அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஆசிய கண்டத்திலேயே அமைதி பூங்காவாய் திகழ்ந்த நமது இந்திய தேசம்,இன்று மயான பூமியாய் உருமாறி வருவது போல் இருப்பது வேதனையாக உள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் மரண ஓலங்களே….எங்கும் காணமுடிகிறது.

கடந்த இரு வாரங்களில் தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை,தூத்துக்குடியில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட படுகொலை சம்பவங்களும்,மே மாதம் 30ந்தேதியிலிருந்து ஜூன் மாதம் 24ந்தேதி வரை சென்னையில் மட்டும் 12 கொலைகள் என தமிழகமே மரண பீதியில் உறைந்து நிற்கிறது.

பனி படர்ந்த காஷ்மீர் பள்ளத்தாக்குகளோ, இந்திய ராணுவத்தின் காட்டு மிராண்டி தாக்குதலில் மனித குருதியாய் நிறம் மாறி காட்சி தருகிறது.

அரை சாண் வயிற்றுக்காக ஒரு வேளை உணவுக்கு அல்லல்படும் பாமர தலித் மக்கள் செத்து கிடந்த மாட்டின் தோலை உரித்து விற்றாவது தன் குடும்ப பசி தீராதா?என்னும் விரக்தியில் குப்பையில் கிடந்த துர்நாற்றம் வீசிய இறந்த மாடுகளின் தோலை உரித்த காரணத்திற்காக கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவம் நடந்தேறியது காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் தான்.அகிம்சையை வலியுறுத்திய காந்தியின் மண்ணில் தான் இன்று சகிப்பின்மை மரணித்து போயுள்ளது.

கடந்த பத்தாண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் லஞ்சம்,ஊழல் என்னும் பொருளாதார சுரண்டலில் வெறுத்து போன மக்கள் வேறு வழியின்றி மோடி வகையறாக்களிடம் ஆட்சியை கொடுத்தனர்.

பாஜகவென்னும் சங்பரிவாரம் ஆட்சிக்கு வந்தால் இந்தியா முழுவதும் அமைதி கெடும் என்ற சமூக ஆர்வலர்களின் அச்சம் உண்மை என்பதை கடந்த இரண்டரை ஆண்டு கால மோடி ஆட்சியின் அவலங்கள் நிரூபணம் செய்து விட்டது.

மாடுகளுக்கு ஆட்சி செய்ய வேண்டியவர்களை போய் மனிதர்களுக்கு ஆட்சி செய்ய தவறாக தேர்ந்தெடுத்து விட்டோமோ?என தற்போது மக்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

தங்களின் ஆட்சியில் நாடு முழுவதும் பாலாறும்,தேனாறும் ஓடும் என்றெல்லாம் தேர்தல் பரப்புரையில் பீற்றிக்கொண்ட மோடியால் அதை செய்யமுடியா விட்டாலும் நாடு முழுவதும் மனிதனின் ரத்த ஆறு ஓடாமலாவது தடுக்க வேண்டாமா?

கோடி கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளையடித்த லலித் மோடி,விஜய் மல்லையா போன்ற திருடர்கள் சகல பாதுகாப்புடன் சொகுசு வாழ்க்கை வாழும் போது,அரை வயிற்று உணவுக்காக போராடும் ஏழைகள் மாட்டின் பெயரால் அடித்து கொல்லப்படும் அவல நிலைதான் இன்றைய மோடி சர்க்காரின் சாதனையாக உள்ளது.

பாமர மனிதன் வாழ முடியாத தேசமா இந்தியா?
கீழை ஜஹாங்கீர் அரூஸி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-