அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கேள்வி: கண் திருஷ்டியின் உண்மை நிலை என்ன? பொறாமைக்காரர்கள் பொறாமைக் கொள்ளும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்) (அத்: 114 வச: 5) என்ற இறை வசனத்தின் கருத்து என்ன?

‘கப்றுகளிலுள்ள மூன்றில் ஒரு பகுதி கண்திருஷ்டியிலுள்ளதாகும்’ என்று பொருள் தொனிக்கும் ஹதீஸ் ஸஹீஹானதா?

ஒருவர் பொறாமைக்கொள்கிறார் என சந்தேகம் வரும்போது ஒரு முஸ்லீம் (தன்னைக் காத்துக்கொள்ளும் பொருட்டு செய்ய வேண்டியது என்ன?

கண்திருஷ்டியிட்டவரின் உடலைக் கழுவப்பட்ட நீரைக் மொண்டு பாதிக்கப்பட்டவரின் உடலில் கொட்டிவிடுவதால் நிவாரணம் கிடைத்துவிடுமா? அந்த நீரை பீடிக்கப்பட்டவரின் உடலில் ஊற்றுவதா? அல்லது அவருக்குப் பருகக் கொடுக்க வேண்டுமா?

பதில்: ஃபத்வா சுருக்கம்

பிறர் கண்பட்டதினால் ஏற்படும் விளைவுக்கு ‘கண் திருஷ்டி’ எனக் கூறப்படும். அதாவது ஒரு பொருளை ஆச்சர்யப்பட்டுப் பார்க்கும்போது அப் பார்வையின் தீய விஷ சக்தி பார்க்கப்படும் பொருள் மீது பாய்ந்து அதனால் ஏற்படும் விபரீதத்திற்குத் தான் ‘கண்ணேறு’ அல்லது ‘கண்திருஷ்டி’ என பொருள் கொள்ளப்படும்.

கேள்வியில் குறிப்பிட்டுள்ள இறைவசனத்தில் ‘பொறாமைக்காரன் பொறாமைக் கொள்ளும்போது விளைந்திடும் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடிக்கொள்ளும்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் ஏவியுள்ளான்.

‘கண்திருஷ்டியிடுபவர்கள் எல்லோருமே பொறாமைக்காரர்கள்தான். ஆனால் பொறாமைக்காரர்கள் அனைவரும் கண்திருஷ்டியிடுபவர்கள் அல்ல’ என்ற பொது நியதியின் அடிப்படையில்தான் கண்ணேறிடுதல் என்ற தீய குணத்தின் பொருளையும் பொறிந்துள்ள பொறாமைக் குணமுடையோரை விட்டும் பாதுகாப்பு தேடிட இறைவன் பணிக்கின்றான்.

ஒருவனது பார்வையிலிருந்து வெளியிடும் திருஷ்டி என்ற விஷம் தோய்ந்த அம்பு, சிலநேரம் எய்தவனையே தாக்கிடவும், சிலவேளை குறி தவறிடவும்; வாய்ப்புண்டு. அதாவது பாதுகாப்புக்கவசம் இல்லாதபோது தாக்கி விடுவதும், தற்காப்புடனிருக்கும் போது தாக்கிட எவ்வித முகாந்திரமுமின்றி எறிந்தவனையே திரும்பித் தாக்கிடும் குணமுடையதாகும்.

‘கண்திருஷ்டி படாமலிருக்க பாதுகாப்பு வசனங்களை ஓதிக் கொள்ளும்படி ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை ஏவிக்கொண்டிருந்தார்கள்’ என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸும், ‘கண்ணேரு உண்மையானது, விதியை ஏதாவது போட்டியிடுவதாகக் கொண்டால், கண்திருஷ்டி அதனை முந்திவிடும். (உங்களால் பிறருக்கு திருஷ்டி ஏற்பட்டு அதனை நீக்கும் பொருட்டு) உங்கள் உடலைக் கழுவிக்கொள்ள வேண்டப்பட்டால் கழுவிக் கொள்ளுங்கள்’ என்ற இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸும் முறையே புகாரி, முஸ்லிம், திர்மிதீ மற்றும் முஸ்னத் அஹமது போன்ற ஸஹீஸான நூல்களில் ரிவாயத்து செய்யப்பட்டு, ‘கண்திருஷ்டி உண்மை’ என ஊர்ஜிதமாக்கப்பட்டுள்ளது.

‘உண்மையில் மகள் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ‘நபியே! ஜாபிரின் பிள்ளைகளுக்கு திருஷ்டி பட்டுள்ளது. அவர்களுக்காக (பாதுகாப்பு வசனங்களை ஓதி) மந்திரிக்கலாமா?’ என்று வினவ, ‘ஆம்! விதியை ஏதாவது பொருள் பேட்டியிடுமாயின், கண்திருஷ்டி அதனை முந்திவிடும்’ என்ற ஹதீஸை இமாம் இஹமதிப்னு ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி, திர்மிதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோர் ரிவாயத்து செய்துள்ளனர்.

‘திருஷ்டியிடப்பட்டவரை உளூ செய்யக்கூறி அந்நீரைக்கொண்டு பாதிக்கப்பட்டவரைக் கழுவ வேண்டும்’ என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்ததாக அபூதாவூது ரஹ்மதுல்லாஹி அலைஹிஅவர்கள் ரிவாயத்து செய்கிறார்கள்.

‘ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளயே செல்லும்போது ஸஹல்பின் ஹனீஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மக்காவை நோக்கி உடன் நடந்து வந்தார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குளித்தார்கள். மிக அழகிய உடல்கட்டும், வெண்மை நிறமுடைய ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடல் வனப்பைக் கண்ட பனீ ஆத்தி குழுவைச் சேர்ந்த ஆமிர் பின் ரபிஆ ரளியல்லாஹு அன்ஹு, ‘இன்றுபோல் என்றும் முடிப் பொதிந்த கட்டான தேகத்தைக் கண்டதில்லை’ என்று கூறியதுதான் தாமதம், ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்படியே மயக்கமுற்று விட்டார்கள்.

இவ்விஷயம் உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ‘நபியே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸஹல் (ரளியல்லாஹு அன்ஹு) தலை தூக்க முடியாமல் அவதியுறுகிறார். அவர் விஷயத்தில் ஏதேனும் உபாயம் உண்டா?’ என (அங்குள்ளவர்கள்) கேட்டார்கள்.

‘இது சம்மந்தமாக யாரையேனும் நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவ ‘ஆம்! ஆமிர் பின் ரபிஆ தான் அவரைப் பார்த்தார்’ எனக் கூறப்பட்டதும், ‘உங்களின் சகோதரரை யாரேனும் எதற்காக கொல்ல வேண்டும்? உங்களை ஆச்சரியத்தில் அழ்த்திடவல்ல ஏதாவதொன்றை காண நேர்ந்தால் ‘பாரகல்லாஹ்’ என மொழிந்தால் போதாதா?’ என ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி சற்று கோபமாகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

பின் ஆமிர் பின் ராபிஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை, ‘ஸஹ்னுக்காக குளித்திடவும்’ என கட்டளையிட்டு, (அதன்பின்) ஆமிர் பின் ராபிஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் முகம், இரு கைகள், இரு முழங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் ஓரங்கள் ஆகிய உறுப்புக்களையும் அவர்களது ஆடையின் உள்ளேயும் கழுவப்பட்ட நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, அந்த நீரை ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்புறத்திலிருந்து ஒருவர் தலையிலும், முதுகிலும் கொட்டி (தண்ணீர் பிடித்த) அப்பாத்திரத்தையம் தலைகீழாகக் கவிழ்த்துப் போடச் செய்தார்கள்.

இப்படிச் செய்ததும் ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எவ்வித தீங்குமின்றி, தன் பயணத்தை மற்றவர்களுடன் தொடர்ந்தார்கள்’ என்ற நிகழ்ச்சியை இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் அஹமதிப்னு ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் நஸாயி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இப்னு ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹிஆகியோர் ரிவாயத்துச் செய்கின்றனர்.

அறிஞர்கள் பலரும் திருஷ்டி படுவது உண்மையென்பதை மேற்கண்ட, மற்றும் பல ஹதீஸ்கள் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர். தவிர, இது அன்றாடம் நடக்கும், நாம் பார்க்கும் நிகழ்ச்சியாகவும் உள்ளது.

கேள்வியில் குறிப்பிட்டிருந்த, ‘கப்றுகளிலுள்ள மூன்றிலொன்று கண்திருஷ்டியினால் உள்ளதாகும்’ எனப் பொருள் தொணிக்கும் ஹதீஸின் ஸஹீஹான நிலைபற்றி நாம் அறியோம். எனினும், ‘எனது உம்மத்திலுள்ளவர்களில் மரணிக்கும் பலர், களா – கத்று (எனும் இயற்கைத் தீர்ப்பு, விதி)க்குப் பின் திருஷ்டியினாலேயே ஆவர்’ என்ற இந்த ஹதீஸை ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக இமாம் பஜ்ஜார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ரிவாயத்து செய்துள்ளதை ‘நய்னுல் அவ்தார்’ என்ற நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

‘அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை, அவனிடம் முழமையாக தஞ்சம் புகுதல் ஆகியவற்றுடன், திருக்குர்ஆனின் 112, 113, 114 அத்தியாயங்களான ஸுரத் இக்லாஸ், அல்ஃபலக், அந்நாஸ், ஸுரத் அல்ஃபாத்திஹா, ஆயத்துல் குர்ஸிய்யி போன்றவற்றை அதிகமதிகம் ஓதிவருதல்,

மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிவந்த தற்காப்பு துஆக்களான, ‘அவூது பி கலிமாதில்லாஹித் தாம்மாத் மின் ஷர்ரி மா கலக்’ (பொருள்: இறைவன் படைத்தவற்றிலிருந்து ஏற்படும் தீங்கை விட்டும் பூரண கலிமாக்களால் பாதுகாவல் தேடுகிறேன்)

‘அவூது பி கலிமாதில்லாஹித் தாம்மா, மின் களபிஹி, வ இகாபிஹி, வமின்ஹம ஷர்ரி இபாதிஹி, வமின்ஹம ஜாதிஷ் ஷைதானி வஅன் யஹ்ளுரூன்’ (பொருள்: அல்லாஹ்வின் கோபம், தண்டனை, அவனது அடியார்களின் தீங்கு ஆகியவற்றை விட்டும், மேலும் துன்மார்க்கனின் ஊசலாட்டங்கள், இன்னும் அவை என்னை நெருங்காமலிருக்கவும், இறைவனின் பூரண கலிமாக்களைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.) என்ற துஆக்களையும்,

மேலும் ‘ஹஸ்பியல்லாஹு லாஇலாஹ இல்லாஹுவ, அலைஹி தவக்கல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்’ (பொருள்: எனக்கு இறைவனே போதும். அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவனின் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவன்தான் வலுவான அர்ஷின் அதிபதி) என்ற இறை வசனத்தையும் அதிகமதிகம் ஓதி வருவதைக் கொண்டு, மனு, ஜின், ஷைத்தான் போன்றோர்களது தீங்கை விட்டும் தற்காத்துக் கொள்வதற்காக தன்னை அரணிட்டுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லீமுக்கும் ஏற்புடையதாகும்.

நீடூர்.இன்ஃபோ

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-