அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் : ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தின் முன்னோட்டமாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்ட ரேசன் கடைகள் ஆன்லைனில் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் ரேசன் கடைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டது. பொது விநியோகத்திட்ட செயல்பாடுகளை எளிமைப்படுத்தும் விதமாக ரேசன் கடைகளை கணினி மயமாக்கும் பணி சென்னை மாநகர், திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவில் என மொத்தம் 40 ரேசன் கடைகளில் இம்முறை ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் இத்திட்டத்தை 2015ம் நவம்பர் 1ம் தேதி முதல் தமிழக அரசு செயல்படுத்தியது.

இதனையொட்டி பெரம்பலூர் மாவட்ட ரேசன்கடை ஊழியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன் மைச் செயலாளர் மற்றும் ஆணையர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அக்டோபர் மாத இறுதியில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரேசன் கடைகளின் செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு பொது விநியோகத் திட்டப் பொருட்களின் வரத்து, விற்பனை, கையிருப்பு விவரங்கள் இணையதளத்துடன் இணைக்கப்பட்டது. இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 201 முழுநேர ரேசன்கடைகள், 81 பகுதிநேர ரேசன் கடைகள், 2 மண்ணெண்ணை வழங்கும் நிலையம் என மொத்தம் 284 கடைகளின் பணிகளை ஆன்லைனில் இணைக்கும் டிவைஸ் என்ற கருவி, சாப்ட் வேர் வழங்கப்பட்டது.

இதை பயன்படுத்தும் முறை குறித்தும் ரேசன் கடை விற்ப னையாளர்களுக்கும் செயல்முறை விளக்கம் தரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் தங்கள்பகுதி ரேசன்கடைகளில் உள்ள பொருட்களின்வரத்து, இருப்பு, விற்ப னை விபரம் அனைத்தையும் வெளியூர்களில் இருந்தபடியும் தெரிந்து கொள்ளலாம்.
இத்திட்டத்தால் ரேசன்கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடைகுறைவு, இருப்பு குறைவு, விற்பனையில்லை என்ற குறைபாடுகள் முற்றிலும் களையப்படும். பொதுமக்கள் ரேசன் கடையில் பொருட்களை வாங்கினால் உடனடியாக சம்மந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல் சென்றுவிடும். இதனால் போலி நபர்கள் மற்றவர்களின் ரேஷன்கார்டைப் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இதற்கான முன்கூட்டியே செல்போன் எண்கள் பெறப்பட்டு ஆன்லைனோடு இணைக்கும் கருவியில் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து அருகிலுள்ள அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேசன் கடைகளின் பொது விநியோகத் திட்டப் பணிகளும் ஆன்லைனோடு இணைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சிலஆண்டுகளாக புதிய ரேசன்கார்டுகளை வழங்காமல், அதில் உள்தாள் இணைத்து ரேசன் பொருட்களை வழங்கிவந்த பொது விநியோகத் திட்டத்துறை தற்போது பரீட்சார்த்தமாக ரேசன்கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் ரேசன்கார்டுகளை ஆன்லைனில் இணைக்கும் கருவியில் தற்போது ஆதார்எண்களை இணைக்கும்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்று முன்தினம் சனிக்கிழமை பெரம்பலூர் மாவட்ட ரேசன் கடைகளுக்கு வருவோரிடம் பொது விநியோகத்திட்ட பொருட்கள் வழங்காமல் ரேசன்கடைவிற் பனையாளர்கள் ஆதார்எண்களை இணைக்கும் பணிகளை மட்டுமே மேற்கொள்ள துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 1,70,556 குடும்ப அட்டைகளோடு ஆதார்எண்கள் இணைக்கப்பட வேண்டும். இதேபோல் பெரம் பலூர், அரியலூர், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களிலும் இப்பணிகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன. இதனால் தமிழக அளவில் மீண்டும் பரீட்சார்த்தமாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கும்பணிகளை தொடங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவதி மட்டும் தீர்ந்தபாடில்லை

இவ்வாறு அதிநவீன வசதிகள்வந்த போதும் ரேசன்கடை ஊழியர்களுக்கான திண்டாட்டங்கள் மட்டும் தீர்ந்தபாடில்லை. குறிப்பாக ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவற்றில் மூட்டைக்கு 3 கிலோ எடை குறைந்திருப்பதால் அவற்றை நுகர்வோருக்கு வழங்கும்போது விற்பனையாளர்கள்தான் விழி பிதுங்குகின்றனர். இதற்குத் தீர்வாக தனியார் சூப்பர் மார்க்கெட்களில் எடைபோட்டு, பாக்கெட்களில் சர்க்கரை, பருப்பு விற்கப்படுவதுபோல் வழங்கினால் அவற்றை எடைகுறைபாடின்றி நுகர்வோருக்கு வழங்க முடியும். இதனால் பொது விநியோகத்திட்ட பொருட்களை பேக்கிங் முறைகளில் வழங்க வேண்டுமென விற்பனையாளர் தரப்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-