அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூரில் பாதாள சாக்கடை திட்ட செயல்பாடுகளை ஜெர்மன் நாட்டு வங்கியை சேர்ந்த அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.பாதாள சாக்கடை திட்டம்

பெரம்பலூர் நகராட்சியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த கே.எப்.டபிள்யூ வங்கியின் உதவியுடன் ரூ.31 கோடியே 91 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்டம் 2013–ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வீடுகள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என 9 ஆயிரத்து 299 இணைப்புகளில் இருந்து பெறப்பட்டு வரும் 22 லட்சம் லிட்டர் கழிவு நீர் நெடுவாசல் சாலையில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் தினந்தோறும் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை கே.எப்.டபிள்யூ வங்கியின் சுகாதாரம் மற்றும் கல்வி பிரிவின் தலைவர் வொல்ப்காங் ரில் தலைமையில் வங்கியின் டெல்லி பிரிவின் ஆலோசகர் பவன்குமார் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் தண்ணீர் நுழைவுத்தொட்டி, மணல், கல் நீக்கும் தொட்டிகள், காற்று செலுத்தி நுண்ணுயிரிகள் வளர்க்கும் தொட்டி, கழிவு பொருட்களை திடப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.முதல்– அமைச்சருக்கு நன்றி

மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள், சுகாதாரப்பணிகள் குறித்து நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி பொறியாளர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் குழுவின் தலைவர் கூறுகையில், இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், கழிவுநீர் வீணாகாமல் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தினை பெரம்பலூர் மாவட்டத்திற்கு வழங்கிய முதல்–அமைச்சருக்கு எங்கள் குழு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம், என்றார்.

அதனைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் பாதாள சாக்கடை திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு நகர்ப்புற தொழில்கள் மேம்பாட்டு நிறுவன மேலாளர் ராஜேந்திரன், துணை மேலாளர் ஜஸ்டின் மற்றும் உயர் அலுவலர்கள் ஹிதப்பிரதா, தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் செயற்பொறியாளர் அண்ணாதுரை, நகராட்சி நிர்வாக ஆணைய உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி ஆணையர் முரளி, நகராட்சி பொறியாளர் ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-