அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள்-தொண்டர்கள் புடைசூழ பிரசாரம் செய்து வரும் நிலையில், தனி ஒருவராக பிரசாரம் செய்து வருகிறார் பெரம்பலூர் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும், பொறியியல் பட்டதாரியுமான நெ. அருண்குமார்.
கையில் துண்டுப் பிரசுரங்களுடன் குடியிருப்பு மற்றும் வயல் பகுதிகளில் பணிபுரியும் மக்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள தாழைநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் நெ. அருண்குமார். இந்த கிராமத்தின் முதல் பொறியியல் பட்டதாரியான இவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தொகுதிக்குள்பட்ட ஒவ்வொரு கிராமத்துக்கும் தனியாக நடந்து சென்று, அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள், முதியோர், ஆதரவற்றோர் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து, தமது கட்சியின் கொள்கைகள், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை, ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு மாத சம்பளம், சுத்தமான குடிநீர், பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வார்டு வாரியாக பகுதிச்செயலர் நியமனம், சுயதொழில் தொடங்க நடவடிக்கை, ஒரு கோடி மரக்கன்றுகள் நடுதல், இலவசங்கள் இல்லை என்று பிரசாரம் மேற்கொள்ளும் இவரது செயல்பாடு வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பல லட்சங்கள் செலவழித்து, கொடி, தோரணங்கள், மேள, தாளங்களுடன் தொண்டர்கள் புடை சூழ, வாகனங்களில் சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் மத்தியில், விவசாயி, கூலித்தொழிலாளி, ஆடு, மாடு மேய்ப்பவர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருண்குமாரின் பிரசாரம் வாக்காளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-