அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பச்சக்குழந்தை பாதம் பட்டதும்
பரிசளித்தாய் ஜம் ஜம் நீரை
பாவிகள் நாங்கள் பதறுகிறோம்
போக்கிடு எங்கள் கண்ணீரை

நாயனே யா அல்லாஹ்…
நாயனே யா அல்லாஹ்…

அந்த அழுத்தமான பாடல் பாடும் குரலோடு வரும் கொட்டு சத்தத்தை கேட்கும் போதெல்லாம்,பக்கீர் சாகிபு வந்திருக்காங்க சில்லறை எதாவது எடுத்து போடுப்பா என்று வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள்.

இன்னும் சிலரோ வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர்கள் பக்கீர் சாகிபுகளை ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பாடல்களை பாடச்சொல்லி,பத்து அல்லது இருபது ரூபாய் கொடுப்பது வழக்கம்,ஆனால் இப்போதா அவர்களிடம் ஒரு பாடலை பாடச்சொல்லி அதை மொபைலில் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் அப்டேட் செய்துகொள்கிறோம்,ஆனால் பக்கீர் சாகிபுகளின் பொருளாதாரமும் கிடைக்கும் ஐந்து அல்லது பத்துரூபாயை பெற்றுக்கொண்டு அப்படியே கடந்து விடுகிறார்கள்,ஆனால் அவர்களுக்குள் இருக்கும் இறைவன் அளித்த அந்த அற்புத கலை உணர்வுகளை அவர்களே புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவர்களின் பொருளாதாரம் அவர்களை ஆட்படுத்தியிருக்கிறது.

பெரும்பாலும் நாடோடிகளாகவே இவர்களின் வாழ்க்கை இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.பொட்டல் புதூர்,நாகூர்,ஏர்வாடி என தர்ஹாக்களில் இவர்கள் வசித்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதாரத்திற்காக இடம்பெற வேண்டியிருக்கிறது அவர்களின் வாழ்க்கை.

நபிமார்களின் வரலாறு,சகாபாக்களின் வரலாறு,கலிஃபாக்கள் என அனைவரை பற்றியும் சொந்தமாக ராகம் அமைத்தோ அல்லது சினிமா பாடல்களின் ராகத்தை கொண்டோ அவர்கள் பாடும் போது,கேட்பவர்கள் மனம் வசப்படும்,அதிலும் அவர்கள் குழுவாக பாடுவதும்,முதன்மையாக ஒருவர் பாட பின் அதையே ஒரு குழுவாகவும் பாட என பாரம்பரிய நாம் அதிகம் அறிந்திடாத விசயங்களை பாடல்களால் நம்மிடம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள்…

பாடல்களின் ராகத்திற்கேற்ப அவர்கள் கையால் தட்டப்படும் அந்த கொட்டுசத்தமும் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த சூஃபி இசையின் ஒரு பாகமாகவே இருக்கிறது.சூஃபி இசை என்பது ஆப்கானிஸ்தான்,பலுசிஸ்தான்,துருக்கி மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்ததாக குறிப்புகள் கிடைக்கின்றன

மெல்லிதாய் இழையோடும் ஹார்மோனிய இசையோடு தபேலாவும் அல்லது டோலக் என்ற இசைக்கருவி சேர்ந்து ஒரு ஆலாபனையோடு வருவதுதான் சூஃபி இசை,துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் டோலக்(பக்கீர் சாகிபு கொட்டு) வைத்துக்கொண்டு திக்ரு சொல்லும் முறை கூட சூஃபி இசையின் வெளிப்பாடாகவே இருக்கிறது….

முன்பெல்லாம் தொழுகைக்கான நேரத்தை அறிவுறுத்த பாங்க் சொல்வதற்கு முன் நகரா அடிக்கும் பழக்கம் இருந்தது,பெரிய டோலக்(கொட்டு) ஒன்று பள்ளிவாசல்களில் இருக்கும்,தொழுகைக்கான நேரம் வந்தவுடன் மோதினார் அந்த கொட்டை இரண்டு கம்பு கொண்டு அடிப்பார்,அதிலிருந்து எழும்பும் ஒலி தெருவின் கடைசிவரை கேட்கும்,அந்த சத்தம் கேட்டவுடன் தொழுகைக்கு நகரா அடிச்சாச்சு பாங்க் சொல்ல போறாங்க என்று அவர்களை தொழுகைக்கு செல்ல தயார்படுத்திக்கொள்வார்கள்.அந்த நகரா அடிப்பது என்பது கூட சுஃபி இசையின் வெளிப்பாடாகவே இருந்திருக்கிறது…

இன்னமும் சவுதி அரேபியாவில் பெருநாள் கொண்டாட்டங்களில், பாரம்பரிய இசையாக சுஃபி இசைதான் ஒலிக்கப்படுகிறது,அந்த இசையை மற்ற இசைக்கருவிகள் எதுவும் இல்லாமல் வெறும் டோலக் மற்றும் வைத்துக்கொண்டு பக்கீர் சாகிபுகளின் பாடலும்,அந்த குரலும் அதன் ராகத்திற்கு கேற்ப அடிக்கம் இசையும் எங்கு கேட்டாலும் ஒரு நிமிடம் நிற்காமல் நாம் தாண்டிச்செல்ல முடியாது,அப்படி ஒரு வசீகரம் அதற்கு உண்டு…

லயா புராஜக்ட்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு உலக இசை நிறுவனம் ஒன்று,சுனாமியால் பாதிக்கபட்ட ஆறு நாடுகளுக்கு சென்று வெவ்வேறு மதங்களின் பாரம்பரிய இசையை ஆய்வு செய்து அதை சேர்த்து ஒரு இசை ஆல்பமாக வெளியிட்டு அதை சுனாமியால் இறந்தவர்களுக்கு அர்பணித்தது,அதில் இந்தியாவின் பாரம்பரிய இசையில் பக்கீர் சாகிபுகளின் பாடலும் இடம் பெற்றது..

சஹர் நேரங்கில் பக்கீர் சாகிபுகளின் கொட்டு சத்தம் கேட்ததும் தான்,அதிகாலையில் சஹர் சாப்பிட்டிற்கான சமையலில் அம்மி அரைக்கும் சத்தமே கேட்கும்,நோன்பு காலங்களில் அதிகாலையில் இரண்டரை மணிக்கே சஹர் நேரத்திற்கான பாடலோடு தெருவெங்கும் பாடிச்சென்று நம்மை எழுப்பிவிடுவார்கள்,எதையும் எதிர்பார்க்க அந்த சேவையும் அவர்களிடம் உண்டு..

பராம்பரிய தமிழ் இசுலாமிய பாடல்களை இசையோடு நமக்கு அளித்த பக்கீர் சாகிபு போன்ற கலைஞர்களின் இன்று பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியே இருக்கிறார்கள்,அவர்கள் இன்னும் சரியாக அடையாளம் காணப்படாத கலைஞர்களாகவே இருக்கின்றனர் என்பது வருதத்துக்குரிய விசயமாகவே இருக்கிறது.லயா புராஜக்டைப்போல் யாரேனும் ஒரு சீரிய முயற்ச்சி எடுத்து அவர்களின் பாடல்களை ஒன்றுசேர்த்து முழுமைபடுத்தினால் நம் சந்ததியருக்கு மிகவும் பயன்படாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

(சுஃபி இசை பற்றி இன்னும் விரிவாக எழுதலாம்,ஆனால் ஹலால் – ஹராம் பற்றிய விவாதம் வரும் என்பதால் அதை தவிர்த்திருக்கிறேன்)
இப்படிக்கு
அபூபக்கர் சித்திக்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-