அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இருபதாவது சர்வதேச புனித திருக்குர்ஆன் போட்டி ஆரம்பமானது.


துபாயில் இருபது ஆண்டுகளாக, புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது மறைந்த `ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்` அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.

இந்த சர்வதேச குர்ஆன் போட்டி, திங்கள் இரவு ஆரம்பமானது. இதில் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த எட்டுப் போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக இப்போட்டியை நடுவரில் ஒருவரான அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹசன் அப்துல்லாஹ் அல் அலி அவர்கள் திருக்குர்ஆனின் சில வசனங்களை ஓதித் தொடங்கி வைத்தார்.இப்போட்டியில் பங்குபெறுகின்ற அனைத்துப் போட்டியாளர்களும், “திருக்குர்ஆனை மனனம் செய்த ஒவ்வொருவரின் கனவும் இப்போட்டியில் பங்குபெறுவது குறித்துத்தான்” என்றனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த ஏமிதீன் பர்குதீனவ் தனது ஆறாம் வயதிலிருந்து குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கி இரண்டு வருடத்திலேயே அதாவது தமது எட்டாம் வயதிலேயே குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்தவர். தினமும் ஒன்றரைப் பக்கம் வாசித்து மனனம் செய்வாராம். உலகத்தில் நடக்கும் எல்லாக் குர்ஆன் போட்டிகளிலும் பங்குபெற்று நிறையப் பரிசுகளைப் பெற்றவர் இவர்.

இருப்பினும் துபாய் சர்வதேசப் போட்டியில் கலந்து கொள்வதை தமது லட்சியக் கனவு என்றார். குர்ஆனை மீண்டும் மீண்டும் தினமும் வாசித்து மீள்பார்வை செய்வது அவ்வளவு சுலபமான விஷயமில்லை என்றார். “உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமது மொழி அரபியாக இல்லாவிட்டாலும், அரபி மொழியில் இருக்கும் திருக்குர்ஆனை மனனம் செய்து இப்போட்டியில் கலந்து கொள்ள வந்திருப்பவர்களைக் கண்டு மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்றார்.

திங்கள் இரவில் பங்கேற்றவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்த எமிதீன் பர்குதீனவ், மாலத்தீவைச் சேர்ந்த லதீஃப் சுல்தான் முஹம்மது, கத்தாரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் அப்துல்லாஹ், சாட் நாட்டைச் சேர்ந்த அஹ்மத் முஹம்மத் ஸேன் காலி, டென்மார்க்கைச் சேர்ந்த இஸாம் எல் கல்தி, தஜிகிஸ்தானைச் சேர்ந்த நுமன்யூன் அப்துகாதிரவ், புருண்டி நாட்டைச் சேர்ந்த உவிமானா மற்றும் எதியோப்பியாவைச் சேர்ந்த அஹ்மது முஹம்மது மூஸா.

அதே போல் செவ்வாய் இரவு பங்கேற்றவர்கள் மொரோக்கோவைச் சேர்ந்த அயூப் சக்ரோவி, நைஜீரியாவைச் சேர்ந்த காசிம் ஸாரியா ருஃபாய், பிரித்தானிய ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த உத்மான் அகீல் லோன், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் ஹாத்ஜி உமர் சய்போடிங், சூடானைச் சேர்ந்த அப்தல்கரீம் அஹ்மது ஃபர்ஹான் அஹ்மத், நார்வே நாட்டைச் சேர்ந்த மஹமத் அப்திரஹ்மான் சாலெஹ் ஹஸன், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த லாயீக் ஹத்தாஸ் மற்றும் கசக்ஸ்தான் நாட்டைச் சேர்ந்த அஹ்மத் இமரோவ்.

ஒவ்வொரு நாளும் எட்டுப் போட்டியாளர்கள். புதன் கிழமை எகிப்து, அமெரிக்கா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, பாலஸ்தீன், மாலி, போஸ்னியா மற்றும் கொமொரோசு நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.

என்னதான் அவர்கள் பயிற்சி செய்து, பிரயத்தனம் செய்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தாலும் சிறு சிறு தவறுகளை நடுவர்கள் அறிவிக்கும் வண்ணமாக எச்சரிக்கை மணியைப் பலமுறை அடிக்க வேண்டியதாக இருந்தது.பங்கேற்பாளர்கள் திருக்குர்ஆன் ஓதுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பார்வையாளர்களைப் போட்டியாளர்களின் இனிமையான அழகான குரல் கட்டிப்போட்டது.

ஒவ்வொரு நாள் போட்டியின் முடிவிலும் குலுக்கல் முறையில் பார்வையாளர்களிலிருந்து ஒரு வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு இலவசமாக உம்ரா பயணம் மேற்கொள்ள வாய்ப்பு தரப்படுகிறது. இந்தப் பரிசை துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல்மக்தூம் அவர்களின் மனைவி மாண்புமிகு ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் அவர்களால் வழங்கப்படுகிறது.

துபாய் வர்த்தக மையத்தில் இப்போட்டி தினமும் இரவு 10.30க்கு ஆரம்பமாகிறது. இப்போட்டி நிகழ்விற்கான அனுமதி இலவசம்.

- ஜெஸிலா பானு, துபாய்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-