அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருவாடானை:அரசு துவக்கப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களிடம் கெஞ்சவேண்டிய பரிதாப நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. கிராமங்களில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்க மாணவர்களே உள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில் 81 துவக்கப்பள்ளிகள், 19 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 289 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாணவர்கள் இல்லாததால் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும்
பல துவக்கப்பள்ளிகள் இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு அனிக்கி, கீழக்கோட்டை, கிளியூர், அறிவித்தி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகள் இழுத்து மூடப்பட்டது. அதே போன்று இந்த ஆண்டும் மூடுவிழாவை எதிர்நோக்கி பல துவக்கப் பள்ளிகள் உள்ளன.
நாச்சியேந்தல் அரசு துவக்கபள்ளியில் கடந்த ஆண்டு 4 மாணவர்கள் மட்டுமே படித்தனர். இவர்களுக்கு தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இந்த ஆண்டு ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளார். இவருக்கு இரண்டு ஆசிரியர்கள் போட்டி போட்டு பாடம் நடத்தவேண்டிய நிலை உள்ளது. மூடுவிழாவை எதிர்நோக்கி உள்ள இந்த பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்காக பெற்றோர்களிடம் கெஞ்சவேண்டிய கட்டாய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இது குறித்து அந்த பள்ளியின் தலைமைஆசிரியர் கூறுகையில்,“ நாச்சியேந்தல் அரசு துவக்கப்பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே உள்ளார். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகிறோம். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெற்றோர்களை சந்தித்து பேச உள்ளோம்,” என்றார்.
உதவி கல்வி அலுவலர் வாசுகி கூறுகையில்,“ அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வேண்டிய அனைத்து சலுகைகளும் அரசு வழங்குகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக பாடம் நடத்தப்படுகிறது. அரசு துவக்கபள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க ஆசிரியர்களிடம் வலியுறுத்தபட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்
படுவார்கள். 30 மாணவர்களுக்கு இரு ஆசிரியர்கள் பணியில் இருக்கவேண்டும். ஒரு மாணவர் உள்ள பள்ளிகள் குறித்து ஆய்வு செய்யப்படும்,” என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-