அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வேப்பந்தட்டை, ஜூன்.23-

வேப்பந்தட்டை அருகே ஒரே பனை மரத்தில் 200-க்கும் மேற்பட்ட தூக்கணாங்குருவி கூடுகள் தொங்குகின்றன. அவற்றை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

அழிந்து வரும் குருவி இனம்

முன்பெல்லாம் நகர்புறம், கிராமப்புறம் என்ற வேறுபாடு இன்றி அனைத்து பகுதிகளிலும் குருவிகளை சாதாரணமாக பார்க்க முடிந்தது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் குருவிகள் அதிகளவில் கூடுகள் கட்டி வசித்து வந்தன. காரணம், அங்கு குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவியது. வீடுகளில் உள்ள நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை தின்று விட்டு, வீட்டு சுவர்களில் உள்ள பொந்துகள், பரண்களில் கூடுகள் கட்டி குஞ்சு பொரித்து சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தன.

ஆனால் தற்போது குருவிகள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டன. கிராமங்களில் குருவிகளை பார்ப்பதே அரிதாக உள்ளது. இதேபோல் தென்னை, பனை உள்ளிட்ட மரங்களில் அழகாக கூடுகள் கட்டி வசிக்கும் தூக்கணாங்குருவிகளையும் இப்போது அவ்வளவாக பார்க்க முடிவது இல்லை. இப்படி குருவி இனம் அழிந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் செல்போன் கோபுரங்கள் முக்கியமானதாக கூறப்படுகிறது.

200-க்கும் மேற்பட்ட கூடுகள்

இப்படி குருவி இனம் அழிந்து வரும் சூழ்நிலையில் ஒரு பனை மரத்தில் ஏராளமான தூக்கணாங்குருவி கூடுகள் தொங்குவது நம்மை வியப்படைய செய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் பகுதியில் தான் அந்த பனை மரம் உள்ளது. ஒரு தனியார் நெல் விதைப்பண்ணை அருகே உள்ள அந்த பனை மரத்தில் 200-க்கும் மேற்பட்ட தூக்கணாங்குருவி கூடுகள் தொங்குகின்றன.

பனை ஓலைகள் முழுவதிலும் தூக்கணாங்குருவி கூடுகளாக தொங்குவதையும், தூக்கணாங்குருவிகள் பறந்து திரிவதையும் பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கிறது. ஒரே மரத்தில் இவ்வளவு தூக்கணாங்குருவி கூடுகள் தொங்குவதை வெங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். குறிப்பாக, சிறுவர்கள் அந்த கூடுகளையும், தூக்கணாங்குருவிகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.

நடவடிக்கை

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், முன்பெல்லாம் கிராமப்புறங்களில் குருவி இனங்களை சாதாரணமாக பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் குருவிகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்த பனைமரத்தில் 200-க்கும் மேற்பட்ட தூக்கணாங்குருவி கூடுகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு உள்பட பல்வேறு காரணங்களால் தான் குருவி இனம் அழிந்து வருவதாக கூறப்படுகிறது. குருவி இனம் அழிவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் வருங்கால சந்ததியினர் பார்த்து மகிழ குருவி இனம் இருக்கும். இல்லாவிட்டால் அவர்கள் இப்படியொரு பறவை இனம் இருந்ததை ஏடுகள் மூலம் தான் அறிய முடியும் என்று தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-