்மையான பெயர் குரு தீனதயாளன். திருப்பூர் மாவட்டம், வீரபாண்டியை அடுத்துள்ள நொச்சிபாளையம்தான் எனக்கு சொந்த ஊர். என்னோடு இருப்பவர் எனது மனைவி பிரியதர்ஷினி" எனச் சொன்னபோது போலீஸார் அதிர்ந்துபோனார்கள். காரணம் அவரைத்தான் தனது அக்கா எனச் சொல்லி பலரை சூறையாடியதும், பணம் பறித்ததும் தொடர்ந்துள்ளது.

தொடர்ந்து பேசிய குரு தீனதயாளன்,"காலேஜ் படிப்பை முடித்துவிட்டு பல வருடங்களாக வேலை இல்லாமல் இருந்தேன். அப்போதுதான் ஃபேஸ்புக்கில் உலாவர ஆரம்பித்தேன். அதில் பெண்கள் பெயரில் இருக்கும் இளம்பெண்களுக்கு ஃபிரண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க ஆரம்பித்து அவர்களுடன் பேச ஆரம்பித்தேன். அடுத்து அவர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். இப்படி கடந்த 2013 ம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான சென்னையை சேர்ந்த பிரியதர்ஷினியை காதலிக்க ஆரம்பித்தேன். அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.ஏற்கெனவே வேலையில்லாமல் இருந்த எனக்கு, குடும்பம் நடத்த போதிய பணம் இல்லாததால், மிகவும் சிரமப்பட்டோம். அப்படி யோசிக்கும்போதுதான் ஃபேஸ்புக், திருமண தகவல் மையங்கள் மூலம் கல்லூரி மாணவிகள், கணவரை இழந்த பெண்கள், திருமணம் முடித்து வேலை தேடும் பெண்களை குறிவைக்க திட்டமிட்டோம்" எனச் சொல்லி உள்ளார்

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குரு தீனதயாளனை தம்பி என அறிமுகம் செய்துவைத்து, பிரியதர்ஷினியின் வார்த்தைகளை நம்பிய பெண்களை குருவுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களுடன் சில நாட்கள் குடும்பம் நடத்திய கையோடு, கிடைக்கின்றவற்றை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆவது என மோசடிகளை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

அக்காவை போல் நடித்த மனைவி - தம்பியாக நடித்த கணவன்

" முதலில் ஃபேஸ்புக்கில் உள்ள அழகான பெண்களை கவர்ந்து அவர்களை, அவர்களது ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு வருமாறு அழைப்பேன். பின்னர் அப்படி வரும் பெண்களிடம், 'நாம் ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கணும்னா, எனது அக்கா உன்னை பார்த்து சரின்னு சொன்னால்தான் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்' எனக் கூறுவேன். எனது வார்த்தையில் மயங்கி, வீட்டில் இருக்கும் நகைகளை அணிந்துகொண்டு வரும் பெண்களிடம், பிரியதர்ஷினியை எனது அக்கா எனக் கூறி அறிமுகப்படுத்தி வைப்பேன். அடுத்தடுத்த சந்திப்புகளில் அந்த பெண் விருப்பப்பட்டால் அவருடன் உல்லாசமாக இருப்பேன். முரண்டுபிடித்தால் அவருடன் வற்புறுத்தி, உறவு வைத்துக்கொண்டு, என்னோடு தங்க வைத்திருப்பேன். சந்தர்ப்பம் பார்த்து அவர் அணிந்திருக்கும் நகைகளை பறித்துக்கொண்டு அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு, வேறு ஊருக்கு எஸ்கேப் ஆகிவிடுவோம். அங்கு கையில் இருக்கும் நகைகளை விற்று நாங்கள் இருவரும் ஜாலியாக வாழ்க்கையை அனுபவிப்போம்.

காதலை பிரித்து


எங்கள் வலையில் கல்லூரி மாணவிகள் மட்டுமில்லாமல், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வீட்டில் கோபித்துக்கொண்டு வந்த பெண்கள் மற்றும் காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டபின் வேலை தேடி அலையும் ஜோடிகளை கண்டுபிடித்து, திருப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, வறுமையில் இருக்கும் அந்த இளம்பெண்களுடன் உல்லாசமாக இருப்பேன். பிறகு அந்த பெண்கள் போட்டிருக்கும் நகைகளை நாங்கள் பறித்துக்கொண்டு, ' இதை வெளியில் சொன்னால் உனக்குதான் அசிங்கம்' என மிரட்டி அனுப்பி வைத்துவிடுவோம். இதுபோன்று கடந்த 2014 ல் இருந்து இதுவரை தமிழகம் முழுக்க 30க்கும் மேற்பட்ட பெண்களை வேளாங்கண்ணி, தஞ்சாவூர், சென்னை, திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களுக்கு வரவழைத்து, கோயில் அருகில் உள்ள ஹோட்டல்களில் ரூம் எடுத்து தங்கி, அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, கையோடு அவர்களிடம் நகைகளை பறித்துச்சென்று விடுவோம். இப்போது இந்த ஜெயாவால் சிக்கிக்கொண்டோம்." என குருதீனதயாளன் கக்கிய தகவல்களை கேட்ட போலீஸார் அதிர்ந்து கிடக்கிறார்கள்.

தொடந்து குரு தீனதயாளனிடமும், அவரது மனைவி பிரியதர்ஷினியிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருவதால், அவர்கள் ஏமாற்றிய பெண்கள், அவர்களிடம் கைப்பற்றப்பட்ட நகைகள் எங்கே, யார் மூலம் விற்கப்பட்டது? அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்கள் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஃபேஸ்புக், மேட்ரிமோனியல்களில் உள்ள பெண்களை குறிவைத்து நடந்துள்ள இந்த மோசடி, சமூகவலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் இன்னும் உஷாராக இருக்க வேண்டும் என்ற பாடத்தை மீண்டும் உணர்த்தி உள்ளது.

- சி.ய.ஆனந்தகுமார்

படம்: தே.தீட்ஷித்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-