அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு தெரிவித்தது. அதே சமயத்தில், கூடுதலாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வாங்க ரூ.9 ஆயிரத்து 284 கோடி செலவாகும் என்றும் கூறியுள்ளது.


புதுடெல்லி :

பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு தெரிவித்தது. அதே சமயத்தில், கூடுதலாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வாங்க ரூ.9 ஆயிரத்து 284 கோடி செலவாகும் என்றும் கூறியுள்ளது.

நாட்டின் முதல் நான்கு பொது தேர்தல்களின்போது, பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர், 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் சில மாநில சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால், இந்த நடைமுறை மாறி, தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டியதாகி விட்டது.

இந்நிலையில், ‘பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள்’ பற்றி ஆராய பாராளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு, ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய சட்ட அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடத்தும் போக்கு மறைந்து செலவு குறையும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நலத்திட்ட பணிகள் முடங்குவது தவிர்க்கப்படும் என்றும், மத்திய படைகளின் பணிச்சுமை குறையும் என்றும் அறிக்கையில் நிலைக்குழு தெரிவித்தது.

பாராளுமன்ற நிலைக்குழுவின் யோசனை குறித்து தேர்தல் கமிஷனிடம் மத்திய சட்ட அமைச்சகம் கருத்து கேட்டது. அதற்கு தேர்தல் கமிஷன் முதல்முறையாக தனது அதிகாரபூர்வ கருத்தை கடிதம் மூலம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

கடிதத்தில், பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்தபோதிலும், அதில் உள்ள சிக்கல்களையும் எடுத்து கூறியுள்ளது.

கடிதத்தில், தேர்தல் கமிஷன் கூறி இருப்பதாவது:-

பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் சரி செய்யக்கூடியவைதான். இதற்கு அரசியல் கட்சிகளிடம் கருத்து ஒற்றுமை இருந்தால், தேர்தல் கமிஷனும் இந்த யோசனையை ஆதரிக்கும் என்பதை சொல்ல தேவையில்லை.

அதே சமயத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, கூடுதலாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும், யாருக்கு ஓட்டு பதிவானது என்பதை காட்டும் எந்திரங்களும் வாங்குவதற்கு ரூ.9 ஆயிரத்து 284 கோடியே 15 லட்சம் செலவாகும். அந்த எந்திரங்களை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டி இருக்கும் என்பதால், அதற்கும் தனியாக செலவு பிடிக்கும். எந்திரங்களை பாதுகாத்து வைப்பதற்கும் செலவு ஏற்படும்.

மத்திய துணை ராணுவப்படையினர் அதிக அளவில் தேவைப்படுவார்கள்.

மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக, சில சட்டசபைகளின் பதவிக்காலத்தை முன்கூட்டியே முடிக்கவோ அல்லது பதவிக்காலத்தை நீட்டிக்கவோ செய்ய வேண்டி இருக்கும். அதற்கு அரசியல் சட்டத்தை திருத்த வேண்டி இருக்கும்.

இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

தேர்தல் கமிஷனின் கருத்து பற்றி ஆய்வு செய்ய மந்திரிகள் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு, கூடுதலாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை கொள்முதல் செய்வது உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யும்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, பாராளுமன்றம், சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறி இருந்தார்.

மேலும், கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-