அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமத்தில் வசித்து வரும் 120 நரிக்குறவர்களுக்கு அரசுக்குச் சொந்தமான தரிசு நிலத்தை விவசாயம் செய்ய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலத்தைச் சீரமைத்த நரிக்குறவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்தனர். இந்நிலையில், அப்பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டதற்கு நரிக்குறவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், சம்மந்தப்பட்ட நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள நறிக்குறவர்கள் முயற்சித்தபோது, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அரசு சார்பில் வழங்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதிப்பதோடு, பட்டா வழங்க வேண்டுமென கடந்த 13 ஆம் தேதி நரிக்குறவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், அந்த நிலத்தில் இருந்த பல்வேறு வகையான மரங்கள் மற்றும் முள் புதர்களை நறிக்குறவர்கள் புதன்கிழமை அகற்றி லாரியில் ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த வேப்பந்தட்டை வட்டாட்சியர் மனோன்மணி, துணை கண்காணிப்பாளர் ஜவஹர்லால் மற்றும் மங்களமேடு போலீஸார் அங்கு சென்று மரம், லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மரம் மற்றும் லாரியை பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் கொண்டு சென்றனர்.

இதையறிந்த நரிக்குறவர்கள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் கோட்டாட்சியர் ரா. பேபி, பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே, புறம்போக்கு நிலத்தில் மரங்களை வெட்டியதாக நரிக்குறவர்கள் மீது மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-