அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தகவல் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி பெண்களுக்கான பல தடைகளை தகர்த்துள்ளது. பணிகளை சுலபமாக்கியுள்ளது. அவர்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதுவே அவர்களுக்கு சில சமயங்களில் எமனாகவும் மாறுகின்றது. நெருங்கிய நட்பு வட்டத்தில் அந்தரங்கம் வரை பரிமாறிக் கொள்வது இயல்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட உறவில் சிக்கல் உருவாகும்போது அந்தரங்கம் வெளியாகும்போதும் அதுவே பல பெண்களின் தற்கொலைக்கு காரணமாகிறது. தகவல் தொழில் நுட்பத்தின் சேவைகளான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் எல்லையுடன் கருத்துகளை பரிமாறும் பெண்களுக்கும் இதில் பல வில்லங்கம் காத்திருக்கிறது.

கிராமப்புற பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தன் மீது எந்த கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது என சிறு வயதில் இருந்தே செல்லிச் சொல்லி வளர்க்கின்றனர். சின்ன விமர்சனத்தைக் கூட தாங்கிக் கொள்ளும் அளவுக்கு மனப்பக்குவம் இருக்காது. இந்த சூழலில் வளரும் பெண்கள் தங்களது பிரச்னைகளை பகிர்ந்து கொள்ளவும், அதை எதிர்கொண்டு தீர்வு காண்பதவற்கான ஆலோசனை வழங்கவும் போதிய ஆட்கள் இருப்பதில்லை. இது போன்ற பெண்கள் சைபர் கிரைம் மன்னர்களின் கரங்களில் மாட்டிக் கொள்ளும் போது மரணத்தை சந்திக்கும் அபாய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நட்புடன் இணையும் நபர்கள் தங்களது உரையாடலில் நெருக்கத்தை வெளிப்படுத்து கின்றனர். பின்னர் பெண்களின் அழகை வர்ணிப்பதுடன் அவர்களது பிரச்னைகளைக் கேட்டறிந்து அதற்கு ஆறுதல் சொல்வது போலவும் தொடர்கின்றனர்.

இந்த தொடர்பு மூலம் பெண்கள் தாங்களாக எடுத்து அனுப்பும் செல்பிகள் அவர்களுக்கு வில்லனாக மாறுகிறது. இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் உள்ள புதுவித ஆப்புகளைப் பயன்படுத்தி ஆபாச புகைப்படங்களுடன் இணைத்து பெண்களை தங்களது வழிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர். இதற்கு ஒத்துக்கொள்ளாத பெண்ணின் மார்பிங் புகைப்படத்தை பரவவிட்டு அவர்களை பழி வாங்குகின்றனர்.
இந்த சவாலை எதிர்கொள்வது குறித்து உளவியல் நிபுணர்கள் கூறியதாவது: பெண் தான் செய்யாத ஒரு குற்றத்துக்காக தனது மனதளவில் நொருங்கிப் போக தேவையில்லை. பிரச்னையை எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் சம்பந்தப்பட்ட குற்றச் செயல் பற்றிய புகாரை பதிவு செய்ய வேண்டும். அந்த மார்பிங் வீடியோவோ அல்லது புகைப்படமோ மார்பிங் முறையில் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

மேலும் இணையவழி பரிமாற்றங்களை மீண்டும் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் குற்றவாளிகள் எவ்வளவு அறிவுப்பூர்வமாக தவறு செய்திருப்பினும் அதில் மாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே இதுபோன்ற தவறுகளை நிரூபிக்க முடியும். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிகளை பயன்படுத்தும் ஹைடெக் பெண்கள் அதில் உள்ள இமாலய பிரச்னைகளையும் முன்கூட்டியே தெரிந்து வைத்து தன்னை பாதுகாத்துக் ெகாள்வது மிகவும் அவசியம். ேமலும் பிரச்னைகள் வந்தால் எப்படியெல்லாம் எதிர்கொள்வது என்ற விழிப்புணர்வை அவர்கள் தொடர்புடைய பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்களிலும் ஏற்படுத்தித் தர வேண்டும். இது போன்ற விஷயங்களை உணர்வுப் பூர்வமாக எதிர்கொள்வதைத் தவிர்க்கவும்.

பொய்யான ஒரு விஷயத்தை பொய் என்று நிரூபித்து விட்டால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட முடியும். மிரட்டல் மற்றும் தொல்லைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து தீர்வு பெறலாம். தற்கொலை என்பது எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது. பெண்களுக்கு இந்த எண்ணத்தை சிறுவயதில் இருந்தே உணர்த்தி வளர்க்க வேண்டும். இவ்வாறு உளவியல் நிபுணர்கள் கூறினர்.

இணைய வசதியில் பாதுகாப்பு அவசியம்
கர்லின்மேரி (சமூக சேவகர்): பெண் குழந்தைகளை பெற்றோர் நம்ப வேண்டும். குழந்தைப் பருவத்தில் இருந்து தன்னம்பிக்கை மிக்கவர்களாக வளர்ப்பது அவசியம். இணையத்தை எவ்வளவு சுலபமாக கையாள்கிறோமோ அந்தளவு பாதுகாப்பையும் கற்றுத்தர வேண்டும். பெண்கள் பல வேலைகளை இணையத்தின் மூலம் சுலபமாக செய்ய முடிகிறது. புகைப்படத்தை போடாமல் மறைத்து வைக்கச்சொல்வது பெண்களின் உரிமைக்கு எதிரானது. பெண்ணுக்கு போதிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பிரச்னை ஏற்படும் போது அதை பகிர்ந்து கொள்வதற்கான சூழல் ேதவை. அதற்கான வாய்ப்புகளை பெற்றோர் பெண்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஆமை வேகத்தில் சைபர் கிரைம்
ஷீலாவின்சென்ட் (பிடிஐ தொண்டு நிறுவன பொறுப்பாளர்): தகவல் தொழில்நுட்ப வேகத்தின் அளவுக்கு நம் ஊரில் சைபர் கிரைமை கண்டுபிடித்து தண்டனை அளிப்பதற்கான செயல்பாடுகள் இல்லை. இது போன்ற குற்றங்களை சந்திக்கும் போது பெண்கள் யாரை அணுக வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் வெளிப்படையாக இல்லை. சைபர் கிரைமில் புகார் ெதரிவித்தாலும் சம்பந்தப்பட்ட நபரை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பது ஆமை வேகத்தில் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு தீர்வு காணத் தெரியாமல் தற்கொலையை நாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ேவகப்படுத்தப்பட வேண்டும். இது குறித்து பெண்கள் மத்தியில் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

விழிப்புணர்வும் தண்டனையும் குற்றங்களை தடுக்க வழிவகுக்கும்
ஜோதிலட்சுமி (அனைத்திந்திய மாதர் சங்கம்): சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து யாரிடம் புகார் சொல்வது என்ற விழிப்புணர்வு பெண்களிடம் இல்லை. பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களிலும் இது குறித்து பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புகார் வந்தாலும் காவல்துறை இந்த விஷயத்தில் எப்போதும் மெத்தனமாக உள்ளது. பெண்கள் புகார் அளித்தால் உடனடியாக விசாரித்து குற்றவாளியை கண்டறிந்து தண்டனை விரைவுபடுத்தப்பட வேண்டும். சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் நவீனப்படுத்தப்படுவது அவசியம். விழிப்புணர்வும், தண்டனையும் இந்த பிரச்னையை பெண்கள் எளிதில் எதிர்கொள்ள வழிவகுக்கும்.

பெண்களை குற்றவாளிபோல் பார்க்ககூடாது
மீனாசேது (கோல்டன் கேட்ஸ் பள்ளித் தாளாளர்): இன்றைய சூழலில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்களின் புகைப்படங்கள் பரவலாக கிடைக்கிறது. அந்த போட்டோக்களை பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். பெண்கள் புகைப்படத்தை பயன்படுத்தவே கூடாது என்று சொல்ல முடியாது. மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது சம்பந்தப்பட்ட பெண்கள் அதை பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. வீட்டிலும், சமூகத்திலும் அந்தப் பெண்ணை குற்றவாளிபோல பார்ப்பதை நிறுத்தி அனைவரும் இணைந்து இது போன்ற தவறுகளில் ஈடுபடும் நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் தீவிரம் காட்ட வேண்டும்.-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-