அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ரமழான் இறுதிக் கட்டம், தெஹிவல சூழல் காலையிலிருந்தே பிச்சைக்காரர்கள் தொல்லை. ஒவ்வோர் அரை மணிக்கொருமுறையும் கோலிங் பெல் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. வயதானவர்கள், வாலிபர்கள் என மாறி மாறி எல்லா வர்க்கத்தினரும் ஹதியாக்காக வந்துகொண்டிருந்தனர்.

பொதுவாக நான் ஹதியாக் கேட்டு வருவதையோ அவர்களுக்கு வாரிக் கொடுப்பதையோ பெரிதாக வரவேற்பதில்லை. காரணம் நோன்பு பிச்சைக்காரர்களது சீசனாக மாறியுள்ளது. இன்னும் இது பணமீட்டும் ஒரு சாதுரியமாகவும் ஆகியுள்ளது.

இதே பானியில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஹதியாக்காக காந்திருந்தாள். அவளைக் கண்டதும் வீசுவதற்காக கட்டிவைக்கப்பட்டிருந்த எனது பெரிய ராத்தாவின் பிள்ளைகளின் பழைய உடுப்புப் பொட்டலம் ஞாபகத்துக்கு வந்தது.

ஹதியா கேட்டு வந்தவரிடம் "தாத்தா, சின்ன புள்ள பழைய உடுப்பு ஈக்கி வேணுமென்டா   எடுத்துக்கோங்கோ" என்று அப்பொட்டலத்தை காட்டினேன்.

கிழிந்தது, பாவிக்க முடியாமல் பழுதானது, இறுக்கமானதால் ஒதுக்கப்பட்டது என எல்லாமே அப்பொட்டலத்திலிருந்தது. அவளும் அவள் பிள்ளைகளுக்கு பொருந்தக்கூடிய கிட்டத்தட்ட அத்தனையையும் சுருட்டி ஒரு ஷொபிங் பேக்கில் போட்டுக்கொண்டாள்.

இறுதியாக அவள் என்னிடம் "நாநா (இலங்கையின் பிரபல ஆடையகம் ஒன்றின் பெயரை கூறி) பேக் ஒன்னு இருந்தா தாங்களேன்" என்றாள். அவள் இப்படிக் கேட்டதும் சட்டென்று ஏதோ ஒன்று உள்ளத்தை தாக்கியது.

நானும் வீட்டிலிருந்த ஒரு அந்த ஆடையக  பேக்கை கொடுத்து விட்டு "ஏன் என்னத்துக்கு இந்த  பேக்" என்று கேட்டேன். இல்ல நாநா வீட்டுக்கு போய் இதில இருக்கிற நல்ல உடுப்பையெல்லாம் இந்த ஆடையக  பேக்கில போட்டு கடையில வாங்கின புதிய உடுப்பென்டு புள்ளகள்ட கொடுத்தா சந்தோசமாக பெருநாளைக்கு உடுத்துவாங்க அதுதான்  பேக் கேட்டேன்" என அவள் கூறி முடிக்குமுன்னே என் கண்களை நான் பொத்திக்கொண்டேன் கண்ணீர் வெளியே சிந்தாமல்.....

Abdul Careem
24.06.2016
நன்றி: மடவள நியுஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-