அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் முத்துநகர் கிழக்கு பகுதி முதல் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சசிகலா ஒரு மருந்து கடையில் மருந்தாளுனராக உள்ளார். இவர்களது மகள் மஞ்சு என்கிற சப்னா (வயது 12), மகன் மகேஷ் (9). சப்னா தனியார் மெட்ரிக் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பள்ளியில் மகேஷ் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கிரகப்பிரவேசம்

நேற்று காலை சசிகலாவின் உறவினர் தங்கவேல் வீட்டு கிரகப்பிரவேச விழா கலெக்டர் அலுவலகச்சாலையில் உள்ள அபிராமபுரம் கிழக்கு பகுதியில் நடந்தது. அந்த விழாவில் சசிகலா தனது மகள், மகனுடன் கலந்து கொண்டார். சசிகலா தரைதளத்தில் உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். மகள் மஞ்சுவும், மகன் மகேசும் மொட்டைமாடியில் விழாவிற்கு வந்திருந்த சிறுவர்-சிறுமியருடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மஞ்சு மொட்டைமாடியில் இருந்து மேல்நிலை நீர்த்தொட்டி கட்டப்பட்டுள்ள பகுதிக்கு இரும்பால் ஆன ஏணியில் ஏறினாள்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது நீர்த்தொட்டி அருகே சென்றபோது வீட்டில் அழகுக்காக போடப்பட்டிருந்த சீரியல் விளக்குசரத்தில் மின்கசிவு ஏற்பட்டு மஞ்சுவை மின்சாரம் தாக்கியது. இதனால் அவள் கூச்சல் போட்டாள். அந்த சத்தத்தை கேட்டு ஓடிவந்த மகேஷ் மஞ்சுவை தொட்டபோது அவன் மீதும் மின்சாரம் தாக்கியது. இருப்பினும் அவன் சுதாரித்து கொண்டு ஓடிச்சென்று நடந்ததை தனது தாய் சசிகலாவிடம் கூறினான்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மின்சார இணைப்பை துண்டித்து மஞ்சுவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மஞ்சு பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மஞ்சுவின் உடல் முத்துநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது.

சோகம்

மின்விபத்தில் பலியான மஞ்சு படிப்பில் சிறந்தவர். பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று வந்துள்ளார். மஞ்சு பலியானதால், புதுமனை புகு விழாவில் ஏற்பட்ட மகிழ்ச்சி சிறிது நேரத்திற்குள்ளாக சிதைந்தது. மேலும் மஞ்சுவின் குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கினர். மஞ்சு பலியானது குறித்து, குவைத்தில் உள்ள அவளது தந்தைக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து பெரம்பலூர் வருகிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-