அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தோகா, ஜூன்.6-

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-கத்தார் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முதலீட்டாளர்களுடன் சந்திப்பு

பிரதமர் மோடி 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்டமாக ஆப்கானிஸ்தானில் இருந்து நேற்று முன்தினம் மாலை எண்ணெய் வளம் மிகுந்த வளைகுடா நாடான கத்தாருக்கு சென்றார். தலைநகர் தோகா நகர விமான நிலையத்தில் அவரை கத்தார் பிரதமர் அப்துல்லா பின் நாசர்பின் கலிபா அல்-தானி வரவேற்றார்.

அன்று இரவு தோகா அருகேயுள்ள மெஷெரிப் நகரில் தொழிலாளர்கள் மருத்துவ முகாமில் கத்தாரில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்பு அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

தனது 2-ம் நாள் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக நேற்று கத்தார் நாட்டின் தொழில் அதிபர்களையும், முதலீட்டாளர்களையும் வட்டமேஜை கூட்டத்தில் அவர் சந்தித்து பேசினார். இதில் அந்நாட்டின் பிரபலமான 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது மோடி பேசும்போது கூறியதாவது:-

வாய்ப்புகள்

தொழில் முதலீடு வாய்ப்புகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு இந்தியா அரியதொரு பூமியாகும். இந்த வாய்ப்பை நீங்கள் முன்னுரிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களை இங்கே அழைத்து இருக்கிறேன்.

இந்தியாவில் நீங்கள் முதலீடு செய்வதற்கு மிகவும் உகந்த துறைகளாக உணவு பொருட்கள் பதப்படுத்தல், ரெயில்வே, சூரியஒளி மின்சக்தி போன்றவை உள்ளன. கட்டமைப்பு, விரிவாக்கம், மேம்படுத்துதல், உற்பத்தி ஆகியவையும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான துறைகள் ஆகும்.

நீங்கள் அனைவரும் இந்தியாவின் வளத்தை உணர்ந்து இருப்பீர்கள். இந்தியாவில் தொழில் முதலீடு செய்வது தொடர்பாக நீங்கள் இங்கே சுட்டிக்காட்டிய குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும். இந்தியாவில் 80 கோடி இளைஞர்கள் உள்ளனர். இது எங்கள் நாட்டின் மிகப்பெரிய பலம்.

பாராட்டு

இப்போது, ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ ரெயில்கள், நகர்ப்புற கழிவு மேலாண்மை போன்ற திட்டங்களும் மக்களின் தரத்தை உயர்த்துவதற்காக முடுக்கி விடப்பட்டு இருக்கிறது. எனவே இத்துறைகளிலும் முதலீடுகள் செய்யலாம்.

இந்தியா-கத்தார் இடையே வர்த்தக உறவுகள் மேம்படுவதற்கு கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி மிகுந்த ஒத்துழைப்பு அளிப்பதற்கு பாராட்டுகள்.

இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக பிரதமர் மோடி, கத்தார் நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார துறை மந்திரி அகமது பின் ஜசிமை சந்தித்து பேசினார்.

மன்னருடன் சந்திப்பு

இதைத்தொடர்ந்து கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானியை மன்னரின் அரண்மனையில் நேற்று மாலை மோடி சந்தித்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறை வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஷேக் தமிமுக்கு 36-வது பிறந்த நாள் வாழ்த்தும் மோடி தெரிவித்தார். ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு மன்னர் ஷேக் தமிம் தனது பிறந்தநாளை கொண்டாடியபோதும், அவருக்கு மோடி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்து இருந்தது நினைவு கூரத்தக்கது.

கத்தார் மன்னருடனான பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும்படி மோடி கேட்டுக்கொண்டார்.

7 முக்கிய ஒப்பந்தங்கள்

பின்னர் இருநாடுகளுக்கும் இடையே 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

பிரதமர் மோடி, கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி ஆகியோர் முன்னிலையில் இந்தியா-கத்தார் நாடுகளின் உயர் அதிகாரிகள் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பதை தடுப்பது, கட்டமைப்பு துறைகளுக்கு கத்தாரில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பது, திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா மேம்பாடு, விளையாட்டு ஆகிய 7 துறைகளில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

சுவிட்சர்லாந்து சென்றார்

தனது கத்தார் பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்தகட்ட பயணமாக பிரதமர் மோடி, சுவிட்சர்லாந்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். நேற்று இரவு அவர் ஜெனீவா நகர் சென்றடைந்தார். இன்று (திங்கட்கிழமை) மோடி, சுவிஸ் அதிபர் ஜோகன்சினைடர்-அம்மானை சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம், அணுசக்தி நாடுகளின் சிறப்பு பட்டியலில் இந்தியா உறுப்பினர் ஆவது தொடர்பான பிரச்சினைகள் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2 தலைவர்களும் இருநாடுகள் இடையேயான உறவு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் பரஸ்பர ஆர்வத்துடன் விவாதிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் அளவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் மோடி, இரு தரப்பு வர்த்தக உறவு தொடர்பான கூட்டத்திலும் பங்கேற்கிறார். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-