அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த பதினொறு ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக சமுதாயப் பணியாற்றி வரும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) கடந்த 2013 வருடம் முதல் குவைத்தில் முதல் முறையாக நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை சங்கத்தின் தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பேருரை நிகழ்த்தப்படும் குவைத், ஃகைத்தான் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ஏற்பாடு செய்துள்ளது.

குவைத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05/06/2016) மாலை ரமழான் நோன்பு துவங்கியதையடுத்து திங்கட்கிழமை (06/06/2016) மாலை முதல் தினந்தோறும் நோன்பு திறப்பதற்கு தமிழகத்து நோன்புக் கஞ்சியுடன் பேரீத்தம் பழம், தண்ணீர், மோர், குளிர் பானம், ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், திராட்சை, தர்பூசணி போன்ற பழ வகைகள், வடை, சமோசா, பஜ்ஜி போன்ற சிற்றுண்டி வகைகள் மற்றும் இனிப்பு பலகாரங்கள், மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு உணவு உள்ளிட்டவற்றவற்றை நோன்பாளிகளுக்கு வழங்கி வருகிறது.

தினந்தோறும் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன்பாக சிந்தைக்கினிய சிற்றுரைகள், உள்ளங்களை நிம்மதியாக்கும் இறை நினைவு (திக்ர்) மஜ்லிஸ், அதைத் தொடர்ந்து சிறப்பான துஆவுடன் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இஷா மற்றும் தராவீஹ் (ரமழான் சிறப்புத் தொழுகை 20 ரக்அத்துகள்) தொழுகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சங்கத்தின் நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலில் 100க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் நோன்பு திறப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நோன்பு திறக்க வருகை தரும் நோன்பாளிகளை இன்முகத்துடன் வரவேற்று, அன்பாக அமர வைத்து, சிறப்பான முறையில் உபசாரம் செய்து, தாயகத்தில் இருப்பதை போன்ற சூழ்நிலையை உருவாக்கி மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைப்பதற்குண்டான சிறப்பான பணிகளை செய்வதற்கு சங்கத்தின் நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், களப்பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பதாக சங்கத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

இவ்வருடத்தின் முதல் இரண்டு நாட்கள் இஃப்தார் நிகழ்ச்சியில் 200 சகோதரிகள் உட்பட 1,200க்கும் அதிகமானோர், மூன்றாம் நாள் 250 சகோதரிகள் உட்பட 1,300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் உள்ளேயும், வெளியேயும் நோன்பாளிகள் அமர வைக்கப்பட்டனர்.
கடந்த 2013ல் ஏறக்குறைய 10,000 சகோதர, சகோதரிகளும், 2014ல் ஏறக்குறைய 20,000 சகோதர, சகோதரிகளும், 2015ல் ஏறக்குறைய 30,000 சகோதர, சகோதரிகளும் கலந்து கொண்டனர். குவைத் வெளிநாட்டு அமைப்புகள் வரலாற்றில் இது ஓர் மைல்கல் என்றால் அது மிகையல்ல. K-Tic சங்கம் ஏற்பாடு செய்திருந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் குவைத் வாழ் தமிழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அல்ஹம்து லில்லாஹ்…!குவைத்தில் வசிக்கும் சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுடன், தங்களின் சொந்தங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வருமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் சங்க நிர்வாகிகள்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-