அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
திருச்சி, ஜூன்.23-

திருச்சியில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. பெண்ணின் வயதை விட காதலன் வயது குறைவாக இருந்ததால் இந்த பரிதாப முடிவை தேடிக் கொண்டனர்.

ஆட்டோ டிரைவர்

திருச்சி தென்னூர் அண்ணாநகர் காந்தியடிகள் தெருவை சேர்ந்தவர் உசேன்பாபு. இவரது மகன் இம்ரான்(வயது 19). ஆட்டோ டிரைவர். திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் அருகே அகலங்நல்லூர் கிராமத்தை சேர்ந்த கனகராஜின் மகள் திவ்யா (21). இவர் திருச்சி சிங்கார தோப்பில் உள்ள கடிகார கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இம்ரான் ஆட்டோவில் சிங்கார தோப்பு பகுதிக்கு வாடிக்கையாளரை ஏற்றி வரும் போது திவ்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரது வீட்டிலும் தங்களது காதலை தெரிவித்து திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கூறினர். ஆனால் திவ்யாவைவிட இம்ரானுக்கு 2 வயது குறைவாக இருந்ததால் இருவரது வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெற்றோர் அறிவுரை

இந்த நிலையில் இம்ரானும், திவ்யாவும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் இருவரையும் அவர்களது பெற்றோர் மீட்டனர். அப்போது திருமண வயது வரும் வரை பொறுத்திருங்கள், அதன்பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், அதுவரை அவரவர் வீட்டில் இருக்கும்படி காதல் ஜோடியினரை பெற்றோர் அறிவுறுத்தினர். இதையடுத்து இம்ரானும், திவ்யாவும் அவரவர் வீட்டிற்கு சென்றனர். ஒரு மாதத்திற்கு மேலாக திவ்யா வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. இம்ரான் வழக்கம் போல ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 17-ந்தேதி திவ்யா வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு திருச்சி வந்தார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காதல் ஜோடி பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தனர்.

நடுரோட்டில் மயக்கம்

நேற்று முன்தினம் இரவு 2 பேரும் என்.எஸ்.பி. ரோடு அருகே ஒத்தைமால் தெருவில் ஆட்டோவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் எழுந்து நடந்த போது இம்ரானும், திவ்யாவும் வாந்தி எடுத்து நடுரோட்டில் மயக்கமடைந்தனர். இதனை கண்ட அப்பகுதியினர் மற்றும் இம்ரானின் நண்பர்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அதிகாலை இம்ரான், திவ்யா ஆகிய 2 பேரும் இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து, அவர்களது உடலைகளை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன், சப்-இன்ஸ்பெக்டர் சுலோச்சனா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் திவ்யாவைவிட இம்ரான் வயது குறைவாக இருந்ததால் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று எண்ணிய காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று பகல் அவரவர் பெற்றோரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. உடல்களை அவர்கள் பெற்றுச் சென்றனர். காதல் ஜோடி தற்கொலை செய்தது குறித்து தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் முன்பு சோகத்தில் நின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-