அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வேப்பந்தட்டை, ஜூன்.21-
முழுமையாக கொள்முதல் செய்யாததை கண்டித்து, சாலையில் பாலை கொட்டி வேப்பந்தட்டையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
முழுமையாக கொள்முதல் இல்லை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் ஏராளமானோர் விவசாய தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் கறவை மாடுகள் வளர்த்து பால் உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்தி வருகின்றனர். தற்போது தனியார் பால் பண்ணைகளை விட ஆவின் (கூட்டுறவு) பால்பண்ணைக்கே அதிகளவில் விவசாயிகள் பாலை அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் ஆவின் நிறுவனத்தினர் உற்பத்தியாளர்களிடம் இருந்து முழுமையாக பாலை கொள்முதல் செய்யாமல் 10 சதவீத பாலை திருப்பி அனுப்புகின்றனர். அதாவது 10 லிட்டர் பால் கொண்டு வரும் விவசாயிகளிடம் 9 லிட்டர் மட்டும் வாங்கிக்கொண்டு மீதி ஒரு லிட்டர் பாலை விவசாயிகளிடமே திருப்பி கொடுத்து விடுகின்றனர்.இது மட்டுமல்லாது சில நாட்களில் பால் உற்பத்தி அதிகமாக உள்ளது எனக்கூறி ஆவின் பால் பண்ணைகளுக்கு விடுமுறை விடுகின்றனர். கடந்த ஒரு வாரமாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆவின் பால் பண்ணைகளுக்கு சுழற்சி முறையில் விடுமுறை விட்டு வருகின்றனர்.
சாலையில் பாலை கொட்டி போராட்டம்
இதனால் 5 லிட்டர், 10 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கறந்த பாலை என்ன செய்வது என தெரியாமல் வேதனையடைந்து வருகின்றனர். பால்பண்ணைகளுக்கு விடுமுறையளிப்பதால் வேதனை அடைந்து விவசாயிகள் நேற்று வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், வெண்பாவூர், அன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தாங்கள் கொண்டு வந்த பாலை சாலையில் ஊற்றி போராட்டம் நடத்தினர். இது குறித்து விவசாயிகள் வேதனையுடன் கூறியதாவது:- விவசாயிகள் கஷ்டத்தை உணர்ந்து பால் பண்ணைகளுக்கு விடுமுறை விடாமலும், பாலை திருப்பி அனுப்பாமலும் விவசாயிகள் கொண்டு வரும் பால் முழுவதையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-