அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூன்.9-
அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உழைத்த அரசுபள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
100 சதவீதம் தேர்ச்சி
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகள் பாடவாரியாக 100 சதவீதம் தேர்ச்சி பெற உழைத்த அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரிய- ஆசிரியைகளுக்கு கலெக்டர் நந்தகுமார் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
2015 -16-ம் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.73 சதவீதம் தேர்ச்சியும், அரசு பள்ளிகள் அளவிலான தேர்ச்சி விதத்தில் 93.62 சதவீதம் தேர்ச்சியும் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தை பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும். மேலும் இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்று மாவட்டம் முதலிடத்தை பெற, அனைத்து ஆசிரியர்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.
தேர்ச்சி விகிதம் உயரும்
மேலும் மாணவ-மாணவிகளை கல்வியின் மீது ஈடுபாடு உள்ளவர்களாக உருவாக்கும் வகையில் ஆசிரியர்களின் கற்றுக்கொடுத்தல் வழிமுறை அமைய வேண்டும். இதன் மூலம் மாணவ- மாணவிகளுக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வமும், ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தின் மீது தனி கவனமும் ஏற்படும். இதனால் மாணவ-மாணவிகள் பாடத்தின் மீது முழு கவனம் செலுத்தி படிப்பார்கள். அப்போதுதான் பெரம்பலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதமும் உயரும். இவ்வாறு அவர் பேசினார்.
பாராட்டு சான்றிதழ்
இந்நிகழ்ச்சியில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட 21 பாடங்களில், தங்களின் கீழ் பயின்ற மாணவ-மாணவிகளை 100 சதவீதம் தேர்ச்சிபெற வைத்த அரசு பள்ளிகளை சேர்ந்த 193 ஆசிரிய- ஆசிரியைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் நந்தகுமார் வழங்கி வாழ்த்தினார்.
இதில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரேம்குமார் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-