அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


(முன்குறிப்பு: இக்கட்டுரையில் இடம்பெறும் உரையாடல்கள் அனைத்தும் உண்மையே. எங்கும் வாசிப்பு சுவாரஸ்யத்துக்காகவோ, வெற்று பரபரப்புக்காகவோ சொல்லாத/இல்லாத விஷயத்தை எழுதவில்லை. அனைத்தும் விகடன் நிருபரின் நேரடி அனுபவமே! )

எங்கு திரும்பினாலும் ‘Dக்கு முன்னால E என்ற’ சென்னைஸ் அமிர்தாவின் விளம்பரங்கள் அணிவகுக்கின்றன. 'சென்னைஸ் அமிர்தாவில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தால் 100% வேலை உறுதி. படிக்கும்போதே பத்தாயிரம் வரை சம்பளம், பட்டம் பெற்ற பின்னர் ஃபாரினில் வேலை' என விளம்பரத்தில் வரும் ஒவ்வொரு வரியும் நம்மை ஈர்க்கின்றன. ஆனால், சமூக வலைதளங்களில் 'சென்னைஸ் அமிர்தா'வைப் பற்றிவரும் செய்திகள், கலாய்கள் பதற வைக்கின்றன.

இதை தேங்காய் எண்ணெய் விளம்பரமாகவோ, ஊறுகாய் விளம்பரமாகவோ நினைத்து, கடந்து விட முடியாது. கிராமப்புற மாணவர்கள், 'சென்னைஸ் அமிர்தாவில் படித்தால் ஃபாரினில் வேலை பார்க்கலாம் என நினைத்து வருகிறார்கள். லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் இதில் அடங்கியிருக்கிறது. ’சென்னைஸ் அமிர்தா விளம்பரங்கள் உண்மையா... அங்கு படிக்கும் மாணவர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்.?’ எனக் கேட்டு விகடனுக்கு வாசகர்களிடமிருந்து ஏகமாகக் குவிகிறது விசாரணைகள். எனவே, வாசகர்களின் கோரிக்கையை ஏற்று 'சென்னைஸ் அமிர்தா'வின் கிளைகளுக்கு கிளம்பினோம்.

'சென்னைஸ் அமிர்தா'வில் சேர விரும்பும் மாணவராக நந்தனம், ஓ.எம்.ஆர் ஆகியப் பகுதிகளில் இருக்கும் சென்னைஸ் அமிர்தா கல்லூரிகளுக்கும், நந்தனத்தில் இருக்கும் தலைமை அலுவலகத்துக்கும் சென்ற அனுபவங்கள் அப்படியே இங்கே....


முதலில், காம்ப்ளக்ஸ் மாதிரி இருக்கிற நந்தனம் கிளை. கல்லூரியின் நுழைவாயிலிலேயே நான்கைந்து மாணவர்கள் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்கள். அருகில் ஓர் ஆசிரியர் அமர்ந்திருந்தார். சில மாணவர்கள் வெளியே சென்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரை, ‘ஃபீஸ் கட்டலன்னா எக்ஸாம் எழுத முடியாது’ என்று எச்சரித்துக் கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அந்த சமயத்தில், ‘சார்... அட்மிஷன்..’ என்றவாறு அவரருகில் போய் நின்றோம். உடனே அவரது முகம் உற்சாகமானது. அந்த பீஸ் கட்டாத மாணவனை போகச் சொல்லிவிட்டு நம்மிடம் தொடர்ந்தார்.

‘வாங்க.. வாங்க.. எங்கிருந்து வர்றீங்க.?’

‘சார் தஞ்சாவூரிலிருந்து வர்றோம் சார்...’

‘ஓ.. அப்படியா? நானும் அந்த ஊருதாங்க... என்ன படிச்சிருக்கீங்க?’

‘சார் பத்தாவது முடிச்சிட்டு ஒரு வருஷம் சென்னைல சி.என்.சி ஓட்டிக்கிட்டு இருந்தேன். உங்க விளம்பரத்தை பார்த்ததும் இங்க சேரலாம்னு தோணுச்சி சார்.’

‘டைரக்ட்டா விளம்பரத்த பார்த்து வந்தீங்களா... இல்ல அதுல உள்ள நம்பருக்கு கால் பண்ணீங்களா.?
'இல்ல சார், நேரா இங்க வந்துட்டோம்.’

‘நல்ல வேளை அந்த நம்பருக்கு கால் பண்ணியிருந்தா உங்ககிட்ட 300 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கியிருப்பாங்க. நம்ம ஊருக்காரரா வேற போயிட்டீங்க. நான் உங்களுக்கு ஃபுல் சப்போர்ட் பண்றேன். என் பேரு திலக். யாரு கேட்டாலும் திலக் சார் ரெஃபரன்ஸ்னு சொல்லுங்க என்ன...?

‘ம்ம்ம். ஓ.கே சார்.. சார் இங்க படிச்சா வேலை கிடைக்குமா...? வீட்ல ரொம்பக் கஷ்டம் சார்...’

‘கண்டிப்பா கிடைக்கும். உங்களுக்கு 3 மணி நேரம்தான் கிளாஸ். மத்த நேரத்துல நீங்க பாக்குற வேலையக் கூட பார்ட்டைமா பாத்துக்கலாம். அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்’ என்றவாறு கோர்ஸ் டீட்டெய்ல்களையும் ஃபீஸ் டீட்டெய்ல்களையும் விளக்க ஆரம்பித்தார். அந்த உரையாடல் முடிந்ததும்... ‘சார்.. காலேஜை பாக்கலாமா சார்?’ என்றோம். ‘ஓ... தாராளமாக வாங்க பாக்கலாம்!’ என்று உள்ளே அழைத்தார். பின் தொடர்ந்தோம்.

‘இங்க பாருங்க... இதுதான் க்ளாஸ் ரூம்’ என்று ஒரு கண்ணாடி அறையை காட்டினார். உள்ளே ஏறக்குறைய 20 டெஸ்க்குகள் இருந்தன. ‘ஃபுல்லா ஏ.சி. க்ளாஸ் முடிஞ்சதால ஆஃப் பண்ணி வச்சிருக்கோம்’ என்றபடியே ஹவுஸ் கீப்பிங் அறைக்கு அழைத்துச் சென்றார். ஒரே ஒரு பெட் இருந்தது. ‘இங்கதான் உங்களுக்கு டவல் ஃபோல்டிங் எப்டி பண்றது? எப்படி பெட்ஷீட் செட் பண்றதுன்னு கத்துக் கொடுப்போம்’ என்றார். விளம்பரத்தில் வரும் உலகத்தரத்தை விடுங்கள், உள்ளூர் தரத்தையே உணரமுடியவில்லை. ‘மேலதான் கிச்சன்லாம் இருக்கு. ஆனா, இப்ப அங்க போக முடியாது. லாக் பண்ணி வச்சிருக்காங்க’

‘ஓ.... ஓ.கே சார்’

‘எப்ப அட்மிஷன் போடுறீங்க.?’

‘எந்த கோர்ஸ்னு டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து, அட்மிஷன் போட்டுடுறோம் சார்’

‘சரி ஓ.கே. இப்ப 1750 ரூபாய் கட்டி ரெஜிஸ்டர் பண்ணிருங்க இல்லன்னா சீட் கிடைக்காது. கொஞ்ச இடம்தான் இருக்கு.'
சார், பணம் எடுத்துட்டு வரல சார். இப்ப ஜஸ்ட் விசாரிக்கலாம்னுதான் வந்தோம். ஃப்ரெண்ட் பக்கத்துலதான் இருக்கான். பணம் வாங்கிகிட்டு ஈவ்னிங்குக்குள்ள வந்து கட்டிடுறோம் சார்’

‘ஓ... அப்படியா சீக்கிரம் வந்துருங்க. வந்துட்டு என் நம்பருக்கு கால் பண்ணுங்க. உங்க நம்பரையும் கொடுங்க, நான் கால் பண்றேன்’ என்றார். நம்பரை கொடுத்துவிட்டு வெளியேறினோம்.

வெளியில் நின்றுகொண்டிருந்த மாணவர்கள் நம்மை பாவமாக பார்த்தபடி இருக்க, ஒருவர் வந்து, "இங்கயெல்லாம் வந்துடாதீங்க. +2 படிங்க. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கணும்னு விருப்பப்பட்டா வேற காலேஜுக்குப் போங்க. இங்க ஒண்ணுமே சரி இல்ல. பார்ட் டைம் ஜாப்னு சொல்லுவாங்க. 12 மணி நேரம் வேலை பாக்கணும். 3 மணி நேரம் கூட தூங்க முடியாது. 3 வருஷம் கழிச்சித்தான் 10 ஆயிரம் சம்பளம் வாங்க முடியும். எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலி. என்ஜினியரிங் படிச்சிகிட்டு இருந்தேன். விளம்பரத்தை பாத்துட்டு. படிச்சிகிட்டு இருந்த என்ஜினியரிங்கை டிஸ் கண்டினியூ பண்ணிட்டு இங்க வந்தேன். விளம்பரத்துல வர்றதெல்லாம் உண்மை இல்லை. நான் இங்க வரும்போது 60 பேர் படிச்சாங்க. இப்ப இருக்குறது வெறும் 25 பேர். அதெல்லாம் விளம்பரத்துல காட்டுறாங்களா? முக்கால்வாசி பேர் பாதியிலேயே ஓடிடுறாங்க. நான் ஏற்கவே என்ஜினியரிங்கை டிஸ்கன்டினியூ பண்ணிட்டேன். இதுலயும் பாதியிலேயே போனா... வீட்ல சங்குதான். வேற வழி இல்லாம இங்க படிக்கிறேன்" என்றார் சோகமாக. அவர் அருகில் இருந்த மாணவர்களும், "இந்த ஃபீல்டுல நல்லா சம்பாதிக்கலாம். ஆனா, இந்த காலேஜ் வேணாம் பாஸ்" என்றார்கள். ‘யோசிக்கிறேன்’ என்று கைகொடுத்துவிட்டு கிளம்பினோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-