அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் நகரில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெரம்பலூர் நகரின் வளர்ச்சிக்கேற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் நகரின் பிரதான சாலைகளில் அன்றாடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, சிறு சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.

பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலையிலிருந்து, பெரியார் சிலை வரை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு, தென்புறம் ஆட்டோ மட்டுமே செல்ல வேண்டும் எனவும், வலது புறத்தில் ஆட்டோக்களும், மோட்டார் சைக்கிள்களும் நிறுத்துவதற்கும் அனுமதிக்கப்பட்டது. மேலும், வடதிசையில் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

ஆனால், பைக் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் இரு வழியிலும் செல்லலாம், ஷேர் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளை அரசு வாகன ஓட்டுநர்கள் உள்பட எந்த ஓட்டுநர்களும் கடைப்பிடிக்கவில்லை. இதனால், காலை, மாலை நேரங்களில் பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, கடைவீதி உள்ளிட்ட பிரதான பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பெரம்பலூரில் 400-க்கும் மேற்பட்ட 3 ப்ளஸ் 1 ஆட்டோக்கள், 40-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள், 100-க்கும் மேற்பட்ட டாடா மேஜிக் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் நகரைச் சுற்றியே இயக்கப்படுகிறது.

இவற்றை ஓட்டும் ஒரு சில இளைஞர்கள், சாலை விதிகளை பின்பற்றுவதில்லை. குறிப்பாக புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் இயங்கும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை அவர்களின் விருப்பம் போல ஏற்றி இறக்குகின்றனர்.

ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும், மதரஸா சாலையில் இருந்து காந்தி சிலை வரை தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திக் கொண்டு பயணிகளுக்காக காத்திருக்கின்றனர்.

இதனால், அந்தப் பகுதியில் எந்தவித வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை முறைப்படுத்தும் போக்குவரத்து காவலர்களும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

எனவே, நெரிசலைக் கட்டுப்படுத்த பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, கனரா வங்கி மற்றும் சங்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை நியமித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகரமக்களின் எதிர்பார்ப்பாகும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-