அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சென்னையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயக்கப்படும் மாற்றப்பட்டிருந்தாலும், விற்பனையில் பெரிய அளவில் தாக்கம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. சென்னையைப் போல் மற்ற மாவட்டங்களிலும் நிலைமை இதுவாகவே இருந்தால் நேரக் குறைப்பால் பலனில்லை என்பதே உண்மை.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற முதல் நாளில் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்று டாஸ்மாக் நேரம் குறைப்புக்கானது. ஆனால், டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கும் நேரத்தை குறைத்ததால் விற்பனையில் எவ்வித சரிவும் ஏற்படவில்லை என சொல்லும் அளவுக்கு இருக்கிறது கள ஆய்வின் முடிவு.


சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு அருகே ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை இருக்கிறது. அங்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) காலை 11.45 மணியளவில் 20 பேர் வரிசையில் காத்திருந்தனர். அக்கடையின் விற்பனை பிரதிநிதி, "இந்தக் கடையில் மது விற்பனையில் எவ்வித சரிவும் ஏற்படவில்லை. வழக்கம்போல் நாளொன்றுக்கு ரூ.4 லட்சத்துக்கு இங்கு மது விற்பனையாகிறது" என்றார்.

சென்னை சூளைமேட்டில் உள்ள மதுபானக் கடையின் மேலாளர் கூறும்போது, "டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை செய்யும் நேரத்தை குறைத்ததால் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை. சிலர் முதல் நாள் இரவே மொத்தமாக மதுபானங்களை வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் அவர்களே காலையில் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்" என்றார்.

இதேபோல் சென்னை தி.நகர், கோடம்பாக்கம், பூந்தமல்லி, கிண்டி, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை விறுவிறுப்பாகவே இருக்கிறது. குறிப்பிட்டுச் சொன்னால் சில இடங்களில் விற்பனை 10 முதல் 15% வரை அதிகரித்திருக்கிறது.

டாஸ்மாக் யூனியன் உறுப்பினர் ஒருவர் கூறும்போது, "பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும், பார்கள் முன்னதாகவே திறக்கப்பட்டு விடுகின்றன. பார்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது" என்றார்.

எழும்பூர் கோயம்பேட்டில் மட்டும் விற்பனை சரிவு

அதேவேளையில் சென்னை எழும்பூர், கோயம்பேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பகல் நேர விற்பனை சரிந்துள்ளது. இதற்குக் காரணம் அப்பகுதியில் இரவுப் பணியில் நிறைய கூலித் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் காலை 9.30 மணிக்கெல்லாம் தங்கள் வீடுகளுக்குச் சென்று விடுகின்றனர். இதனால் விற்பனை சரிந்துள்ளது.

இது குறித்து எழும்பூர் டாஸ்மாக் கடையின் விற்பனை பிரதிநிதி ஒருவர் கூறும்போது, "ரயில் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் காலையில் கடை திறந்தவுடன் மது வகைகளை வாங்க வருவர். ஆனால், இப்போது பகல் 12 மணிக்குத்தான் கடையைத் திறக்கிறோம். அதனால் அவர்கள் காத்திருப்பதில்லை. நேரக் குறைப்புக்குப் பின்னர் இங்கு விற்பனை ரூ.3.5 லட்சத்திலிருந்து 20% குறைந்துள்ளது" என்றார்.

அதேபோல் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையிலும் விற்பனை குறைந்திருப்பதாக டாஸ்மாக் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

500-ஐ இறுதி செய்யும் பணி:

இதற்கிடையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்களது மாவட்டங்களில் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகள் குறித்து பட்டியலை டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர். 1000 கடைகள் கொண்ட அந்த பரிந்துரைப் பட்டியலில் இருந்து 500 கடைகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 70 லட்சம் பேர் அதாவது 10% பேர் மது அருந்தும் பழக்கம் கொண்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்க புள்ளிவிவரம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-