அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மனிதனை அழகாக காட்டுவதில் தலைமுடிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி கொட்டி வழுக்கை தலையுடன் வலம் வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையவர்களை குறி வைக்கும் சில அழகு நிலையங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து வழுக்கை தலைக்கு சொந்தகாரர்களை கவருகின்றன. இதனால் ஏமாந்தவர்கள் பலர். அதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்ந்த வேலூர் மாவட்டம், ஆரணியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், முடி வளர ஆசைப்பட்டு உயிரையே விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த சந்தோஷ்குமார், பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு தலையில் வழுக்கை விழ, எல்லோரைப் போல அவரும் மனம் வருந்தினார். அப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அழகு நிலையத்தின் விளம்பரத்தை அவர் பார்த்துள்ளார். அங்கு சென்று தன்னுடைய வருத்தத்தை சொல்ல.. ‘இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு தலையில் முடியை நட்டி பழைய சந்தோஷ்குமாராக மாற்றி விடுகிறோம்’ என்று அங்குள்ளவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதன்படி கடந்த மே மாதம் சந்தோஷ்குமார் அங்கு சென்றார்.

முடி நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தலையில் ஊசி மூலம் முடிகளை நடும் போது வலியை பொறுத்துக் கொள்ள டாக்டர் ஹரிபிரசாத், சந்தோஷ்குமாருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். காலையிலிருந்து மாலை வரை முடி நடும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை டாக்டர் வினித் செய்துள்ளார். அப்போது, சந்தோஷ்குமாருக்கு தலைசுற்றல், மயக்கம் வந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர்கள் சந்தோஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். இதன்பிறகு நிலைமை மோசமானதும் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் சந்தோஷ்குமார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து சந்தோஷ்குமாரின் பெற்றோர், மகனுக்கு இறுதி சடங்கு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ்குமாரின் குடும்பம் தரப்பில் யாரும் போலீசுக்கு புகார் கொடுக்கவில்லை. இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனையும் செய்யப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவத்துறை சார்பில் மருத்துவ கவுன்சிலுக்கு புகார் செய்யப்பட்டது. உடனடியாக களமிறங்கியது மருத்துவ கவுன்சில். இதுகுறித்து தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார். சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டாக்டர் செந்திலிடம் கேட்ட போது, “மயக்க மருந்து கொடுத்து விட்டு கடைசி வரை நோயாளியின் அருகில் இருக்காமல் சென்ற மயக்கவியல் டாக்டருக்கும், அறுவை சிகிச்சை தகுதி பெறும் முன்பே சிகிச்சை அளித்தது எப்படி? என்பது பற்றி டாக்டர் வினித்திடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பியூட்டி பார்லர் மற்றும் சலூன், முடிவெட்டவும், அழகு கலைக்காகவும் அனுமதி பெற்றுள்ளது. முடி நடும் சிகிச்சைக்கு அனுமதி பெறவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த பியூட்டி பார்லருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

மருத்துவத்துறை வட்டாரங்கள் கூறுகையில், “பண சம்பாதிக்கும் ஆசையில் மக்களின் உயிரோடு விளையாடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அழகு நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் முறைகேடாக நடக்கின்றன. முடி நடுவதற்காக 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதை நம்பி பலர் ஏமாந்து செல்கிறார்கள். 40 வயதை கடந்த பெண்கள் முகத்தில் விழும் சுருக்கத்தை பார்த்து துடித்து போகிறார்கள். அதை போக்குவதற்காக ‘போட்டாக்ஸ்’ என்ற ஊசியை போட்டுக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சரியான மருத்துவ உபகரணங்கள், டாக்டர்கள் வசதி இல்லாமல் இந்த மாதிரி சிகிச்சை அளிப்பது குற்றமாகும். உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் விழிப்பு உணர்வாக இருக்க வேண்டும். அழகுக்கு ஆசைப்பட்டு உயிரை இழப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற அழகு நிலையங்கள் குறித்து மருத்துவ கவுன்சிலிடம் புகார் கொடுக்கலாம்” என்றனர்.

எஸ்.மகேஷ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-