அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கோடை விடுமுறை துவங்கியதையடுத்து, பிரவுசிங் சென்டர்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் குவிந்து வருகின்றனர். இவர்களின் தவறான பாதைக்கு வழிகாட்டியாக சில சென்டர்கள் லாப நோக்கில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்போது கோடை விடுமுறையில் உள்ளனர். கோடை விடுமுறை கழிக்க இப்போதே திட்டங்கள் தீட்ட துவங்கி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விடுமுறைக்கு வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வது, சுற்றுலா செல்வது போன்றவையே நிகழ்ந்தன. ஆனால் தற்போதுள்ள விலைவாசி, கால சூழ்நிலை போன்ற காரணங்களினால் சுற்றுலா செல்வதும், உறவினர் வீடுகளுக்கு செல்வதும் மறைந்து விட்ட சம்பிரதாயங்களாகி விட்டன.
மாறாக விடுமுறை காலங்களில் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கான பாடங்களுக்கு டியூசன் செல்வது, மியூசிக், யோகா, கராத்தே, நீச்சல் உள்ளிட்ட தனித்திறன்களை வளர்த்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

இன்னும் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்காக கணிணி பயிற்சிக்கும் அனுப்பி வைத்து விடுகின்றனர். இதனால் மாணவர்கள் தங்களுக்கான தொடர்புகளை செல்போன்களை தாண்டி இ.மெயில், பேஸ்புக் சாட்டிங் போன்றவற்றின் மூலம் ஏற்படுத்தி கொண்டனர். தற்போது இந்த வசதிகள் ஸ்மார்ட் ேபான்களிலே வந்து விட்டாலும் மாணவர்கள் தனிமைக்காகபிரவுசிங் சென்டர்களை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி தனியாக பிரவுசிங் செய்யும் மாணவர்கள் தவறான வெப்சைட்களுக்கு சென்று ஆபாச படங்களை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது. கல்லூரி மாணவர்களிடம் பரவி வந்த இந்நிகழ்வு தற்போது பள்ளி மாணவர்களிடமும் அதிகளவு பரவி வருகிறது என்பது தான் நம்மை அதிர்ச்சியளிக்க வைக்கிறது.

இதற்கு வசதியாக, சில பிரவுசிங் சென்டர்களில் ஒவ்வொரு கணிப்பொறியையும் சுற்றி மறைப்புகள் ஏற்படுத்தி உள்ளனர். இந்த வசதி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் சந்திக்க முடியாத காதல் ஜோடிகள் சந்தித்து பேசுவதற்கும் உதவுகிறது. இதனால் இந்த பிரவுசிங் சென்டர்கள் காதல்ஜோடிகள் சந்திக்கும் பூங்காவாக தற்போது மாறி வருகிறது. இதுகுறித்து பழநியைச் சேர்ந்த பிரவுசிங் சென்டர் உரிமையாளர் ரவிக்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது,
பிரவுசிங் சென்டருக்கு வரும் மாணவர்கள் இ.மெயில் அனுப்ப வேண்டும். பாடம் தொடர்பான ஆவணங்கள் டவுன்லோடு செய்ய வேண்டும் என்றே கூறுகின்றனர். இதுபோன்ற செயல்கள் மட்டுமே நடைபெறுகிறது என்கிறபோது கணிப்பொறிகளுக்கிடையே மறைப்பு ஏற்படுத்த அவசியம் இல்லை. ஆனால் சில பிரவுசிங் சென்டர்கள் லாப நோக்கில் இதுபோன்ற தவறுகளை தெரிந்தே அனுமதிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் விளையாட வேண்டும் என்று வருகின்றனர்.

அவர்கள் பயன்படுத்தும் கணிப்பொறியில் விளையாட்டு தொடர்பானவை மட்டுமே செயல்படும் வகையில் மாற்றி வைக்கலாம். பிரவுசிங் சென்டர்களில் தடுப்பு மறைப்புகளை அகற்ற வேண்டும். ஆனால் வியாபாரம் பாதிக்கும் என்பதால் யாரும் செய்வதில்லை. எனவே, மாணவர்களின் எதிர்கால நலன்கருதியும் நாட்டின் பண்பாட்டை கருதியும் அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட அனுமதிக்கும் பிரவுசிங் சென்டர்களின் உரிமம் ரத்து போன்ற கடும் கட்டுப்பாடுகளை விதித்தால் தான் ஒழுக்கம் பிறக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-