அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...குத்துச்சண்டை போட்டியில் விளையாடும் இளம்பெண் ஒருவரை, அவருக்கு பயிற்சியாளராக வருபவர், படுக்கைக்கு அழைக்கும் காட்சி சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். நிழலில் மட்டுமல்ல, நிஜத்திலும் நம் இந்தியாவின் பெரும்பாலான விளையாட்டு வீராங்கனைகள் சந்திக்கும் பிரச்னைகளும் வலிகளும் மிக அதிகம். இதையே மிக தத்ரூபமாக பதிவுசெய்திருப்பார்கள் அந்த திரைப்படத்தில்!

இந்திய மகளிர் கால்பந்து அணியின் தலைவியாக இருந்த சோனா சவுத்ரி, தனது ஓய்வுக்குப்பிறகு, சுயசரிதை எழுதினார். ‘கேம் இன் கேம்’ எனும் தலைப்பிலான அந்தப் புத்தகத்தில், இந்தியக் கால்பந்து அணியில் பெண்களுக்கு எதிராக நிலவும், பல்வேறு பாலியல் தொந்தரவுகளை அம்பலப்படுத்தியுள்ளார். “இந்திய கால்பந்து அணியின் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். சகலவிதத்திலும் அவர்களை ‘அட்ஜஸ்ட்’ செய்தால்தான் விளையாட்டுக்குத் தேர்வு செய்வோம் என்று மிரட்டுவார்கள். அதேபோல் வெளியிடங்களுக்கு விளையாடச் சென்றால், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளின் அறைகளில்தான் தங்கியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள்’’ என்று பரபரப்பு குற்றச்சாட்டை அந்த புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


இந்திய அளவில் மட்டுமல்ல, மாவட்ட அளவில் விளையாடும் வீராங்கனைகளுக்கும் இதே நிலைமைதான். விளையாட்டுத் துறையில் இந்திய பெண்கள் நுழைவது 1970-களுக்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியது. தடகளத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்த காலங்களில், நகர்ப்புற பெண்களிடையே விளையாட்டு ஆர்வம் அதிகரித்தது. அதன் விளைவாக பெண்களுக்கு என்று தனி பயிற்சி மையங்களும், பயிற்சியாளர்களும் உருவானார்கள். தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்னைகளும் தலைதூக்க ஆரம்பித்தன. சாதிக்கத் துடித்தப் பெண்களை, போகப் பொருளாக பார்க்கத் துவங்கிய நிலையும், அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிட்டன.

இன்றைக்கும் விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவுகள் சத்தம் இல்லாமல் தொடர்ந்து வருகின்றன. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமே நிலவி வந்த பாலியல் சீண்டல்கள், இப்போது இரண்டாம் நிலை நகரங்களிலும் பரவி, அதிரவைக்கிறது.

தமிழகத்தின் வட மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சிறு வயது முதல் ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் உடையவர். பள்ளிக் காலத்தில் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர், அதன்பிறகு விளையாட்டு இடஒதுக்கீட்டின் மூலம் சென்னையின் புகழ்பெற்ற கல்லூரியில் இணைந்தார். கல்லூரியில் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் தீவிரம் காட்டியவர், தென்னிந்திய விளையாட்டு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றார்.

தொடர்ந்து, 'தனது அடுத்த இலக்கு இந்திய அளவிலான போட்டியில் வெற்றி பெறுவது' என முடிவு செய்தவர், பயிற்சியின் தீவிரத்தை அதிகரித்தார். அதற்காக தடகளத்தில் புகழ்பெற்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெறச் சென்றார். அவரிடம் இவரைப்போலவே வேறு இரண்டு பெண்களும் பயிற்சிப் பெற்று வந்தனர்.

ஒரு நாள் இரவு பயிற்சியாளரிடம் இருந்து இந்தப் பெண்ணுக்கு போன். “நான் இப்போது காரை எடுத்துக்கொண்டு உன் ஹாஸ்டலுக்கு வருகிறேன். நீ என்னுடன் என் வீட்டுக்கு வரவேண்டும்’’ என்றார் பயற்சியாளர். அதிர்ந்துபோன வீராங்கனை, “ இந்த நேரத்தில் எதற்காக...?’’ என்று தயங்கித் தயங்கி கேட்க, “நீ என் காரில் ஏறினால்தான், உன்னை ஆல் இந்தியா போட்டிக்கு பரிந்துரை செய்வேன்” என்று மிரட்டல் தொனியில் பதில் வந்தது பயிற்சியாளரிடம் இருந்து. முதலில் அதிர்ச்சிக்கு ஆளான அந்தப் பெண், பிறகு சுதாரித்துக் கொண்டார். துணிச்சலுடன், ‘‘அப்படியொன்றும் ஆல் இந்தியா போட்டிகளில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்று முகத்தில் அடித்தாற்போன்று பதில்சொல்லிவிட்டு, போனைத் துண்டித்தார் அந்நப் பெண்.

அதன்பிறகு, அவருடைய தடகள வாழ்வில் தொடர் சரிவுதான். திறமை இருந்தும் வாய்ப்பு அளிக்கப்படாமல் ஓரம்கட்டப்பட்ட அந்த வீராங்கனை, இன்று தனது அடையாளத்தைத் தொலைத்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.


இன்னொரு சம்பவம் தென்மாவட்டத்தில் நிகழ்ந்தது.

தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின், விளையாட்டுத் துறையில் பணி புரியும் பேராசிரியர் ஒருவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவற்றில், 'வெளி மாவட்டங்களுக்கு விளையாடச் செல்லும்போது வீராங்கனைகளிடம் அத்து மீறுகிறார்' என்று வந்த புகார்கள் அதிகம்.

தன்னிடம் பயின்ற விளையாட்டுத்துறை ஆய்வு மாணவி ஒருவரை, “என்னை அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே இங்கு ஆய்வு பட்டம் வாங்கமுடியும்’’ என்று மிரட்டியே தனது ஆசைக்கு இணங்கவைத்தவர், பிறகு ஒருகட்டத்தில், " உன்னை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்கிறேன்’’ என்று ஆசைவார்த்தை கூறி, அந்த மாணவியை முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே கொண்டுவந்துவிட்டாராம். அவர் தொடர்ந்து விளையாடுவதற்கும் தடை விதித்துவிட்டாராம் அந்தப் பேராசிரியர்.

இவரை மட்டுமல்ல, இன்னும் பல மாணவிகளைச் சீரழித்த அந்தப் பேராசிரியர், முன்னாள் தடகள வீரர் என்பதுடன், தமிழக தடகளச் சங்கத்திலும் முக்கிய பொறுப்பிலும் உள்ளார் என்பதுதான் கொடுமை!

இவ்வளவு ஏன், அகில இந்திய அளவில் ஹாக்கி விளையாட்டில் புகழ்பெற்ற பயிற்சியாளர் ஒருவர், தன்னிடம் பயிற்சியில் ஈடுபட்ட பெண்களிடம் அத்துமீறி நடந்து சர்சசையாகியது. மஹாராஷ்ட்ர மாநிலத்தில், வீராங்கனை ஒருவர், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற பயிற்சியாளருக்கு 'பளார்' விட்ட சம்பவமும் உண்டு.

ஆக, பெண்களை எளிதாக தங்கள் இச்சைக்கு ஆட்கொள்ளும் நிலை எல்லா துறைகளிலும் உண்டு என்றாலும், விளையாட்டுத் துறையில் மிக அதிகம்.

'எல்லா பயிற்சியாளர்களையும் குறைசொல்லிவிட முடியாது'

இந்நிலையில் வீராங்கனைகள் முன்வைக்கும் பாலியல் தொந்தரவு புகார்கள் குறித்து ஹாக்கி பயிற்சியாளர் ஒருவரிடம் கேட்டபோது “ விளையாட்டுத் துறைக்கு பெண்கள் வருவது வரவேற்கத்தக்கது. பல்வேறு சாதனைகளை இன்று பெண்கள்தான் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த பாலியல் தொந்தரவு அவர்களுக்கு தொல்லையாக இருப்பது உண்மைதான். எனினும் ஒட்டுமொத்தமாக எல்லா பயிற்சியாளர்களையும் குறைசொல்லிவிட முடியாது. வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம். இந்தியாவில் நகர்ப்புறங்களில் விளையாடும் வீராங்கனைகளுக்கு இது போன்ற தொந்தரவுகள் அதிகம்.

அதே சமயம் பயிற்சியாளர்களுடன் ஒருசில பெண்கள் கடைப்பிடிக்கும் தவறான அணுகுமுறையும் போக்கும், மற்ற அனைத்து பெண்களையும் பாதிக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் இது போன்ற சர்ச்சைகளில் சிக்கும் பயிற்சியாளரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது. கடுமையான நடவடிக்கைகள் மூலம்தான் இதனை தடுக்கமுடியும். தொந்தரவுக்கு ஆளாகும் வீராங்கனைகள் புகார் தருவதற்கு துணிந்து முன்வர வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு விடிவு ஏற்படும்“ என்றார்.


இதனிடையே ‘பாலியல் மற்றும் பல்வேறு தொல்லைகள் குறித்து புகார் கொடுத்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானாந்த சோனாவால் தெரிவித்துள்ளது சற்று ஆறுதலான விஷயம்.

- அ.சையது அபுதாஹிர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-