அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வேப்பந்தட்டை, ஜூன்.20-

வேப்பந்தட்டை அருகே உள்ள விசுவகுடி அணையில் தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார். மனைவியின் பிறந்த நாளை கொண்டாட சென்ற போது அவருக்கு இந்த பரிதாபம் நேர்ந்தது.

ஆட்டோ டிரைவர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் அய்யாதுரை மகன் பிரகாஷ் (வயது 30). ஆட்டோ டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த லெட்சுமி (29) என்ற பெண்ணை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கோபிகா (10), கோகுல் (9), என்ற 2 குழந்தைகள் உள்ளனர். பல வருடங்களாக ஈரோட்டில் வசித்து வந்த பிரகாஷ் குடும்பத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூருக்கு குடிபெயர்ந்தனர். பிரகாஷ் ஆட்டோ ஓட்டிய வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.

நீரில் மூழ்கி பலி

நேற்று பிரகாஷ் மனைவி லெட்சுமிக்கு பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளை கொண்டாட பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவகுடி அணைக்கு சென்றார். அப்போது அணையின் மதகு பகுதியில் நின்றுகொண்டிருந்த பிரகாஷ் கால் தவறி எதிர்பாராதவிதமாக நீர்ப்பிடிப்பு பகுதியினுள் விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி லெட்சுமி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அணை நீரில் நீந்தி சென்று பிரகாசை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் பிறந்த நாளை கொண்டாட சென்ற ஆட்டோ டிரைவர் அணை நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-